முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் ஆங்கில பெண் ஒருவரையும் சந்திக்கிறான்.
இனி.
62. இரண்டாம் உலக போரில் மாட்டிக்கொண்ட ராஜ துரை குடும்பம்
அன்று இரவு அகஸ்தீஸ்வரன் சார் வந்தார்.
“என்னப்பா ரத்னம் நல்லா உறக்குகிறானா? பாத்திட்டு வாரேன்” என உள்ளே சென்று பார்த்தார். அங்கே அவர் தூங்கி கொண்டிருந்தார்.
அதன் பின் வெளியே வந்தார்.
அதற்குள் ரத்னம் அய்யாவுக்கு இரவு சாப்பிட இட்லி, பால் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றான். உரிமையோடு அவரை எழுப்பினான். உணவை கொடுத்து அவரை சிறு நீர் கழிக்க வைத்து, விட்டு, மாத்திரை கொடுத்து படுக்க வைத்தான்.
“ஐயா வெளியே தான் இருக்கேன். எதுனாலும் கூப்பிடுங்க. குறிப்பா சிறுநீர் கழிக்கணுமுன்னா கூப்பிடுங்க ஓடியே வந்திருதேன்”. என கூறிவிட்டு, அவரை படுக்க வைத்து போர்வையை முடினான்.
அவனை பார்க்கும் போது இவருக்கு சந்தோசமாக இருந்தது. ஆனாலும் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இப்படி நமக்கு சேவகம் செய்கிறானே. ஒரு வேளை தனக்கு ஒரு ஆண் பிள்ளை இருந்து இருந்தால் இப்படித்தான் சேவகம் செய்து இருப்பானோ என எண்ணத்தோன்றியது. ஆனாலும் அவர் வெளியே எதுவும் சொல்லவில்லை.
ஏ.சி காத்து குளிராக இருந்தது.
நர்ஸ் இடம் சென்று, “கொஞ்சம் ஏ.சியை குறைக்க முடியுமா?” என கேட்டான்.
“உங்கள் மாமாவுக்காக எல்லாம் குறைக்க முடியாது” என நமட்டு சிரிப்பு சிரித்தாள் அந்த நர்ஸ்.
“அட பாவமே எங்கள் உறவை மாமன் மருமகன் உறவு என்றே தீர்மானித்து விட்டாள் நர்ஸ்”. அதுவும் அவன் மனதுக்கு இதமாகத்தான் இருந்தது.
சரி அவள் வாக்கு பொன்னாகட்டும்
வெளியே வந்தான்.
மீதி இருந்த இரண்டு புரோட்டா ஆம்லெட் பார்சலை பிரித்தான். ஒன்றை அகஸ்தீஸ்வரன் சாரிடமும், மற்றொன்றை தானும் வைத்துக்கொண்டான்.
இருவரும் சாப்பிட்டார்கள். அதன் பின் அகஸ்தீஸ்வரன் பேச ஆரம்பித்தார்.
“ஏடே உங்க தாத்தா ராஜத்துரை சந்தித்தாரே அந்த வெள்ளைக்கார பெண். அவள் இங்கிலீஸ் காரி இல்லை.”
“பின்னே”
“அவள் இங்கிலிஷ் காரி மாதிரியே இருந்த ஒரு பச்சை தமிழச்சி”
“என்ன தாத்தா சொல்லுதீய”
“ எங்க தாத்தா கதையை கேட்கப்போனா பல வரலாறு நம்ம முன்னால தோணுதே”
“ஆமாம் அவர் வரலாறு என்ன சாதரண வரலாறா? அவர் இன்டர் நேஷனல் ஆளு” சார் சிரித்துக்கொண்டே சொன்னார். எனக்கு அவர் வரலாற்றை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறதே. அதே என் வாழ்வில் பெரும் பாக்கியம்” என்றார்.
வரலாற்றை கேட்க தயாரானன் சந்திரன். “இந்த இங்கீலிஷ் காரி மாதிரியே இருக்கும் அந்த தமிழச்சி வரலாறுதான் என்ன?”
“சொல்றேன் கேளு”.
அவர் 19 ஆம் நூற்றாண்டின் முன்நோக்கி செல்ல ஆயத்தமானார். அங்கே மிகப்பெரிய வரலாறு ஒன்று ஒளிந்து கிடந்தது.
அந்த வரலாறு அகஸ்தீஸ்வரன் வாத்தியார் சொல்ல சொல்ல நம்ம கண் முன் விரிந்தது.
“வியாபாரப் போர்வையில் இந்நாட்டுக்கு வந்தவர்கள் ஆங்கிலேயர்கள். இந்திய மன்னரிடம் தங்குமிடம் வேண்டும் என தலை வணங்கி கேட்டவர்கள். அவர்களின் சூழ்ச்சியினால் இடத்தைப் பெரிதாக்கி, இங்கு உள்ள மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி, அவர்களை ஏமாற்றி, உதவியாளராக்கினார்கள். பிற்காலத்தில் அவர்களையே கைக்கூலிகளாக்கி, கடைசியில் அடிமைகள் ஆக்கியதோடு மட்டுமல்லாமல் பாரதம் முழுவதையும் கைப்பற்றினர், வெள்ளையர்கள். அவர்களது சூழ்ச்சியை உணர்ந்து எதிர்ப்புகளால் கைகோர்ந்த தேசபக்தர்கள் பலர். அவர்களுள், பாஞ்சாலங்குறிச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, வெள்ளையரையும் அவர் உதவியால் நாட்டைப் பாழாக்கிய நவாப்பையும் எதிர்த்து நின்ற வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன்.
கட்டபொம்மன் 18-&ம் நூற்றண்டிறுதியில் சுதந்திரக் கொடியை தூக்கினான். அவனுக்கு உறுதுணையாய் நின்று, ஊக்கமளித்து, அவனைக் காத்து நின்றவன், அவனுடைய தம்பி ஊமைத்துரை. வாய்பேச இயலாத காரணத்தால் வந்த பெயர்தான் ஊமையன் என்ற ஊமைத்துரை. அவனுடைய இயற்பெயர், குமாரசுவாமி. கட்டபொம்மனை கயத்தாற்றுக்கு கொண்டு சென்று தூக்கு மேடையில் ஏற்றினார்கள். இதனால் வெள்ளக்காரர்கள் மீது ஊமைத்துரைக்கு கோபம் அதிகமானது. பாளையங்கோட்டை சிறையில் ஊமைத்துரை அடைக்கப்பட்டிருந்தான்.
ஊமைத்துரைப் படையின் பாஷைகள் எல்லாம் சைகைகளாலும், குரலொலியை எழுப்பியும் தான் நடைபெறும். இந்தச் சமிக்ஞைகளை வைத்து ஊமைத்துரை, பாஞ்சாலங்குறிச்சி, சிவகங்கை வீரர்கள் பலரைக், புல்லுக்கட்டு சுமப்பவர்களாகவும், ஆண்டிப் பண்டாரங்களாகவும் ஜெயிலுக்கு வரவழைத்திருந்தான். பலர் சிறையில் வேலை செய்பவர்களாகயும் பணியாற்றினர், சிறையில் பாவைக்கூத் தொன்றை நடத்தினர். சிறைக் காவலருக்கு நிறைய மதுபானம் வாங்கிக்கொடுத்து, அவர்களிடமிருந்த சாவியைப் பறித்தனர். அதன் பின் சிறைக் கதவைத் திறந்தனர். ஊமைத்துரையின் விலங்குகளை உடைத்தனர். காவலர்களை கட்டிப்போட்டனர். ஊமைத்துரையோடு வெளியேறினர். அவர்கள் பல மைல்கள் கடந்த பின் காவலர்கள் குரல் எழுப்பினர். அதன் பின் குரல் எழுப்பி என்ன பயன். கண்டு எட்டாத தூரத்துக்கு ஊமைத்துரை சென்று மறைந்து விட்டான்.
