முன்கதை சுருக்கம்
ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். அடிக்கடி தீ வைக்கிறார்கள் இனிமேல் ஓலை குடிசை கட்டக்கூடாது என ராஜதுரையின் ஊர் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். இதனால் சொந்தமாக செங்கல் சூளை உருவாக்கும் முதலாளியை ஊருக்கு கூட்டிக்கொண்டு வருகிறார்கள். அனைவருக்கும் ஓடு வீடு கட்டிகொடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான் ராஜதுரை. அவனை மற்ற சமூகத்தினர் பொறாமையில் கொலை பலியில் சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து சிற்றாற்றங்கரைக்கு ஓடினான் ராஜத்துரை. அங்கே உள்ள அரண்மனையில் ராஜதுரையை வேலைக்கு சேர்த்து விட்டாள் அவள் அக்காள் கற்பகம். ஆனால் கற்பகம் மீது காம மோகம் கொண்ட தலைமை காவலன் அவள் கற்பை சூறையாட நாள் குறித்தான். எதிர்பாராத விதமாக அவனும் கொலையாகிறேன். அந்த பலியும் அவன் மேல் விழுகிறது. எனவே போலிசுக்கு பயந்து சென்னை ஓடுகிறான். அங்கு சுவாமி தாஸ் நாயுடு என்பவரை சந்திக்கிறான். அவர் வீட்டில் வேலை பார்க்கும் ஆங்கில பெண் ஒருவரையும் சந்திக்கிறான். அவளை மணம் முடித்து பர்மாவில் வாழுகிறான். அங்கே அவனுக்கு வெள்ளத்துரை என்ற மகன் பிறக்கிறான். கொலை குற்றத்தினை மறந்து செல்வச்செழிப்பாக வாழ்கிறது அந்த குடும்பம். ஆனால் இரண்டாம் உலகப்போரில் உடமைகளை எல்லாம் இழந்து சொந்த ஊருக்கு அகதிகளாக இவரது குடும்பம் வரும் நிலை ஏற்படுகிறது. இதற்கிடையில் மாரடைப்பால் ராஜத்துரை இறந்துபோகிறார். அவர் மகன் வெள்ளத்துரைக்கு சொந்த காரர்கள் பெண் தர மறுக்கிறார்கள்.
வெள்ளத்துரை தனது தந்தையை இந்த கதிக்கு ஆளாக்கிய சிவராமன் அய்யரை பலிவாங்க தேடிப்போகிறான். அங்கு அழகான பெண் ஒருவளை சந்திக்கிறான். அந்த பெண்ணையே மணம் முடித்து அவர்களுக்கு சந்திரன் பிறக்கிறான். அந்த சந்திரன் தான் முத்துக்கிளியை காதலிக்கிறான்.
இனி.
பஜாருக்கு வந்தார்கள்.
லெட்சுமியும் பூமாவும் அதற்கும் மிகவும் வாடிப்போய் விட்டார்கள்.
பஜாரில் ஏதாவது வாங்கி கொடுக்க வேண்டும். எங்குமே சைவ ஹோட்டல் இல்லை.
பூமா சைவம் தான் சாப்பிடுவாள்.
ஆனால் இங்கு அதற்கு வாய்ப்பு இல்லை. எங்கு பார்த்தாலும் புரோட்டா சால்னா கடைத்தான் இருந்தது.
பாவம் இந்த பகுதியில் விவசாயம் பார்க்கும் மக்கள் விவசாய தொழில் பார்த்து விட்டு, ஏதாவது விருப்ப சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று தான் பஜார் வருவார்கள். அவர்களுக்கு புரோட்டா ஆம்லெட் சாப்பிட்டால் தான் தூக்கம் வரும். எனவே எங்கு பார்த்தாலும் புரோட்டா கடைத்தான் இருந்தது.
லெட்சுமி கேட்டாள்.
“பூமா நீங்க ரொம்ப ஆச்சாரமா இருப்பீய. காவிச்சி சாப்பிட மாட்டிய. இப்போ பாருங்க நம்ம எல்லாருக்கும் பசி எடுக்கு. சாப்பிடனும். ஆனா இங்க புரோட்டாத்தான் இருக்கு. சாப்பிடுவியளா?”
