தூத்துக்குடியில், தென்பாகம் காவல் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அகற்றப்பட்ட பஸ் ஸ்டாப் மீண்டும் கட்டப்படாமல் உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கத்தின் போது தென்பாகம் காவல் நிலையம் அருகே அகற்றிய பேருந்து நிறுத்தம் இதுவரை மீண்டும் கட்டப்படவில்லை. பேருந்து நிழற்குடை இல்லாததால் திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் பயணிகள் சாலையில் அபாயகரமாக நின்று பேருந்து ஏறும் அவலை நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள், தென்பாகம் காவல் நிலையம் அருகேயுள்ள தேவர்புரம் சாலை வழியாகச் சென்று காமராஜ் கல்லூரி சாலையைக் கடந்து திருச்செந்தூர் மார்க்கமாக இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அங்கிருந்த பழைய பேருந்து நிறுத்தம் அகற்றப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடைந்து நீண்ட நாட்களாகியும் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகத்தால் அந்த இடத்தில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்படாமல் உள்ளது.
பேருந்து நிழற்குடை இல்லாததால், அலைமோதும் வெயிலிலும் மழையிலும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையில் அபாயகரமாக நின்று கொண்டு பேருந்துகளில் ஏறும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்து அபாயமும் நிலவுகிறது.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள சரவணாஸ் ஹோட்டல் தென்புற பகுதியில் மீண்டும் புதிய பேருந்து நிறுத்தத்தைக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