மெகாலே பாஞ்சாலங்குறிச்சியெங்கும் தேடினான். கண்டவர்களையல்லாம் ஊமைத்துரை என்று நினைத்து அவர்களை அடித்து உதைத்தான். முடிவில் அவன் இல்லை என கண்டு பிடித்து ஏமாந்தான்.
ஊமைத்துரை தலைமையில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை பழுது பார்க்கப்பட்டது. நாகலாபுரத்தில் கஜானா கொள்ளையிடப் பட்டது. எட்டயபுரத்தில், கம்பெனியாருக்கு சொந்தமான இடங்கள் கொளுத்தப்பட்டன. நகர் சூறையாடப்பட்டது.
பகைவர் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டு, ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில், மீண்டும் ஒருபலமான கோட்டையை எழுப்பினான். கும்பெனியின் சேனை பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி நகர்ந்தது. வெள்ளையர்கள் அனற்குண்டுகளை வீசினர். ஆனால் நல்ல மழை பெய்து சேறாகி இருந்த காரணத்தினால் குண்டுகள் நனைந்து வெடிக்கவில்லை. இந்த சமயத்தினை பயன்படுத்தி ஊமைத்துரையின் படை வீரர்கள் வாளுக்கும் வேலுக்கும் வெள்ளையர்கள் இறையாகினர். ஆயுதங்களை விட்டு விட்டு ஓடி ஒளிந்துகொண்டனர்.
பாஞ்சலங்குறிச்சியில் போரில் இறந்து போன ஆங்கில வீரர்களுடைய கல்லறை இவ்வூரிலிருந்து 3 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதில் 45 வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். 1801 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதியில் இறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்ட கல்லறையும் இங்குள்ளன. இவற்றில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் இச்செய்திகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
ஊமைத்துரை வெள்ளையர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, விறகு வெட்டியாக, கூலியாக, ஒட்டனாக, குறவனாக, குடுகுடுப்பை காரனாக, பண்டாரமாக பல வேடங்களில் மறைந்து வாழ்ந்தான். எங்கு சென்றாலும் அவன் எதிரி ஆங்கியேலர்களை எதிர்த்து விரட்ட மக்களை தூண்டி வந்தான். அவனது ஒற்றர்கள், முடி திருத்துவோராக, வண்ணாராக, குமாஸ்தாக்களாக, கூலியாட்களாக, சமையற்காரர்களாகப் பணிசெய்து தங்கள் பணியை ஆற்றி வந்தனர். எட்டப்பனின் ஒற்றன் ஒருவன், புரோகிதர் வேடம்பூண்டு, ஊமைத்துரைக்கு சோதிடம் சொல்பவனாக வந்தான். அவனை அடையாளம் கண்டு தண்டனை கொடுத்தான் .
மேஜர் மேகாலே காப்டன் குவிட்டனுடன் பாஞ்சாலக்குறிச்சியைத் தாக் கினான். ஆனால் ஆயுதங்களைப் பறிகொடுத்தது தான் மிச்சம்; காலின்ஸ் என்ற தலைவனை வெள்ளையத் தேவன் வெட்டி கருப்பண்ண சாமிக்குப் பலி கோடுத்தான். கலேக்டர் லூஷிங்டன், வெள்ளையத்தேவன் மாமனுக்கு லஞ்சம் கோடுத்து, வெள்ளையத் தேவனைப் பிடித்துச் சித்தரவதை செய்தான். கயத்தாறில் கும்பெனிப் படை குவிந்தது. பின், மெகாலே தலைமையில் , பசுவந்தனை வந்து சேர்ந்தது. ஊமைத்துரை ஒரு தந்திரம் செய்து, கும்பெனிப் படையை போக்கு காட்டி சேற்றில் இறங்க வைத்தார். இதனால் பெரும் படையை அழித்தான். அதன் பின் மேகாலே ஓட்டம் பிடித்தான்.
அதன் பின் மீண்டும் மெகாலே பெரும்படையுடன் பாஞ்சாலங்குறிச்சியைத் தாங்கினார். கோட்டை இடிந்தது. உள்ளே சுரங்கங்களில் இருந்து வீரர் வெளிப்பட்டுக் கும்பெனிப் படையை அழித்தனர். ஆனால் கும்பெனிப் படை முன் நிற்கமுடியாது துவட்டனர். ஊமைத்துரையை தேடினர்; அவன் அகப்படவே இல்லை. அவன் கீழே கிடந்த பிணங்களோடு தானும் கிடந் தான்.
தன் மகனைத் தேடிவந்த ஒருவீரத்தாய் காயமுற்ற தன் மகனை கண்டு அவனுக்கு உயிர் இருக்க கண்டாள். அவனை காப்பாய் முயற்சித்த போது, “அம்மா, நான் பிழைக்கமாட் டேன். இதோ அருகில் கிடக்கிறாரே சாமியார், அவரைக் காப்பாற்று” எனக்கூறி ஊமைத்துரையை காட்டி விட்டு இறந்து விடுகிறான். அந்த பெண் ஊமைத்துரையை ஒரு கட்டிலில் கிடத்தி, தலையொடுகளால் மூடி வைத்தாள். வீட்டின்முன் வேப்பிலையை நிறையச் சொருகியும் வைத்தாள். வெள்ளக்காரச் சிப்பாய்களுடன் ஊமைத்துரையை தேடிவந்தவர்கள் அந்த வீட்டுக்கு முன்னாள் வந்து நின்றனர். அவர்கள் எட்டிவரும்போதே, இப் பெண்மனி, கண்ணீரும் கம்பலையுமாய், “ஐயோ,போய்விட்டானே! ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வளர்ந்த என் மகனை எமன் கொண்டுபோய் விட்டானே” என்று ஒப்பாரி வைத்தாள்.
துரை அருகில் வந்தான். எட்டிப் பார்த்தான். கட்டிலில் ஒரு உருவம் துணியால் மூடப்பட்டிருந்தது. வேப்பிலை மேலே கொத்தாக வைத்திருந்தது. பார்த்தான் துரை. உடல் வியர்த்தது. “ஐயோ! அம்மை! அம்மை! ஓடு! டேஞ்சர் ஓடு” என்று படைகளுடன் விரைந்து சென்று விட்டான்.
இப்படி வெள்ளைக்காரர்களை ஓட ஓட விரட்டினான் ஊமைத்துரை. வீரபாண்டிய கட்டபொம்மனை விட இவன் பெரிய வீரன். இவன் எதிரே எந்த வெள்ளக்காரன் கிடைத்தாலும் அவனை கொல்லாமல் விடமாட்டான்.
ஒரு சமயம் ஆங்கிலேய ஒற்றன் ஒருவன் இவனை கண்டு பிடித்து விட்டான். இருவரும் சண்டை ஏற்பட்டது. வாள்சண்டையில் தாக்கு பிடிக்க முடியாத அந்த வெள்ளையன் அங்கிருந்து ஓடினான். அவன் மீது அம்பு ஏய்தான் ஊமையன்.
