தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி லியோ என்பவருக்கு சொந்தமான லதா போர்ட் 2 என்ற பதிவு செய்யப்படாத விசைப்படகில் நேற்று (10-11-25) மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி வரும்போது இனிக்கோ நகர் பகுதியைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்களின் வலையை சேதப்படுத்தியதாக கடலினுள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இரவு 10 மணி அளவில் மீன்பிடி துறைமுகத்தில் மேற்படி விசைப்படகு வந்து மீன்களை இறக்கிக் கொண்டிருந்த பொழுது இனிகோ நகர் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகிற்குள் சென்று விசைப்படகு தொழிலாளியான திரேஸ்புரம் தொம்மை ஜேசு மகன் கனிஷ்டன் (35), சிலுவையார் என்பவரை தாக்கியுள்ளனர். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து விசைப்படகு உரிமையாளர்களின் தலைவர் போஸ்கோ மற்றும் விசைப்படகு தொழிலாளர்கள் சங்க தலைவர் சில்வர்ஸ்டார் தலைமையில் மீனவர்கள் இன்று (11.11.25) முதல் கடல் தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