பூமா அமைதியாக இருந்தாள்.
“என்ன சொல்லுதிய பூமா”
வெள்ளத்துரை அவள் முகத்தினை பார்த்தான். செல்லையாவும் பூமா என்ன சொல்லப்போகிறாள் என புரியாமல் பார்த்தான்.
பூமா யோசித்தாள். “நம்ம கலாச்சாரம் இனிமே சரியா வருமோ. தெரிஞ்சே தெரியாமலேயோ இவங்க கூட வந்துட்டோம. இனி எல்லாமே இவங்கத்தான். இவங்க கூட த்தான் வாழணும். சாப்பிடணும். வீட்டில தங்கணும். ஆனா உணவு பழக்கத்தை மட்டும் எப்படி விட்டுத்தர முடியும்”
மனதுக்குள் முடிவு செய்தாலும் பேச இயலவில்லை. கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
அந்த கண்ணீருக்கு அர்த்தம் புரியவில்லை.
செல்லையாவுக்கு புரோட்டா என்றவுடன் எச்சில் ஊற ஆரம்பித்து விட்டது.
ரெண்டு ரூவாய்க்கு பரோட்டா திங்க ஆரம்பிச்சு, இதுவரைக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. புரோட்டா திங்கிற ஒரு இரவுல யோசிச்சு பாத்தா முட்டை பரோட்டா, பொதிச்ச பரோட்டா, சுவையா சாப்பிடலாம். சினிமாவுக்கு வந்துட்டு போனாலே புரோட்டாத்தான்.
அவருக்கு தெரிஞ்சி இந்தியாவுலயே புரோட்டோவவுக்கு இலவசமா குருமா, சால்னா கொடுக்குற ஒரே சமூகம் இந்த தமிழ் சமூகம் தான். கேரளா, ஆந்திரா, மும்பை எல்லாம் புரோட்டா கூட நிச்சயமா ஒரு முட்டை வாங்கணும். அதனால் தான் இங்கே புரோட்டா எளிய மக்களின் உணவா நிலைச்சு இருக்கு. அந்த எளிய மக்களின் ராஜ உணவான ப-புரோட்டாவை, மைதா மாவு, அதனால கெடுதல் அது இதுன்னு என்ன காரணம் சொல்லியும் தமிழ் சமூகத்திடம் இருந்து எளிதில் பிரித்து விட முடியாது. அதனாலத்தான் பஜார் வந்தா புரோட்டா சாப்பிடாமல் இருக்க முடியாது.
செல்லையாவுக்கு வெளியே சாப்பிடறதுனாலே அது புரோட்டா மட்டும் தான், வாரம் ஒருமுறையாவது புரோட்டா சாப்பிட பஜார் வந்திருவார். பரிமாறுதவி ஆம்பிளையோ பொம்பளையோ பரோட்டாவை பிச்சி நம்ம இலைல போட்டு அதுக்கு மேல குருமா ஊத்தறது. புரோட்டா மைதாங்கிறதால உள்ளே நல்ல சூடு இருக்கும், அதை கஸ்டமர் கையை சுட்டுட கூடாதுனு அவங்களே பிச்சு போடுவாவ. இங்க ஆச்சாரமா இருக்கிற பூமா அம்மா அதையெல்லாம் சாப்பிடுவாவளா?
யோசித்தார் செல்லையா?
ஆனாலும் பூமா சரி என்று சொன்னால் மட்டும்தான் புரோட்டா சாப்பிடமுடியும். இல்லாட்டி அவியளை வச்சிட்டு மத்தவிய சாப்பிட முடியாது. எல்லோரும் பட்டினித்தான். ஆதுக்கப்புறம் தின்னவேலி போயி எதுவும் அய்யர்வாள் , சைவ பிள்ளைவாள் ஹோட்டல் இருக்கான்னு பாக்கணும். நாம போறதுக்குள்ள எல்லாத்தையும் கழுவி மூடியும் புடுவாவ. செல்லையாவின் மனது பலவாறாக யோசித்தது.
எனவே அவரும் பூமா மூஞ்சியை பார்த்தார்.
பூமா நிமிர்ந்தாள். “சாப்பிடுவோம்”.
“யம்மா கவிச்சி இருக்கும்”.