ஆனால் அந்த அம்மை நெஞ்சில் பிடித்துக்கொண்டே தப்பித்து ஓடினான் அந்த வெள்ளைக்காரன்.
ஊமைத்துரையிடம் அவன் மாட்ட வில்லை. அருகில் உள்ள பெரிய கண்மாயில் விழுந்தான். கண்மாயில் விழுந்தவன் இனி எங்கே உயிர் பிழைக்கப்போகிறான் என ஊமையனும் விட்டு விட்டான். ஆனால் அவனோ மார்பில் பாய்ந்த அம்போடு அருகில் உள்ள வயற்காட்டுக்குள் ஓடினான். அதன் பின் அந்த அத்தாரக்காட்டுக்குள் இருந்த குடில் ஒன்றுக்குள் சென்று அங்கிருந்த கட்டிலில் படுத்துக் கொண்டான்.
அந்த குடிசலில் வாழ்ந்து வந்தவள் விதவை பெண். அவள் பெயர் முருகம்மாள்.
அவள் கழனி வேலையை முடித்து விட்டு தான் தங்கியிருக்கும் குடிசலுக்குள் வந்தாள். இவனை பார்த்தவுடன் அதிர்ந்தாள். அவனிடம் என்ன ஏது என்று வினவினாள். இவள் பேசுவது அவனுக்கு புரியவில்லை. அவன் சொல்வதும் இவளுக்கு புரியவில்லை. ஆனாலும் அவன் வலியால் துடித்தான்.
நெஞ்சில் அம்புடன் கதறும் அவனை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவன் எப்படியும் இவள் ஊமையனிடம் பிடித்துக்கொடுத்து விடுவாள் என எண்ணி, கையெடுத்து கும்பிட்டான். அவனை பார்க்க இவளுக்கு பாவமாக இருந்தது. அந்த காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ஆண் பாவம் பார்த்தால் கடன் காரன் ஆகி விடுவான். பெண் பாவம் பார்த்தால் பிள்ளைதாச்சி ஆகி விடுவாள் என்று. ஆனால் முதலில் அவள் அப்படி நினைக்கவில்லை. மாறாக அவனுக்கு உதவி செய்ய முடிவெடுத்தால்.
எனவே அவன் நெஞ்சில் பாய்ந்த அந்த ஈட்டியை மெதுவாக பிடிங்கினாள். வலியால் துடித்தான் வெள்ளையன். அதன் பின் அவனுடைய காயத்துக்கு மூலிகை மருத்துவம் செய்தாள்.
தினமும் மூன்று வேளை மூலிகை சாரை விட்டு புண்ணை ஆற்றினாள். சுமார் 6 மாத காலமாக இருக்கும் . அந்த குடிசையிலேயே அந்த ஆங்கிலேயன் தங்கினான். அவனுக்கு அத்தனை பணிவிடையையும் செய்தாள் அந்த பெண்.
தினமும் வேலைக்கு செல்வது. அதன் பின் கிடைக்கும் காசை கொண்டு வந்து இவனுக்கு சேவகம் செய்வது. அவனுக்கு காலை கடன் உள்பட அனைத்தையும் செய்ய உதவுவது. அதே வேளையில் இவனை குடிசையை விட்டு வெளியேவே தெரியாமலேயே அனைத்து உதவியும் செய்து கொண்டிருந்தாள்.
இவள் வீடு தோட்டத்தில் ஒதுக்கு புறத்தில் இருந்தது. இளவயதில் விதவையாக இருந்த இவளுக்கு சொந்தம் என்று பெரிதாக யாருமில்லை. ஆங்கிலேயன் பேசும் ஆங்கிலம் புரியவில்லை. ஆனால் அவனுக்கு சைகையால் அனைத்து உதவிகளையும் செய்தாள்.
காலங்கள் கடந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக தேர்ச்சி அடைந்தான். அதன் பின் குணமடைந்தான்.
இருவருக்கும் இளவயது. முருகம்மாள், அவனைதொட்டு பணிவிடை செய்தாள். அவனுக்கு ஆடையை கூட மாற்றி, வேறு ஆடை மாற்றி விட்டாள். அதோடு மட்டுமல்லாமல் மருந்து வைக்கும் போது அவளின் கை அவன் மீது பட்டது. முதலில் உதவியாகத்தான் தெரிந்தது. ஆனால் நாள் ஆக ஆக இவருவருக்குள் ஒரு பிடிப்பு வந்தது. ஆனால் அதைபற்றி விரிவாக இருவருக்கும் புரிதல் இல்லை.
அவள் ஒரு பெண். அவனோ ஒரு ஆண். இந்த உலகில் இவர்கள் இருவர் மொழி மட்டும் தானே வித்தியாசம். நிறம் வித்தியாசம். ஆனால் இனம் வித்தியாசமில்லையே.
ஒரு நாள் ஆங்கிலேயன் அவளை அழைத்தான்.
அருகில அமரச்சொன்னான்.
அவளும் அமர்ந்தாள்.
தனக்கு உதவி செய்த வகைக்கு அவன் கையை எடுத்து கண்ணில் ஒத்தினான். அதன் பிறகு முத்தம் கொடுத்தான்.
இவளால் தடுக்க முடியவில்லை. ஆனாலும் இவனை அவள் மருத்து போட்டது ஆதரித்தது எல்லாமே சேவை மனப்பான்மைத்தான்.
இவளுக்கு விடுதலை போராட்டம். இவன் எதிரி என எல்லாம் தெரியாது. ஊமைத்துரை வெட்டி கொல்ல முயற்சி செய்த போது தப்பித்து வந்தவன் என்பது மட்டுமே தெரியும். அதனால் எதிரி என நினைக்கவில்லை.
ஆனால் அவன் கையில் முத்தமிட்டது இவளது உடலை ஒரு உலுக்கு உலுக்கியது.
யோசனை செய்தாள்.
இதுவரை அவனிடம் எதுவும் எதிர்பார்க்க வில்லை. சிறு வயதில் தனது கணவனை இழந்தாள். இதுவரை அவள் யாரையும் கண்டு காமம் கொண்டது இல்லை. ஆனால் இன்று எதுவுவோ தெரியவில்லை, தனது உடலில் மின்சாரம் பாய்ந்தது போலவே இருந்தது.
அன்று அவன் கட்டிலில் படுத்துகிடக்கிறான். இவள் அருகில் தரையில் பாய் விரித்து படுத்துக்கிடக்கிறாள். ஆனால் இன்று என்னவோ அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. இதுவரை அவனுக்கு தான் எல்லாம் கொடுத்தாள். உணவு, மருந்து, உடை எல்லாமே அவளின் உழைப்புத்தான். ஆனால் அதற்கெல்லாம் ஒரே ஒரு கடனாக அவன்கொடுத்த முத்தம் இவளை தூங்க விடாமல் ஆட்டியது.
கணவனை இழந்தவள், என்றும் தன்னை இழந்தவள் அல்ல. யாரையும் கண்டு தனது உணர்ச்சிகளை பங்கிட்டவளும் இல்லை. எதற்காகவும் யாரிடமும் மயங்கியவளும் இல்லை.
