இதுகுறித்து தூத்துக்குடியில் அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை குழந்தைகள், மாணவிகள், பெண்கள் உள்ளிட்டவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு உள்ளது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியில் சேர்ந்த மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் 3,14,844 மாணவிகள் பயனடைந்து உள்ளனர். இதற்காக 2022 – 23 ம் ஆண்டில் ரூ.220.76 கோடியும், 2023 – 24ம் ஆண்டில் ரூ.349.78 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் கீழ் 9,30,610 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என கண்டறியப்பட்டு பிறந்து 6 மாதம் வரை உள்ள குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகமும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள 92,015 குழந்தைகளுக்கு வடிமைக்கபட்ட ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டுள்ளது. 43,200 குழந்தைகளுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் தாம்பரம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் 681 பேர் பயனடையும் வகையில் ரூ.31 கோடியில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கபட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக திருவண்ணாமலை, ஒசூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் 542 மகளிர் பயன்பெறும் வகையில் ரூ.43.52 கோடியில் மகளிர் விடுதிகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் 18,53,798 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர். மொத்தத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,440 பணிகள் நடைபெற்றுள்ளது.
தூத்துக்குடி சட்ட மன்ற தொகுதியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.6 கோடி மதிப்பில் மழை நீர் வடிகால், பேவர் பிளாக் சாலைகள், எல்.இ.டி மின் விளக்குகள், அங்கன்வாடி மையங்கள், பொது சிறுநீர் கழிப்பிடம் என 55 பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 21 பணிகள் நடைபெற்று வருகின்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 10 நகர் நல மையங்கள், பள்ளி கட்டிடங்கள், சாலை பணிகள், ஸ்டெம் பார்க், வணிக வளாகங்கள், பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் ரூ.110 கோடி மதிப்பில் இருதய சிகிச்சை பிரிவு, நரம்பியல் பிரிவு, குடல் மற்றும் ஈரல் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