“பராவாயில்லை”.
“நீங்க சாப்பிடுவியளா?”
“இனிமே நீங்க சாப்பிடறதை எல்லாம் நான் சாப்பிடுவேன்”.
செல்லையா சிரித்துக்கொண்டார். “எங்க கருப்பாண்டிக்கும் சிவத்த கிளி கிடச்சிருச்சு”. மனசுக்குள் நினைத்துக்கொண்டார்.
அனைவரும் புரோட்டா கடைக்குள் நுழைந்தார்கள்.
எல்லோருக்கும் இலை போடப்பட்டது. கடை அண்ணாச்சி சட்டை போடாமல் கன்னங்கரேன்னு இருந்தார். மேல் முழுவதும் வேர்வை துளி இருந்தது. அவருக்கு புரோட்டா போட்ட களைப்பு ஒரு புறம் இருந்தாலும் வித்தியாசமான மனிதர்கள் சாப்பிட வந்தவுடன் அவரே இலையை போட்டார். தண்ணீர் வைத்தார். கடையும் சுவர் எல்லாம் அவர் நிறத்தில் தான் இருந்தது. பெஞ்சு வளைந்து போய் இருந்தது. இருக்கை அதை விட மோசமாக இருந்தது. அடுத்த கட்டம் புரோட்டாவை போட்டு, யாரையும் எதிர்பார்க்காமல் அவரே பிய்த்து போட்டார்.
செல்லையா பூமா என்ன சொல்வாறோ என பயந்தார். ஆனால் பயந்தபடி எதுவும் நடைபெறவில்லை. அவள் ரசித்து சாப்பிட்டாள்.
கிட்டத்தட்ட நிறத்தில் மட்டும் அவள் பிராமணர். மற்றப்படி இவர்களை போலவே ஆகி விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் ஒரே நாளில் இப்படி மாறி விட்டாளே.
பாவம் சொந்தத்தினை இழந்த கிளி. தனது இறக்கை உடைந்தாலும் ஆறுதல் தரும் இவர்கள் கையில் வந்து சேர்ந்து விட்டது. இனி இவர்களை தான் சொந்தம் என நினைத்தது. ஆனால் அது சாத்தியப்படுமா?
சாப்பிட்டு முடித்தார்கள்.
இவர்கள் மூவரையும் என்ன செய்ய-?
இப்படியே இவர்களை அனுப்பினால் எதுவும் நடக்காது. ஒரு முடிவுக்கு வந்தார்.
அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும். இவர்கள் இரண்டு பேரை¬யும் மணமுடித்து வைத்து விட வேண்டும் என்று நினைத்தார்.
எப்படி முடியும். முதலில் பெண்ணிடம் கேட்க வேண்டும்.
அனைவரும் பஸ் ஏறினார்கள்.
நெல்லை ரயில் நிலையம் வந்தார்கள். “நாளை காலை நீங்கள் மூவரும் மும்பை போக போறீங்க. நாளைக்கு நாம சாயங்காலம் நெல்லை எக்ஸ்பிரஸ் இரயில சென்னை போயி, அங்கிருந்து மும்பை போக டிக்கெட் எடுத்து தாரேன். அங்க நான் சொல்ற அட்ரஸ்க்கு போங்க. அங்க என் நண்பன் ஆதரவு தருவான்” என்றார்.
“சரி”. என லெட்சுமி சொன்னாள் . ஆனால் கண்ணீர் வடிந்தது. “அப்பா இம்ம நாங்க உங்களை எப்போ பாப்போம்”.
“பாக்கது ஒரு பக்கம் இருக்கட்டும். உன் அப்பாவா உன்குடும்பத்துக்கு நான் ஒரு நல்ல செயலை செய்யணும்”.
“என்ன அப்பா சொல்லுதீய”.
“நான் பூமா கிட்ட கொஞ்சம் பேசனும்.
“ஏன்?”.
“ஒரு வேலை இருக்கு”.
பூமாவை பார்த்தார். “எம்மா செத்த வா. உங்கூட கொஞ்சம் பேசனும்”.
அவருடன் தனியாக வந்தாள்.