ஆனால் இன்றோ தனிமை அவளை மிகவும் வாட்டியது. அவன் கொடுத்த முத்தத்துக்கு ஏதாவது பதில் செய்ய வேண்டும் என தோணியது. மொழி ஒரு தடை. அவனிடம் எதுவும் பேச முடியாது. “பாதகா ஏன்டா முத்தம் கொடுத்த . இந்த ஆறுமாசாமும் உனக்கு சேவகம் செய்தேனே. எனக்கு எதுவுமே தப்பா தெரியலையே. உன்னை எனது மார்பில் வைத்து கொண்டு உனது உடையை மாற்றினேன். அப்போது என் உடலும் உன் உடலும் ஒட்டிக்கொண்டே. அப்போது கூட எனக்கு தப்பாய் தெரயவில்லையே.
உனக்கு உணவு கொடுக்கும் போது எனது கை உனது வாயில் பட்டது. அப்போது உணர்ச்சி ஏற்படவில்லையே. உன் மார்பில் நான் மருந்து போட்டு விட்டேனே. அப்போது கூட எனக்கு எதுவும் தோணவில்லையே. படு பாவி நன்றி சொல்கிறேன் என என் கையில் கொடுத்த முத்தம் என்னை பாடாய் படுத்துகிறதே.
அவளால் தூங்க முடியவில்லை. தனக்கு முத்தம் கொடுத்தவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ன கொடுக்கலாம்.
புரண்டு படுத்தாள். கட்டிலில் படுத்து கிடந்த அந்த ஆங்கிலேயன் இவன் கண்ணுக்கு தேவனாக தெரிந்தான். இவள் தேவதையாக அவனிடம் செல்ல வேண்டும் என துடித்தாள்.
இந்த வேளையில் வானம் வேறு இடி இடித்தது. மழையோ கொட்ட ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்ட குளிரும். சத்தமும் இவளை எண்ணமோ செய்தது.
எழுந்தாள். அவன் தூங்கி கொண்டிருந்தான்.
அவனிடம் சென்றாள்.
தன்னை அறியாமலேயே அவள் உடம்பில் ஒரு விதமாக புல்லரிப்பு ஏற்பட்டது.
“பாதாக சும்மா இருந்த எனக்கு ஒரு முத்தத்தை கொடுத்து விட்டு, நீ பாட்டுக்கு தூங்கி கொண்டிருக்கிறாய். எனக்கு தூக்கம் வரவில்லையடா? பாவி”
அவன் கையை பிடித்தாள். அந்த கையை தன்வசம் இழுத்தாள்.
அவன் முழித்துக்கொண்டான்.
சைகையால் என்ன என்று கேட்டான்.
இவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. பதில் சொன்னாலும் புரியவா போகிறது.
ஒன்றுமில்லை என்றாள் சைகையில். ஆனால் வெட்கம் அவளை வாட்டியது.
அவனை விட்டு விலகினாள். அதன் பின் பாயில் வந்து திரும்பி படுத்துக்கொண்டாள். அவனை பார்க்கவே வெட்கம்.
மொழி தெரியவில்லை. அவன் இவள் இனமில்லை. இவள் நாடே இல்லை. இவனோ ஊமைத்துரை ஆள். அவனோ எதிரி. எதுவுமே புரியவில்லை. இவளோ கறுப்பு. அவனோ வெள்ளையன். இருவருக்கும் ஓட்டுமா?
அவனை பார்க்க கூடாது என வைராக்கியமாக எதிர்ப்பக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்.
வெளியே இடிஇடித்தது. மழை பெய்தது. ஹோ என இறைச்சல். இவளுக்கு குளிர் எடுத்தது. பாவம் அவன் வெற்று உடம்போடு படுத்துக்கிடக்கிறான். அவனுக்கு குளிருமே. என நினைத்தாள். இவளை பற்றி நினைக்கவில்லை. ஏதாவது போர்வை எடுத்து கொடுப்போமா என நினைத்தவள், மேல் ஏதோ ஊருவது போல இருந்தது.
என்ன?. அது கை. ஒரு மனிதனின் கை. சடார் என திரும்பினாள்.
தீடீரென்று மின்னல் அடித்தது. இப்போது அவன் முகம் இவன் அருகில் இருந்தது. பார்த்தாள். தள்ளி விடலாம் என நினைத்தாள் ஆனால் முடியவில்லை. இவளுக்கு தேவை இருந்தது. இவள் உடம்பு எதையோ எதிர்பார்க்க ஆரம்பித்தது.
யோசித்தாள். அவனை நோக்கி திரும்பி படுத்தாள். இப்போது இருவருக்கும் போர்வையும் தேவையில்லை. இருந்த ஒட்டுத்துணியும் காணாமல் போயிருந்தது. குளிர் அடிக்கவில்லை. உடலே இருவருக்கும் போர்வையானது.
மதம், மொழி, இனம் எல்லாவற்றையும் கடந்து ஆண் பெண் என்ற இரண்டு சாதியும் ஒன்றுக்கு ஒன்று இணைந்து கொண்டது.
அதை இயற்கையும் ஏற்றுக்கொண்டது போலவே பயங்கரமான இடி இடித்தது.
இரண்டற கலந்தனர் இருவரும்.
சில நாள்கள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் வசமானார்கள். ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்தது
ஆம்.
அன்று காலை பரபரப்பாக இருந்தது.
ஊமைத்துரையை தேடி ஆங்கிலேய சிப்பாய்கள் ஒவ்வொரு வீடாக வந்தார்கள். காடு தோட்டம் துரவு என எதையுமே விடவில்லை.
அப்போது இவள் வீட்டையும் தட்டினார்கள்.
உள்ளே நுழைந்து சோதனையிடும் போது, அந்த சிப்பாய்கள் வெள்ளையனை பார்த்து விட்டனர்.
ஏதோ ஆங்கிலத்தில் பேசினார்கள். இவளை பார்த்து அவன் ஏதோ சொன்னான். அனைவரும் அவளை பார்த்தார்கள்.
அவனை மீட்டுக்கொண்டு செல்ல முயற்சி செய்தனர். ஒரு ஆங்கிலேயன் உள்ளே இருந்தான் என்பது வெளி மக்களுக்கு தெரியவில்லை. காரணம் சிப்பாயோடு சிப்பாயாக அவன் வெளியே செல்ல ஆயத்தமானான். அது தான் அவனுக்கும் நல்லது. முருகம்மாளுக்கு நல்லது என அவன் நினைத்தான்.
இவளால் அவன் பிரிவை தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் கையை பிடித்தான். அதன் பிறகு கட்டி பிடித்துக்கொண்டான். அவளுக்கு முத்தமழை பொழிந்தான். அதுதான் கடைசி முத்தம். இனி அவன் வரப்போவதில்லை. அவளுக்கு நன்றாக புரிந்தது. ஆனாலும் அந்த ஆறு மாதங்களும் அவள் வாழ்க்கையில் சொர்க்கம். ஆனால் அந்த சொர்க்கம் மீண்டும் கிடைக்குமா? அழுதாள் தேம்பி தேம்பி அழுதாள். அவள் அழுகையை கட்டு வெள்ளையனால் இயலவில்லை.
“சோ சாரி”. என்றான். என்னவோ சொல்கிறான் புரியவும் இல்லை. ஆனால் பிரியப்போகிறேன் என்றான்.
சிப்பாய்கள் அவனை அவர்களோடு அழைத்து சென்றன். அவன் கண்களில் இவளது பிரிவு ஏற்புடையதாக இல்லை என்பது மட்டும் புரிந்தது. ஆனால் ஒன்றாக இருக்கமுடியாது.
“தேங்க்ஸ்” என்ற ஒரு வார்த்தையை அவனும் சொன்னான். உடன் இருந்த சிப்பாய் களும் சொன்னார்.
