படிப்பதற்கு எதுவும் தடையே கிடையாது. படித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வழிகாட்ட பல்வேறு நபர்கள் உள்ளனர் என்று கயத்தார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 76வது ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கலந்து கொண்டு சிற்பபுரையாற்றி பேசியதாவது : கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இப்பள்ளிக்கு பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர் அவர்களுடன் வருகை தந்த பொழுது, இப்பள்ளியின் ஆண்டு விழாவிற்கு வர வேண்டும் என தலைமையாசிரியர் கேட்டுக் கொண்டார்கள்.
நான் அவர்களிடம் இப்பள்ளியில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்? எத்தனை மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள்? என்றும் இந்த வருடத்தில் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 18500க்கும் மேற்பட்ட அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறோம். அந்த வகையில் இப்பள்ளியில் இந்த வருடம் 96 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மீதமுள்ள 4 சதவீதம் மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதற்கும், வருகின்ற ஆண்டில் 100 சதவீதம் மாணவர்களை உயர்கல்வியில் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுவோம் என தலைமையாசிரியர் தெரிவித்தார். எனவே, இந்த வருடத்தில் பயிலுகின்ற மாணவர்களாகிய நீங்கள் வருகின்ற ஆண்டில் அனைவரும் (100 சதவீதம்) உயர்கல்வியில் சேர வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள் ஆகும்.
நேற்றிரவு தான் நமது மாவட்டத்தின் ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை சதவீதம் 96 சதவீதத்தை கடந்துள்ளோம்.. அந்த வகையில் இப்பள்ளி மாவட்டத்தின் இலக்கை அடைந்துள்ளது. எனவே, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமது மாவட்டத்தை சார்ந்த 96 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் படிக்கிறார்கள் என்றால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனைக்குரியது. தமிழகத்தில் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்று வருகிறோம்.
இதற்கு முந்தைய காலகட்டத்தில் பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கல்விக்கு மட்டும் சேர வேண்டும் என்ற நிலை மாறி, உயர்கல்வி பயின்று மென்மேலும் உயர வேண்டும் என்ற இலக்குகளை நிர்ணயித்து உயர்த்தி வருகிறோம். இதற்காக பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.
எனவே, மாணவர்கள் படித்தால் மட்டும் போதும். நீங்கள் எந்த நிலையிலிருந்தாலும் படிப்பதற்கான முழு உதவிகளையும் அரசு செய்யும். ஆண்டறிக்கையில், முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் சங்கங்கள் மூலம் சில பள்ளி மாணவர்களுடைய உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வி பொறுப்பை ஏற்று இருக்கிறார்கள்.. அவர்களுடைய துணை என்பது பள்ளியினுடைய மிக முக்கிய சொத்தாக நான் எண்ணுகிறேன். இது போன்ற செயல்களை செய்வது மிகச் சிறப்பான செயலாகும்.
எனவே, முன்னாள் மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சமீபத்தில் இப்பள்ளியினுடைய மாணவர்கள் சிலரை விமானத்தின் மூலம் அண்ணா பல்கலைகழகம், சென்னை ஐ.ஐ.டி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்றனர். முன்னாள் மாணவர்களுடைய நோக்கம், மாணவர்கள் உயர்ந்த நிறுவனங்களில் பணியாற்ற செய்து, அவர்களும் வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டும் என்பதாகும்.
மேலும், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிறந்த பொறியியல், வேளாண்கல்லூரி மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். மாணவர்கள் உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்கு தயக்கத்துடனும், கல்வி கட்டணம் செலுத்துவதற்கான சூழ்நிலை உள்ளிட்ட பெரும் சிக்கல்களுடன் இருப்பீர்கள். படிப்பதற்கு பணம் ஒரு தடையாக எந்த காலத்திலும் இருந்ததில்லை. வரலாற்றில் எப்பொழுதும் இருந்ததில்லை.