“எம்மா. நான் சொல்லுதேன்னு தப்பா நினைக்காத. நீ வேறே சாதி, வெள்ளத்துரை வேறே சாதி. ஆனா எனக்கு ஒன்னு தோணுது. அதை சொல்லலாமுன்னு நினைக்கேன்”.
“சொல்லுங்க”.
“உனக்கு வெள்ளத்துரையை பிடிச்சிருக்கா”.
தலை கவிழ்ந்தாள்.
“இங்க பாரு தாயி. உண்மையை சொல்லு. உங்களை நான் இப்படியே பம்பாய் அனுப்பி பிரயோசனம் இல்லை. உனக்கு நான் ஏதாவது செய்யணும்”.
மீண்டும் அமைதியாக இருந்தாள்.
“இங்க பாரு. சரியா சொல்லு. நான் உங்க வயசை தாண்டித்தான் வந்துருக்கேன். நீ வெள்ளத்துரையை விரும்புற மாதிரி தெரியுது. உண்மைன்னு சொன்னா உனக்கு நாளைக்கு காலையில உங்களுக்கு திருமணம் செஞ்சி வைச்சிருதேன்”.
கண்ணீர் வந்தது பூமாவுக்கு
“என்ன தாயி சொல்லுத. நீ. பிரமணத்தி. அவன் சாணப்பயன். இரண்டு பேருக்கும் சாதி ஒத்து வராது தான். நான் இப்படி கேக்கேன்னு தப்பா நினைக்காத”.
பூமா நிமிர்ந்தாள். “சாதி வேறேன்னு சொன்னா கல்யாணம் முடிக்க கூடாதா தாத்தா”.
“ஆகா. ஒரு பெண் நேரிடையாகவா சொல்லுவாள். இப்படித்தான் சொல்லுவாள். அப்படியென்றால் பூமாவுக்கு சம்மதம்தான்”.
“சரி. வாம்மா. அந்த பயலுக்கு சம்மதமான்னு கேப்போம்”. இவளை அனுப்பி விட்டு, வெள்ளத்துரையை கூப்பிட்டார்.
“யய்யா வெள்ளத்துரை இங்க வாய்யா”.
“என்ன தாத்தா”.
“யய்யா நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க கூடாது”.
“என்ன தாத்தா”.
“இந்த பிள்¬யை நீ கல்யாணம் பண்ணிக்கிடுதியா?”
“தாத்தா. என்ன சொல்தீய”.
“அவிய சாதி என்ன? என் சாதி என்ன?”
தாத்தா சிரித்தார்.
“அவிய கலர் என்ன? என் கலர் என்ன?”
“அதெல்லாம் எதுக்கு. இரண்டு பேரு மனசு ஒண்ணா சேந்தா போதாது”.
“தாத்தா எனக்கு சரித்தான். ஆனா அவிய சம்பதிப்பாவளா?” இழுத்தாள்.
“ய்யய்யா சுவத்தில ஏறி ஆக்குபறைக்குள்ள குதிக்கும் போது இதையெல்லாம் யோசிச்சியளாக்கும்”.
“தாத்தா அது வேறே இதுவேறே”.
“ராஸ்கோல் உதை விழும். உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா அதை மட்டும் சொல்லு”.
“அது சரி. கரும்பு தின்ன கூலி. எதுக்கும் அவிய கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்காங்க. எங்க அம்மா கிட்டேயும் கேட்டுகாங்க”.
“கேட்டுருவோம்”.
தாய் மட்டும் வேண்டாம் என்றா சொல்லுவாள். கருவண்டு மாதிரி மகனை பெற்று வைத்திருக்கிறோம். அந்த மகனுக்கு ரதி மாதிரி பெண் கிடைச்சா மாட்டேன்னா சொல்லுவா.
இரட்டிப்பு சந்தோசம்.
மறு நாள். காலையில் அங்குள்ள ஜவுளி கடையில் அவர்கள் செலவுக்கு தக்க பட்டு சேலை, வேஷ்டி வாங்கி கொண்டு நடந்தே, குறுக்குதுறை முருகன் கோயிலுக்கு போய் சேர்ந்தார்கள். போகும் வழியில் ரோசாப்பூ மாலை வாங்கி கொண்டார்கள்.
