தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள், இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் 146 வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 1,700 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், சுமார் ரூ. 100 கோடிவரை பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் யுனைட்டட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி பீச் ரோடு, கனரா வங்கி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். எஸ்பிஐ கார்த்திகேயன், மெல்பர் சவியோ, ஐஓபி ஆண்டணி தனபாலன், இந்தியன் வங்கி பலவேசம் உள்பட வங்கி ஊழியர்கள் திரளானோர் கலந்து காெண்டனர். முன்னதாக கனரா வங்கி தொழிற்சங்க நிர்வாகி செந்தில்குமரன் வரவேற்றார். நிறைவாக முத்துவேல்குமார் நன்றியுரை ஆற்றினார்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி என, நான்கு நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


