தைப்பூச விழாவை முன்னிட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சக்தி மாலை இருமுடி விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி செலுத்தி வருகின்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் ஆண்டுதோறும் தைப்பூச விழாவை முன்னிட்டு சக்திமாலை இருமுடி விழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழாவானது டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இருமுடி விழாவிற்காக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ரயில், பேருந்து, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் இருமுடி அணிந்து கொண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு சக்திமாலை அணிந்து சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தி வருகின்றனர்.
இந்த இருமுடி விழாவானது ஜனவரி மாதம் 24ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. ஜனவரி 25ஆம் தேதி அன்று ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி மைதானத்தில் தைப்பூச ஜோதி ஏற்றப்பட உள்ளது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இருமுடி விழாவிற்காக தெற்கு இரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. பல விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து இருமுடி செலுத்தினர்.மேலும் இருமுடி செலுத்திய பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கடந்த 42 தினங்களாக நடைபெற்ற இருமுடி விழாவில் இதுவரை 22 லட்சம் பக்தர்கள் இதுவரை இருமுடி செலுத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து வருகின்ற 24 ஆம் தேதி வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி செலுத்த உள்ளனர். 25ம் தேதி தைப்பூச ஜோதி ஏற்றப்படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார், வழக்கறிஞர் அ.அகத்தியன் ஆகியோர் மேற்பார்வையில் ஆன்மிக இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.