“டேய் பாவி. எனக்கும் உனக்கும் உண்டான உறவு சாதாரண உறவாடா. தேங்க்ஸ் என ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகிறாய். சண்டளா ஏன்டா வந்த, எதுக்குடா நான் உதவினேன். அன்றைக்கு ஏன்டா முத்தம்கொடுத்த. நான் ஏன்டா உன்னை தழுவ வந்தேன். ஏண்டா மழை பெய்தது. ஏன்டா இடிஇடித்தது. என்னை ஏண்டா எடுத்துக் கொண்டாய். எப்படிடா என்னை விட்டு பிரிந்து செல்கிறாய்”.
அழுதே தீர்த்து விட்டாள். ஆனால் அவளை தேர்த்த கூட எந்த நாதியும் இல்லை. அந்த கூட்டம் சென்று விட்டது. வெள்ளைக்காரர்களுக்கு இதெல்லாம் சகஜம். ஆனால் மானமுள்ள தமிழ் பெண்ணுக்கு இந்த காதலை மறக்க முடியுமா?
அவன் உறவு இவள் வயிற்றில் குழந்தையாகி விட்டது. அடுத்த பத்தாவது மாதம் மருத்தவச்சி அழகான ஆண் குழந்தையை கையில் கொடுத்தாள்.
வெள்ளக்காரன் போலவே இருந்தான். அவன் நிறம். கண் விழி, கன்னம் குழிவிழுந்த சிரிப்பு நரை முடி. கால் கை அசைவு எல்லாமே அந்த வெள்ளைக்காரன்தான். ஊரில் உள்ளவர்கள் எல்லோருக்கும் புரிந்தது. எவனோ ஒரு வெள்ளக்காரன் உடன் இவள் இருந்து இருக்கிறாள். ஒழுக்கம் கெட்டவள். என நினைத்துக்கொண்டனர்.
இவளை மீண்டும் ஒதுக்கியே வைத்தார்கள். அந்த குழந்தை பெரிய ஆளாய் வளர்ந்து ஆளாகி, அதே ஊரை சேர்ந்த ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி மகளை மணந்தான். அதுவும் காதல் கல்யாணம் தான். அவர்களுக்கு பிறந்த பெண்தான் இப்போது சென்னையில் ராஜ துரை முன்பு நின்று கொண்டிருக்கிறாள்.
அவள் பெயர்தான் லெட்சுமி. இவளும் தனது தாத்தாவை போலவே வெள்ளக்காரியாக இருந்தாள். சாதி பிரச்சனை தனது பாட்டிக்கு காதல், தந்தைக்கும் தாயுக்கும் காதல். ஊரில் இவர்களால் வாழ முடியவில்லை. தந்தை சிறுவயதில் இறந்து விட, தயாரோடு சென்னை வந்தவள். ஒரு காலகட்டத்தில் சுவாமி தாஸ் நாயுடு வீட்டுக்கு வந்து விட்டாள். தயார் இவர்களது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள். தீடீரென ஒரு நாள் அவளுக்கும் நெஞ்சு வலி . இந்த உலகத்தை விட்டு சென்று விட்டாள். இப்போது அனாதையாக சுவாமி தாஸ் நாயுடு அரவணைப்பில் இங்கேயே தங்கி விட்டாள்.
ராஜத்துரைக்கு அவளை பார்த்தவுடன் ஒரு அனுதாபம் வந்தது.
ஏதோ ஒரு ஈர்ப்பும் ஏற்ப்பட்டது.
மொழி இனம் கடல் கடந்த பாட்டியின் காதலை போலவே இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது.
அதுவும் அவள் கதையை தெரிந்த பிறகு லெட்சுமி மீது மிகவும் பரிதாபப்பட்டான்.
இங்கு வந்த 1 வாரத்திலேயே அனைவரும் பர்மாவுக்கு சுவாமி தாஸ் நாயுடோடு சென்றனர். அங்கு அவர் ஒரு பள்ளிகூடம் நடத்தினார். அந்த பள்ளிக்கூடாத்தில் இருவரும் வேலை பார்த்தனர். ஒரு கால கட்டத்தில் இருவருக்கும் மணமுடித்து வைத்தார் சுவாமி தாஸ் நாயுடு.
பாவம் பனை ஏறும் தொழிலாளிகளுக்காவே வாழ்ந்தவன். தனது சொந்தம் பந்தம் வாழ வேண்டும் என முயற்சித்தவன். தனது சொந்தங்களை காப்பாற்ற வேண்டும் என போரிட்டவன். சொந்தங்களுக்கு கான்கிரீட் வீடு வேண்டும் என செங்கல் சூளையை தனது ஊருக்கு கொண்டு வந்தவன். அவர்களை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தவன். அங்கு ஒரு கொலை பழியில் சிக்கினான்.
அங்கிருந்து தப்பித்து தனது சகோதரி வீட்டில் இருக்கும் போது சகோதரிக்காக வாழ்ந்தவன், அங்கேயும் ஒரு கொலை பழியில் சிக்கிக்கொள்கிறான். எப்போதுமே என் மக்கள். என் இனம் . என தனது சாதியோடு சாதியாக வசிக்க நினைத்தவன். எங்கோ இருந்து வந்த நாயுடுவை சந்திக்கிறான். இறுதியில் அவனுக்கு வாழ்க்கை துணையாக லெட்சுமி கிடைத்துவிட்டாள்.
ராஜத்துரை கலரோ பனையேறிகளுக்கு உரிய நனைந்த பனை கலர். ஆனால் லெட்சுமியோ வெளுவெளுவென வெள்ளை நிறத்து வெள்ளைக்காரி. அத்தி பழம் சிவப்பா இல்லை அத்தை மகள் சிவப்பா என்பார்களே அதுபோன்ற ஒரு வெளுப்பு. வெள்ளாவியில் வைத்து வெளுத்தார்களோ என்பது போன்ற வெளுப்பு. இருவரின் கலர் பொருத்தமில்லை. ஆனால் மனம் பொருத்தமாக இருந்தது. அவர்களுக்கு ஒரு பையன் பிறந்தான்.
அவனும் ராஜத்துரை போலவே இருந்தான். அவனுக்கு அம்மாதான் லெட்சுமி என்றால் நம்ம முடியாது. கரிக்கட்டையனாக இருந்தான். ஆனாலும் அவனுக்கு வெள்ளைத்துரை என பெயர் வைத்தனர்.
கருத்தான் எனதான் வைத்திருக்க வேண்டும் ஆனாலும் கூப்பிடும் போதோவது அவன் கறுப்பு நிறம் மாறவேண்டும் என தம்பதிகள் நினைத்தனர். அவனுக்கும் 21 வயதாகி விட்டது. கிட்டத்தட்ட அவர்களது வாழ்க்கை 25 வருடங்கள் பர்மாவில் ஓடி விட்டது.
ஊரை மறந்து விட்டனர். இனி நாம் பர்மா வாசிகள் தான் ஊருக்கே செல்ல கூடாது என்று நினைத்துவிட்டனர்.
ஊர் காரர்களும் முழுவதுமாக ராஜத்துரை குடும்பத்தினை மறந்து இருந்தனர். அப்படி ஒருத்தன் இருந்தான் என்பது கூட யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உலக்க நாடார், பொன்னு நாடார் எல்லாம் இறந்தே போய் விட்டனர்.
