தூத்துக்குடி மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கினார். மாவட்ட கண்காணிப்பு அலுவலரான, பேரூராட்சிகளின் இயக்குநர் பிரதீப்குமார் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை எத்தனை பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது, இன்னும் எத்தனை மனுக்கள் நிலுவையில் உள்ளன, மாவட்டத்துக்கான இலக்கு எட்டப்பட்டு உள்ளதா என்பன போன்ற விவரங்களை கேட்டறிந்தார். நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களையும் விரைவாக பரிசீலனை செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், நீர் நிலைகளின் கரைகள் பலமாக உள்ளதா, உடைப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா?, உடைப்புகள் ஏற்பட்டால் விளைநிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் அனைத்தையும் செய்து தயார் நிலையில் இருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், உதவி ஆட்சியர்கள் ஹீமான்ஷீ மங்கள் (கோவில்பட்டி), பிரபு (தூத்துக்குடி), உதவி ஆட்சியர் (பயிற்சி) புவனேஷ்ராம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


