தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், தெருக்களில் மழைநீர் குளம்போல தேங்கியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மாநகராட்சி பணியாளர்கள் மழை நீரை வெளியேற்றும் பணிகளில் தீவிமாகஈடுபட்டனர். தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலம் வடிகாலுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. தொடர் மழை காரணமாக 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லிமீட்டரில்): தூத்துக்குடி 1, ஸ்ரீவைகுண்டம் 1.10, திருச்செந்தூர் 10, காயல்பட்டினம் 12, வைப்பார் 2, சூரங்குடி 16, கீழ அரசடி 2.