ஆனால் போலீஸ் மட்டும் மறக்க வில்லை . ஆண்டு தோறும் தேடப்படும் குற்றவாளிகள் லிஸ்டில் ராஜத்துரை பெயர் இருந்தது. எனவே அவனை ஊரில் தேடிக்கொண்டே இருந்தனர். வருடந்தோறும் வந்து ராஜத்துரை வந்து விட்டானா என விசாரித்துக்கொண்டே இருந்தனர்.
அவர்களை பற்றி யாருக்கும் தெரியவில்லை. எனவே தகவலும் தெரியவில்லை. ஆனாலும் போலீஸ் மோப்பம் பிடித்துக்கொண்டே இருந்தது.
இந்த போலீஸ் எங்கே போய் பார்மாவில் உள்ள ராஜத்துரையை பார்த்து கைது செய்ய. அதற்கு அவசியமும் இல்லை. எல்லாவற்றையும் மறந்து நன்றாக சம்பாதித்து பர்மாவில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவராக மாறி விட்டார் ராஜத்துரை. ஆனால் விதி விட்டதா? . அது வேறு மாதிரி வேலை செய்தது. பர்மாவில் ஏற்பட்ட பிரச்சனை அவர்களை மீண்டும் ஊருக்குள் வரவழைத்தது.
1942 ஆம் ஆண்டு. இரண்டாம் உலக மகா யுத்தம் ஆரம்பமாகிறது. அப்போது பர்மாவில் போர் கலவரம் பயங்கரமாக வெடிக்கிறது. அந்த சமயத்தில் அங்குள்ள மக்கள் எல்லாம் தங்கள் பூர்வ நாட்டுக்கு அகதிகளாக திருப்ப அ-னுப்பப்படுகிறார்கள். அதுபோன்ற ஒரு சூழ்நிலைத்தான் ராஜத்துரை குடும்பத்துக்கும் உருவானது.
இந்த இடத்தில் நாம் பர்மாவை பற்றி கூறவேண்டும். பர்மாவில் மழை மிக அதிகமாக பொழியும் இடம் . ஆகவே பெரும்பாலுமே வெள்ளத்தில்தான் பர்மா அடிக்கடி மிதக்கும். எனவே சாலையை மிக உயரமாக அமைத்து இருப்பார்கள். அந்த சாலைக்கு ஒவ்வொருவீட்டில் இருந்தும் மரப்பாலம் அமைக்கப்பட்டிருக்கும். அதோடுமட்டுமல்லாமல் வீடு கூட உயரத்தில் மர வீடாக கட்டியிருப்பார்கள். அந்த சமயத்தில் வீட்டுக்கு கீழே கூட மழை தண்ணீர் ஓடிக்கொண்டேயிருக்கும். ஆடி பெருக்கு அன்று கேட்கவே வேண்டாம். மிக அதிகமான மழை பொழிந்து அளவுக்கு அதிகமாக மழை வெள்ளம் செல்லும். எனவே மரவீடுகள் தான் இவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கும். கிட்டத்தட்ட இந்த அமைப்பு ஜப்பான் போன்ற அமைப்பாகும்.
இந்த சமயத்தில் தான் பர்மாவில் போர் நடைபெறுகிறது. குண்டு வெடிப்பது கூட அருகிலேயே தெரிகிறது. 21 வயது வெள்ளத்துரையும் உடன்இருந்தான். மிகவும் கொடுரமான சம்பவம் அது. குண்டு வெடிப்பில் பல இடங்களில் தரைமட்டம் ஆனாது. ரயில் நிலையம் உள்பட பல அரசு கட்டிடங்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில், ‘உள்ளூரை சேர்ந்தவர்கள் வெளி நாட்டில் இருந்து வந்தவர்களை வெட்டுகிறார்கள். உடனே இங்கிருந்து கிளம்புங்கள்’ என கூறினார்கள்.
மக்கள் உடனே ஓட முடியுமா? குழந்தை குட்டிகளை அழைத்து செல்லவேண்டும். உடமைகளை கொண்டு செல்லவேண்டும். சில இடங்களில் 7 மாத கர்ப்பிணி இருந்தார்கள். அவர்களை உடனே கூட்டிக்கொண்டு செல்ல முடியுமா?. இதுபோன்று ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரச்சனை. ஆனாலும் கூட நாம் நகர்ந்துதான் செல்லவேண்டும். நமது சொந்த நாட்டுக்கு போய்த்தான் ஆக வேண்டும்.
எனவே அனைத்து பொருள்களையும் இவர்கள் எடுத்து செல்ல முடியவில்லை. கையில் கொண்டு செல்ல கூடிய பொருள்களை மட்டும் எடுத்துக்கெண்டனர். தான் சம்பாதித்த அசையா பொருள்கள் மற்றும் பல பொருள்களை விட வேண்டியதாகிவிட்டது. கோடீஸ்வராக இருந்த ராஜத்துரை ஒரே நாளில் ஏழையாகி விட்டார். ஆனாலும் மனம் தளரவில்லை. எத்தனை நாள் பயணமோ. அந்த பயணத்துக்கு தேவையான உணவு பொருள் கிடைக்குமோ, கிடைக்காதோ. அதற்கெல்லாம் ஆயத்தமாக வைத்துக்கொண்டார். சாப்பாட்டை கையில் வைத்துக் கொண்டு வெள்ளத்துரையை கூட்டிக்கொண்டு, தனது மனைவி லெட்மியையும் கையில் பிடித்துக்கொண்டு கிளம்பினார். இவர்கள் இருந்த இடம் லோயர் பர்மா . இங்கிருந்து அப்பர் பர்மா நோக்கி பயணித்தனர். முதலில் அங்கிருந்து மேலே சென்று ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏற வேண்டும். அல்லது ஆற்று வழியாக நாம் மணிப்பூர் செல்லவேண்டும். அதன் பிறகு கனவாய் வழியாக, அல்லது மலை மீது ஏறி இறங்கி இந்தியா வரவேண்டும்.
மனந்தளராமல் கிளம்பினார். முதல் நாளில் சுமார் 2000 இந்திய அகதிகள் முகாமிட்டு தங்கி இருந்தனர். அப்போது அங்கு வந்த உள்ளூர் காரர்கள் இவர்களை வெட்ட முயற்சி செய்தனர். இவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து உள்ளூர் காரர்களை அடித்து விரட்டி விட்டனர். அதில் ராஜத்துரை வேகமாக செயல்பட்டார். வயதானாலும் கையில் ஒரு சிலம்பு கம்பை வைத்துக்கொண்டு வந்தவர்களை பந்தாடினார். ஆனாலும் இவர்களுக்குள் பயம் ஏற்பட்டது.
அடிப்பட்டவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். மிக அதிகமான உள்ளூர் மக்களை கூட்டி கொண்டு வந்து சண்டையிடுவார்கள். அதை தாக்கு பிடிக்கும் சக்தி நமக்கு இல்லை. எனவே அதற்குள் நாம் அடுத்த இடத்துக்கு சென்று விட வேண்டும். என்று வேமாக நடக்க துவங்கி, மற்றுமொரு பாதுகாப்பான இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இவர் நினைத்தப்படியே நடந்தது. அடிப்பட்டு ஓடிப்போனாவர்கள் தனது சொந்த உறவினர்களை அழைத்துக்கொண்டு லோயர் முகாமிற்கு வந்தனர். அங்கு ஆள்கள் எதுவும் இல்லை என்ற காரணத்தினால் அவர்கள் பயன்படுத்திய கூடாரத்துக்கு தீ வைத்தனர்.
