நெல்லை ம.தி.தா.இந்துக்கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் இரா.இலக்குவன், நாகம்பட்டி மனோ கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சேதுராமன், இம்மானுவேல் ஆகியோர் 400 ஆண்டுகள் பழமையான இந்நடுகல்லை கண்டுபிடித்தனர். இந்நடுகல் ஊர் நடுவில் ராமர் கோயிலின் முன்பாக உள்ளது.
இது குறித்து பேராசிரியர் இலக்குவன் கூறியது:
இந்நடுகல்லில் ஒரு வீரன் கையில் வேலுடனும் அவனது மனைவியும் அமர்ந்த நிலையில் உள்ளனர். வீரன் கொண்டையிட்டு காது வளர்த்து மார்பில் ஆரத்துடன் காணப்படுகின்றார். வீரனின் கையில் இருக்கின்ற வேல் பெரிதாகவும் வேலைப்பாடுகளுடனும் உள்ளது. அவனது அருகில் அமர்ந்திருக்கும் அவனது மனைவி சிகையலங்காரத்துடனும் மேகலை அணிந்தும் காணப்படுகிறாள்.சிற்பத்தில் பெண்ணின் மேல் நோக்கி உள்ள வலது கை உடைந்துள்ளது அக்கை அபயஹஸ்த முறையில் இருந்தால் இதை சதிக்கல்லாகவும் கருத வாய்ப்புள்ளது. பொதுவாக சதிக்கல்லில் இருவர் வலது கைகளும் ஆசி வழங்குவது போல உயர்திருக்கும். இங்கு ஆணின் கையில் வேல் இருப்பதால் இதை நடுகல்லாக கருதலாம். . இந்நடுகல் பராமரிப்பு இல்லாமல் குப்பை கூளத்துடன் காணப்படுகிறது. இதன் பெரும்பகுதி மண்ணுள் புதைந்துள்ளது. மாவட்டத் தொல்லியல் துறை இந்நடுகல்லை ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும் என்று கூறினார். இவர்களுடன் ஆய்வு மாணவர்கள் சின்னதுரை, கலையரசன் ஆகியோர் இருந்தனர்