இப்பொழுதும் இருக்க போவதில்லை. உதாரணமாக டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் எளிமையான குடும்பத்தில் பிறந்து ஜனாதிபதியாக பதவி வகித்தார். இதுபோல் வரலாற்றில் பல்வேறு நபர்கள் எளிமையான இடத்திலிருந்து மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார்கள். மின்சாரம் இல்லாத ஒரு நிலையை எண்ணிப் பார்க்க முடியாது. கடந்த 200 முதல் 250 ஆண்டுகளுக்கு முன்னர் மின்சாரம், மின்விசறி உள்ளிட்டவை இல்லை. ஹம்பிரி டேவி என்ற விஞ்ஞானி வேதியியலில் சோடியம், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இரசாயன தனிமங்களை கண்டுபிடித்துள்ளார்.
மைக்கேல் பாரடே என்ற விஞ்ஞானி இயற்பியலில் அதிக ஈர்ப்புடையவராக, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அதன் விளைவாக காந்தத்தின் மூலம் அதிலுள்ள உலோகத்தில் மாற்றத்தை ஏற்பத்தி எலக்ட்ரானை காந்தவிசை மூலம் விரைவாக செல்ல வைக்க முடியும் என்பதை கண்டறிந்தார். இதன்மூலம் மின் காந்த தூண்டல் என்ற நிகழ்வை கண்டறிந்தார். அறிவியல் உலகத்தில் காந்தம் மூலம் மின்சாரத்தை உருவாக்க முடியும் என்ற மாபெரும் கண்டுபிடிப்பு கண்டறியப்பட்டது.
மின்சாரம் மூலம் அனைத்தும் கண்டறியப்பட்டது. மனித குலத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு மின்சாரத்தை கண்டுபிடித்து நவீன உலகத்திற்கு வர வைத்துள்ளார் மைக்கேல் பாரடே. அவ்வாறு எளிமையான குடும்பத்திலிருந்து உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். ஆனால் மாணவர்களாகிய உங்களுக்கு அனைத்து வசதிகளும் உங்கள் பெற்றோர்களால் செய்து தரப்படுகிறது. உங்களால் மாபெரும் சாதனைகளை படைக்க முடியும்.
நான் ஒரு அரசு பள்ளியில் பயின்ற மாணவன். எனது குடும்ப சூழ்நிலையின் காரணமாக என்னால் உயர்கல்வி படிக்க முடியவில்லை. வேலைக்கு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நானே சுயமாக நூலகத்திற்கு சென்று படித்தேன். அப்பொழுது ஐ.ஏ.எஸ் படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நூலகத்திலிருந்து பொருளியியல் தொடர்பான புத்தகங்கள் மற்றும் செய்திதாள்களை படிப்பதற்கு ஆர்வம் கொண்டு படிக்க தொடங்கினேன். அதற்காக 1 கிலோ ஆங்கில செய்தித்தாள் கடையிலிருந்து வாங்கி, அதனை செய்தி நறுக்குளாக தயார் செய்து படித்தேன். இறுதியாக உங்கள் முன்பாக கலெக்டராக நிற்கிறேன்.
எனவே, படிப்பதற்கு எதுவும் தடையே கிடையாது. படித்து வாழ்க்கையில் முன்னேறுவதற்காக வழிகாட்ட பல்வேறு நபர்கள் உள்ளனர். மாணவர்களாகிய நீங்கள் எங்கும் சிரமப்படாமல், வாழ்க்கையின் உயரங்களுக்கு நீங்கள் செல்லலாம். இது போன்று உயரமான இடங்களுக்கு செல்ல விரும்பும் மாணவர்களை ஊக்கப்படுத்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. எனவே, இந்தப்பள்ளியிலிருந்து மிக உயர்ந்த இடங்களுக்கு செல்வதற்கு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
முன்னதாக, 76-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் மரிய ஜான் பிரிட்டோ, கயத்தார் பேருராட்சிமன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை, கயத்தார் வட்டாட்சியர் அப்பணராஜ், உயர்கல்வி வழிகாட்டி, உதவி திட்ட அலுவலர் முனியசாமி, முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர் உச்சிமாகாளி, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் காளியப்பன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் லட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.