அந்த தீ மள மளவென்று எரிந்தது. இவர்கள் மேலே வர சற்று காலம் தாழ்த்தி இருந்தாலும் பலரின் உயிர் அந்த இடத்திலேயே போய் இருக்கும். பெரும் கலவரம் ஏற்பட்டு ஓரளவு கையில் கொண்டு வந்த உடமைகளை பறிக்கப் பட்டிருக்கும். இந்த தகவல் அப்பர் பர்மாவில் இருந்து பார்க்கும் அனைத்து மக்களுக்கும் தெரிந்தது. இதனால் நடுங்கி போனார்கள்.
தற்போது அவர்கள் இருந்த இடம் மாண்ட் லைன் சிட்டி. அங்கு ரயில்வே ஸ்டேஷன் இருந்தது. இந்த ஸ்டேஷன் மூலமாக மணிப்பூர் வந்து அங்கிருந்து இந்தியா வந்து விடலாம். எனவே அனைவரும் அங்கேயே காத்து கிடந்தனர். ஆனால் இவர்களை ரயிலில் ஏற அதிகாரிகள் விட வில்லை. இரயிலில் ஐரோப்பியர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே ஏற்றி சென்றனர். இதனால் வருத்தமடைந்தனர் நம் மக்கள். ஒன்று குண்டு வைத்து நம்மை தகர்ப்பார்கள். இல்லை யென்றால் ஜெயிலில் பிடித்து போடுவார்கள். இதில் எது நடந்தாலும் ஆபத்துதான் எனவே ரயிலில் பெர்மிசன் இல்லாமல் ஏறி உட்கார்ந்து விடுவோம். என அனைவரும் ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டனர்.
இரயிலில் ஏறி உட்கார்ந்தவர்களை, கீழே இறக்கி விட ரயில்வே நிர்வாகத்தினால் முடியவில்லை. ஆனாலும் இரயில்வே நிர்வாகத்தினர் சமரசம் பேசினர். “மற்ற பெட்டியில் ஏறாதீர்கள். உங்களுக்கென்று 4 பெட்டி தருகிறோம். அதில் ஏறிக்கொள்ளுங்கள்” என கூறினர். ஒருவழியாக இவர்களும் சம்மதித்து விட்டனர். அதன் பின் ரயில் வண்டியின் பின்னால் நான்கு பெட்டியை இணைந்தனர். அனைவரும் முன்டியடித்துக்கொண்டு ஏறினர். நிற்க இடம் கிடைத்தால் கூட போதும் என அனைவரும் ஏறிவிட்டனர். ரயில் கிளம்பும் நேரம் வந்தது. அனைவருக்கும் சந்தோஷம் வந்தது. இனி எப்படியாவது தப்பித்து விடலாம் என நம்பிக்கை பிறந்தது.
ரயில் சிக்னல் விழுந்தது. ரயில் கிளம்புவதற்கான ஒலியை கொடுத்தது. அனைவரும் தங்களது குலதெய்வத்தினை வேண்டி நன்றி கூறினர். ஆனால் ரயில் கிளம்பிய சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக ஒலித்து இறுதியில் சத்தம் குறைந்து , தூரத்தில் ஒலிப்பது போல கேட்டது. ஆனால் இவர்கள் இருந்த நான்கு பெட்டிகளும் கிளம்பவில்லை. ஒருவர் இறங்கி பார்த்த பிறகு தான் தெரிந்தது. ரயில் தூரத்தில் சென்று கொண்டிருந்தது. தற்போது அனைவருக்கும் புரிந்து விட்டது-. இவர்கள் எறி இருந்த நான்கு பெட்டியை ரயிலோடு இணைக்கவே இல்லை. அனைவரும் ஏமாற்றத்துடன் ரயிலை விட்டு இறங்கினர். இனி நமது கதி அதே கதி தான் என முடிவு செய்து விட்டனர். ஒவ்வொரு கட்டமாக தாண்டி வருகிறார்கள். இதற்குள் 12 நாள்கள் ஓடி விட்டது.
பலர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்மில் காத்து கிடந்தனர். சிலர் அங்கிருந்த வீடுகளிலும் குடி புகுந்தனர். ஆனாலும் எப்போது குண்டு வெடிக்குமோ என பயந்து கொண்டே இருந்தனர். காரணம் குண்டு தாக்குதல் எல்லாமே அரசு சார்ந்த கட்டிடங்கள், ரயில் நிலையங்களில் தான் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் விமானத்தின் ஒலி கேட்டாலே போதும் மக்கள் அனைவரும் அபயம் கேட்டு வெளியே வந்து விடுவார்கள். ஏன் என்றால் எதிர் தரப்பினரும் இந்தியர் மீது குண்டு போடவோ, அவர்களை கொல்லவோ நினைக்க வில்லை.
இந்த சமயத்தில் தான் அருகில் உள்ள ஆற்றில் மிகப்பெரிய பயணிகள் படகு ஒன்று செல்கிறது என கேள்விபட்டனர். ராஜத்துரை அங்கு சென்றார். தங்கள் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பி, இந்தியா வருவதற்கு டிக்கட் புக் செய்து விட்டார். மாலை 3.30 மணிக்கு அவர்களை ரயில் நிலையத்தில் இருந்து படகு துறைக்கு கூட்டிச்செல்ல சாரட் வண்டி வந்தது. 2 குதிரை பூட்டிய அந்த சாரட் வண்டியில் ஒரு குடும்பம் மற்றும் அவர்களுடைய லக்கேஜ் ஏற்றி கொள்ளலாம். அதுபோலவே ராஜத்துரை குடும்பத்தினை ஏற்றிக்கொண்டு சரியான நேரத்துக்கு படகு கரைக்கு வந்து சேர்ந்தனர்.
அனைவரும் அங்கு நின்ற குட்டி கப்பல் போன்ற படகில் ஏறினர். சுமார் 800 பேரை அந்த குட்டி கப்பல் ஏற்றி கொண்டது. அந்த குட்டி கப்பல் இவர்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியது. அப்போது தூரத்தில் மிகப்பெரிய ஒளியுடன் ஓசை கேட்டது.
அதாவது தூரத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அந்த குண்டு எங்கு வெடித்தது என்று அப்போது யாருக்குமே தெரியவில்லை. ஒரு இடத்தில் மக்கள் ஓய்வுக்காக ஒரு கரையில் அந்த படகு ஓதுங்கியது. அப்போது ஒருவர் ஆர்வத்தோடு ஓடி வந்தார். படகில் இருந்த இந்தியர்களை நோக்கி, “எத்தனை பேரு உயிரோடு இருக்கீறீர்கள்” என ஆச்சரியத்துடன் கேட்டார்.
ராஜத்துரை, “நாங்கள் அனைவரும் உயிரோடு தான் இருக்கிறோம். ஏன் இப்படி பதட்டத்தோடு கேட்கீறீர்கள்” என்றார்.
வந்தவர், “அய்யா நீங்கள் தானே கடந்த 12 நாள்களாக இரயில் நிலையத்தில் காத்து கிடந்தவர்கள்” என்று கேட்டார்.
“ஆமாம், நாங்கள் ரயில் கிடைக்காத காரணத்தினால் படகினை பிடித்து வந்து விட்டோம்” என்றார் ராஜத்துரை.