அர்ச்சகர் தாலி எடுத்து கொடுக்க இருவரும் தாலியை கட்டினார்கள். இருவரும் மாலையை மாற்றிக்கொண்டார்கள். அடுத்த நிமிடம் இருவரும் செல்லையா காலில் விழுந்து வணங்கினார்கள்.
அங்கே சாதியெல்லாம் மறைந்து விட்டது. நாலு பேரும் நாலு வர்ணமாக சாதியாக நின்றார்கள். அவர்கள் மணம் எல்லாம் ஒன்று போலவே இருந்தது. ஆனாலும் திருமணமாக முடிந்து விட்டது.
ஆனால் இந்த சாதி மறுப்பு திருமணம் தான் தற்போது சந்திரன் காதலுக்கும் உறவுக்காரர்கள் மத்தியில் வேட்டு வைத்துக்கொண்டிருக்கிறது.
செல்லையா. அன்று மாலை நெல்லை எக்ஸ்பிரஸில் மூன்று பேரையும் ஏற்றி விட்டு வந்தார்.
அனைவரும் பிரியும் போது அழுகையும் கண்ணீரும் தான். நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இப்படியொரு பிரிவு வரும் என்று நினைத்து பார்க்கவும் முடியவில்லை.
அதன் பின் சேர்ந்தவுடன் கடிதம் வந்தது. செல்லையாவும் கடிதம் எழுதினார். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்ததாகவும் அவனுக்கு சந்திரன் என பெயர் வைத்ததாகவும் எழுதினார்கள். இதற்கிடையில் செல்லையாவின் மனைவி இறந்து விட்டார்.
காலங்கள் சென்றது. பம்பாயிக்கும் கிராமத்துக்கும் தொடர்பே இல்லாமல் போய் விட்டது.
அகஸ்தீஸ்வரன் வரலாற்றை சொல்லி முடித்தார்.
“யப்பா சந்திரா உன் வரலாறு இது தான். போதுமா?” என்றார்.
சந்திரன் அமைதியாக இருந்தான். நமது முன்னோர்கள் வரலாறு இப்படி ஆகி விட்டதே.
இப்போது செல்லையா என்ன ஆனார். என்பதும் தெரியவில்லை. சந்திரன் தாயோ பம்பாயில் இறந்து விட்டார். சந்திரன் இளைஞனாக வந்துசேர்ந்து விட்டான்.
அதுவும் முத்துக்கிளியை காப்பாற்றும் முகமாக மீண்டும் அவர்களின் பூர்விக கிராமத்துக்கே வந்து விட்டான். அது மட்டுமல்லாமல் அவளை பெண் கேட்க சொந்த காரனாக வந்து விட்டான். ஆனால் இங்கே சாதிக்குள் சாதியாக பல பிரச்சனை வாட்டிக்கொண்டிருக்கிறது.
அய்யா. ரொம்ப சந்தோசம். சந்திரன் கண்களில் கண்ணீர் வடிந்தது.
“பராவாயில்லை சந்திரா? நீ ரொம்ப நல்ல பையன். உனக்கு உன் முன்னோர் வரலாறு சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறதே. இதுவே எனக்கு மிகவும் சந்தோசம்தான்”.
இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
பாளையங்கோட்டை மிலிட்டரி லைனில் கொண்டு அகஸ்தீஸ்வரன் ஸாரை விட்டான்.
“ஸார் உங்களை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது”.
“பராவாயில்லைடே. நீ நல்லவன். ஆனா நான் வாசு மூலமா நீ முத்துக்கிளியை விரும்புற. அதான் அவ குடும்பம் பின்னாலே அலையிறன்னு கேள்வி பட்டேன்”.
“ஆமாம் அய்யா”.
“நீ. அந்த பெண்ணுக்கு ஏத்தவன் தான். ஆனா இந்த ஊர் உலகம் உன்னை ஏத்துகாது டே”.
“சார்வாள். நான் ரத்னம் அய்யாக்கிட்டே கேட்பேன். அவிய நிச்சயம் என்னை மருமகனா ஏத்துக்கிடுவாவ”.
“ ஏத்துக்கிட்டா சரித்தான்”.
