
திருவைகுண்டம் தாலுகாவில் தாமிரபரணி ஆற்றின் வழித்தடத்தில் அமைந்திருக்கும் சிறிய கிராமம் முத்தாலங்குறிச்சி, ஜூலை மாதம், லேசான மழை தூறியிருத்தது. காலையில் வைக்கோல் போரிலிருந்து வைக்கோலை ஒரு பாட்டி எடுத்துக் கொண்டிருந்த பொழுது காலடியில் ஏதோ தட்டுப்படுவதை உணர்ந்து வைக்கோலை விலக்கிய பொழுது அதிர்ச்சி காத்திருந்தது. அவ்வளவு நேரம் அவர் நின்று கொண்டிருந்தது ஒரு பெரிய மலைப்பாம்பின் மீது.
அவர் போட்ட கூச்சலில் தெருவே கூடிவிட்டது. ஆனால் அந்த பாம்போ அங்கிருந்து ஒரு இம்மிகூட நகரவில்லை. அந்த ஊரில் மலைப்பாம்பு தென்படுவது புதிதல்ல. விழிப்புணர்வால் மக்கள் வனத்துறைக்குத் தகவல் தர, நானும் வனத்துறையினருடன் சென்றிருந்தேன்.
பொதுவாக மலைகளிலும் காடுகளிலும் காணப்படும் இவற்றை நீராதாரம் உள்ள பிற பகுதிகளிலும் பார்க்க முடிகிறது. முத்தாலங்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் வாழபவை 1992 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துவரப்பட்டவை எனக் கருத்தப்படுகிறது. இது நடந்து முடிந்து 30 வருடங்களை தொடும் நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி கரையிலும் அதை ஒட்டிய விளைநிலங்களிலும் இவற்றை பார்ப்பது சாதாரணமாகிவிட்டது.
அடுத்த ஆச்சரியம்
தரைவாழ்வியாக இருந்தாலும் இவற்றால் நீந்தவும் மரம் ஏறவும் முடியும். இரவாடியாக இருப்பதால் நம் கண்களில் தென்படுவது அரிது. ஆனால் மீன் வலைகள், தோட்டத்தின் வேலிகளில் சிக்கிவிடும் போது பார்க்க முடிகிறது.
அந்த பாம்பால் ஒரே நொடியில் அங்கிருந்த புத்தருக்குச் சென்று மறைந்துவிட முடியும். ஏனோ நகராமல் இருந்தது. சந்தேகத்தை எழுப்பியது. மெல்ல அருகே சென்று பார்த்த பொழுது தான் ஆச்சரியம் காத்திருந்தது. உடலைச் சுருட்டி நடுவே தன் முட்டைகளை வைத்துக் கொண்டு அவற்றின் மீது தலையை வைத்தபடி இருந்தது. உடல் தசைகளைச் சுருக்கி விரிப்பதன் மூலம் முட்டைகளுக்குப் போதுமான வெப்பதை அது கொடுப்பதாக அரியப்பட்டுள்ளது. அந்த நிலப்பரப்பில் மலைப் பாம்பை முட்டைகளுடன் பார்த்தது அதுவே முதல்முறை.
பாம்பின் பாதுகாப்பு கருதி பாம்பையும் அதன் முட்டைகளையும் மீட்டோம். தாய்ப் பாம்பு எட்டுஅடி நீளமிருந்தது. இவை அதிகபட்சமாக 20 அடி நிலத்தை தொடலாம். பைத்தானிடே குடும்பத்தில் காணப்படும் மூன்று இனங்களில் இவை பரவலாகக் காணப்படக்கூடியவை. மற்ற இரண்டில் ஒன்றான ரெட்டிகுலேடட் மலைப் பாம்புதான் உலகத்தில் வாழும் பாம்புகளிலே மிக நீளமானது. அதிகபட்சமாக 33 அடி நீளம் வரை வளர்வதாக அறியப்பட்ட இது, நிக்கோபார் தீவுகளில் வளர்ந்து வருகிறது.
மீட்புக்குப் பின்னால்…
முத்தாலங்குறிச்சி பகுதியில் மழை பெய்து இருந்த நிலையில் அந்தத் தாய் மலைப்பாம்பின் பாதுகாப்பற்ற இடைத்தேர்வால் முட்டைகளில் பாதிக்குமேல் சேதமாகியிருந்தன. மீட்கப்பட்ட பாம்பையும் முட்டைகளையும் உகந்த சூழலில் பாதுகாத்தோம். ஆனால் தாய் பாம்பு முட்டைகளில் இருந்து விலகியது. முட்டைகளில் கரு ஏற்கனவே நன்கு வளர்ந்திருந்தால் பெண் பாம்பை பாதுகாப்பான இடத்தில் விட்டோம். முட்டைகளை கவனமாக கண்காணித்தோம். சிறிது நாட்கள் கடந்த பிறகு எப்போதும் போல காலையில் அதை பார்க்க வன ஊழியர் சென்றிருந்த பொழுது முட்டைகள் பொரிந்து, குட்டிகள் ஒவ்வொரு திசையில் இருந்து கொண்டு இருந்திருக்கின்றன. இரவில் பொறிந்திருக்க வேண்டும்.
பிறந்த குட்டிகள் பளபளப்பாக சுறுசுறுப்பாக இருந்தன. பெருவிரல் தடிமனுடன் சராசரியாக இரண்டடி நீளத்துக்குக் குறைவாக இருந்தன. வால் தடித்து சிறியதாகவும் மொத்த நீளத்தில் ஆறில் ஒரு பங்கு அளவுடனும் இருந்தது. வழுவழுப்பான தடிமனான உடல் நடுப்பகுதி பருத்தும், தலைவா நோக்கி செல்ல குறுகியும் காணப்பட்டது. தலையில் துருத்திக்கொண்டிருந்த சிறிய வட்ட வடிவ கண்களில் செங்குத்து பாவை கரு நிறத்தில் இருந்தது. மேல் உதட்டில் வெப்பம் உணரும் குழிகளை பெற்றிருக்கின்றன. நாசித்துவாரம் மேல் நோக்கி அமைந்திருக்கிறது.
புதிய பாதை,
குட்டிகள் உணவு தேடித் திரிந்து கொண்டிருக்கின்றன. உருவ அமைப்பை பொருத்துச் சிறு உயிரினங்களில் ஆரம்பித்து, பெரிய பாலூட்டிகள் வரை உணவு நீள்கிறது. இரைகளை தன் உடலால் இறுக்கி மூச்சிரைக்க வைத்து உண்ணுகிறது. இதன் வலுவான தாடைகள், அதன் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக தலையை விட பெரிய இரைகளை எளிதில் உண்ண முடிகிறது. நஞ்சற்ற இவை கோபம் கொள்ளும்போது பலமாக கடிக்கும். இதனால் காயம் ஏற்படுமே தவிர வேறு எந்த பாதிப்பும் இல்லை.
ஜீவநதியான தாமிரபரணி, இவ்வினம் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பு தந்ததை தாண்டி வாழ்வதற்கும் இடமளித்திருக்கிறது. குட்டிகள் வாழ தகுதியான இடத்தை தேர்வு செய்து வெளியே விட்ட பொழுது ஒவ்வொன்றும் மெல்ல நகர்ந்து மறைந்ததை பார்த்ததும் இன்றும் மறக்க முடியாத நிகழ்வு.
கட்டுரையாளர், ஊர்வன ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: [email protected]