“நீங்கள் தங்கி இருந்த ரயில் நிலையத்தில் பெரிய வெடி குண்டு வெடித்து விட்டது. அதில் ரயில் நிலையம், வீடுகள் அனைத்தும் தரைமட்டமாகி விடடது” என்றார்.
அனைவரும் அப்படியே அமைதியாகி விட்டனர். கொஞ்சம் தாமதித்து இருந்தால் 1000 இந்தியர்களும் அங்கேயே சமாதி ஆகி இருப்பார்களே.
பர்மாவின் பழைய தலைநகர் தான் அந்த ரயில் நிலையம் . இந்த சம்பவத்துக்கு பிறகுதான். அந்த இடம் மாற்றமாகி ரங்கூன் புதிய தலைநகரமாக மாறிவிட்டது.
இவர்கள் எல்லாம் உயிர் தப்பித்தோம் என்ற நிலையில் சந்தோஷமடைந்தாலும் கூட அடுத்து வரக்கூடிய பிரச்சனைக்காக மிகவும் வருந்த நேரிட்டது. ஆம் அடுத்து இவர்கள் நதியை எதிர்த்து படகில் செல்லவேண்டும். அதன் பின் அங்குள்ள கனவாய் வழியாக இந்தியாவின் எல்கையை அடைய வேண்டும். எல்லோரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்கள். உயிர் பிழைக்க வேண்டும். தங்களது குடும்பத்தினை காப்பாற்றவேண்டும். இவர்கள் அனைவரையும் இந்தியா கொண்டு சேர்க்கவேண்டும். தைரியத்தனை வரவழைத்துக் கொண்டு அடுத்து கட்ட பயணத்துக்கு ஆயத்தமானார்கள்.
இந்த சமயத்தில்தான் மற்றுமொரு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. கூட்டமாக வந்த மக்கள் இடையே காலரா நோய் தொற்றி கொண்டது. இதனால் கூட்டத்தில் வந்து கொண்டிருக்கும் போது, கலாரா நோயால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்து விடுவார்கள். அவர்களை. புதைக்கவோ, எரிக்கவோ உடன் வந்தவர்களுக்கு நேரமும் இல்லை. அதே நேரம் உடன் வைத்து கொள்வதும் முடியாத காரியம். இதனால் கலாராநோயால் இறந்தவர்களை ஆற்றுக்குள் தூக்கி போட்டு விடுவார்கள். மகன் கண் முன்னே தாயையும். தாய் கண் முன்னே மகனையும் ஆற்றில் தூக்கி போட்டு விட்டு அவர்கள் பயணம் துவங்கும். ஒருவர் இருவர் இதுபோல இறக்க மாட்டார்கள். பல நூறு பேர் இறந்து விடுவார்கள். இவர்களை ஆற்றில் தூக்கி போட்ட காரணத்தினால் ஆறு முழுவதும் உடல்கள் மிதந்த கொண்டே இருக்கும். படகில் செல்லும் போதே பல இடங்களில் பிணங்கள் வந்து படகு மீது முட்டும். ஆற்றுக்குள் வழியாக எதிர்த்து சுமார் 12 நாள் இந்த பயணம் நடந்தது. சில இடங்களில் ஸ்டேஷன் போல இருந்தது. அதில் இளப்பாறி விட்டு தொடர்ந்து பயணம் துவங்கியது. இவர்களுக்கு மேலும் ஒரு பிரச்சனை மீண்டும் வந்தது. இவர்கள் சென்ற படகில் ஓட்டை விழுந்தது.
இப்பகுதியில் ஆற்றில் எதிர் நோக்கி செல்வது மிக கடினம். அதோடு மட்டுமல்லாமல் மழைக்காலம். இதனால் ஆற்றில வெள்ளம் வேறு வந்தது. படகு மிகவும் கஷ்படப்பட்டு இழுப்பு தண்ணீரில் எதிர்த்து சென்று வந்தது. இந்த நேரத்தில் இவர்கள் சென்ற படகில் ஓட்டை விழுந்தது. இதனால் வெள்ளத்துரையின் உடமைகள் மற்றும் ஜாதகம் எல்லாம் ஆற்றில் போய் விட்டது. அப்போது ராஜத்துரை தனது செல்வாக்கை பயன்படுத்தி, தனது மனைவி மற்றும் மகனை மட்டும் மற்றுமொரு கப்பலில் ஏற்றினார். அவர்கள் மீண்டும் அங்கிருந்து கிளம்பி மணிப் பூர் வந்து சேர்ந்தார்கள். அதன் பின் அவர்கள் அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும்.
அந்த சமயத்தில் மீண்டும் பெரும் பிரச்சனை இவர்களை தொற்றிக்கொண்டது.
இவர்கள் இந்தியாவுக்குள் வர முதல் வழி மலை மீது ஏறி இறங்க வேண்டும். மற்றொரு வழி கணவாய் வழியாக இறங்கி வரவேண்டும். கணவாய் வழியாக வர இவர்கள் முயற்சிக்கும் போது, அங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் இவர்களை தடுத்தனர். அவர்கள் தங்கள் குடும்பம் குடும்பமாக யானை மீது ஏற்றப்பட்டு, அங்கிருந்து கணவாய் வழியாக இந்தியாவுக்கு அனுப்பி கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த வழியாக இந்தியர்களை அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் விரக்தி அடைந்தவர்கள் ஒரிடத்தில் அப்படியே அமர்ந்து இருந்தனர்.
மலை மீது ஏறி மறுபக்கம் இறங்கினால் இந்தியாவை அடைந்துவிடலாம் என்ற எண்ணத்தில் ராஜத்துரை மற்றும் குடும்பத்தினர் மிகவும் கடின மலை ஏற்றத்துக்கு தயாரானார்கள். அப்போது ஒரு போர்விமானம் தாளப்பறந்து வந்தது. அதில் இருந்த பைலட் கூட இவர்களுக்கு தெரிந்தனர். அந்த அளவுக்கு மிக தாழ்வாக அந்த விமானம் பறந்தது. அது ஒரு போர் விமானம். எனவே வருபவர்கள் நம்மீது குண்டு போட்டு விடுவார்களோ என பயந்து நம் மக்கள் நடுங்கிகொண்டிருந்தனர்.
ஆனால் அவர்களை உற்று நோக்கி கவனித்த பைலட், அவர்களை விட்டு விட்டு விமானம் மீண்டும் வானத்தினை நோக்கி பறந்தது. அதன் பின் கணவாய் வழியாக சென்று கொண்டிருந்த பிரிட்டிஷ் குடும்பத்தினர் மீது அவர்கள் குண்டு மழை பொழிந்தனர். அதில் யானை உள்பட யானை மீது சென்ற ஒருவர் கூட உயிர் தப்பவில்லை.
ஒருவேளை அந்த வழியாக இந்தியர்களை செல்ல அனுமதித்து இருந்தால், இந்தியர்கள் செல்கிறார்கள் என பிரிட்டிஷ்காரர்களையும் எதுவும் செய்யாமல் விட்டிருப்பார்கள். ஏன் என்றால் இந்த உலக போரில் இந்தியர்கள் மீது குண்டு வீச யாரும் விரும்ப வில்லை. அதற்கு காரணம் ஜப்பான் நாட்டில் காந்தி மாகனுக்கு இருந்த செல்வாக்கு.
ஆனாலும் பல பிரச்சனை. ராஜத்துரையும் , மனைவி லெட்சுமியும், மகன் வெள்ளத்துரையும் ஊருக்கு வந்து சேர்ந்தார்களா?
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவாள்)