அலட்சியமாக கூறிவிட்டு “ஏடே ஒரு சாயா குடிச்சிட்டு போ என்றார். இன்னைக்கு தான் தான் காசு கொடுப்பேன்”. என அந்த பூவரசு மரத்து அடியில் உள்ள டீ கடைக்கு கூட்டி ச்சென்றார். ஒரு சம்சாவும் டீயும் வாங்கி கொடுத்தார்.
அதன்பின் அவர் வீட்டுக்கு சென்றார்.
காரில் ஏறி வேகமாக கிளம்பினான் சந்திரன்.
காரில் வரும் போதே யோசித்தான். என்ன செய்யலாம். இறுதி கட்டத்துக்கு வந்து விட்டோம். உண்டா இல்லையா என கேட்க வேண்டும்.
நமது தாத்தா ஒரிசினல் நாடராக இருந்தாலும் அவர் கட்டிய பெண் ஆங்கில கலப்பு. அவர்கள் இருவருக்கும் பிறந்த என் அப்பாவோ , ஒரு பிரமாணப்பெண்ணை கட்டி மொத்தமாக கலப்பினமாக மாறிவிட்டார். இப்போது நான் என்ன இனம் என்று எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நாடாரை எனக்கு ரொம்ப பிடிக்கிறது. அது தான் என் பூர்வீகம். என் தாத்தா வீரம், என் தாத்தா கட்டிக்காத்த இனம் பிடிக்கிறது. அவர் செய்த பனைத்தொழில் எனக்கு பிடிக்கிறது. அவர்கள் வணங்கிய தெய்வம் எனக்கு பிடிக்கிறது. இந்த மண் பிடிக்கிறது. எனக்கு மொத்தத்தில் இந்த மண்ணின் பெண் முத்துக்கிளியை பிடிக்கிறது.
இது 21 ஆம் நூற்றாண்டு. இங்கு சாதி மறுப்பு திருமணம் நிறைய நடக்கிறது. ஆனால் ரத்னம் அய்யா குடும்பம் அப்படியல்ல. அவர்கள் இனத்தின் மீது பற்று கொண்டவர்கள். எனவே அவர்கள் வீட்டில் பெண் கட்ட வேண்டும் என எனக்கு ஆசை இருந்தாலும் அவர்களுக்கு என் மீது பாசம் இருக்கலாம். ஆனால் மருமகனாக ஏற்றுக்கொள்ள மணம் வேண்டுமே இருக்குமா?
அதை நேரில்தான் கேட்க வேண்டும். என் அப்பாவும் அம்மாவும் பேசி திருமணம் முடிக்க வில்லை. அவர்களுக்கு வாய்ப்பு அப்படி அமைந்து விட்டது. என் தாத்தாவும் பாட்டியும் அப்படித்தான். நானும் முத்துக்கிளியை பார்ப்பேன் என நினைக்கவில்லை. கொரோனா எனும் கொடிய நோய் வந்து, அப்போது அவளை கூட்டிக்கு கொண்டு இங்கே வருவேன் என நினைக்கவில்லை. நடந்து விட்டது. என் சொந்த மண்ணுக்கு வந்து விட்டேன் . உறவுகளை பார்த்து விட்டேன். இ னிமேல் இந்த மண்ணில் இருந்து என்னால் வெளியே போக முடியவில்லை.
முத்துக்கிளி வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க தயார். ரத்னம் அய்யாவுக்கு பெறாத குழந்தையாக அனைத்து உதவியையும் செய்ய தயார். ஆனால் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமே.
“அடேய் மடையா இத்தனை நாள் முத்துக்கிளி முத்துக்கிளி என அலையிறாயே. அவள் உன்னை காதலிக்கிறாளா? அதை முதலில் நீ தெரிய வேண்டா? முதலில் அவளிடம் கேளடா. அவள் என்ன சொல்கிறாள் என் தெரிந்து கொள். வாசு தாத்தா கதை போல 18 வயதில் காதலித்து விட்டு 60 வயதில் போய் காதலிக்கிறாயா? என கேட்ட கதையாக இருக்கிறதே. இது கலியுகமடா? கம்யூட்டர் உலகமாடா? கேட்டு பாருடா?” அவன் மனம் அவனை விரட்டியது.
யோசித்தான்.
அப்படியென்றால் முதலில் முத்துக்கிளியிடம் பேச வேண்டும்.
எப்போது பேசலாம். அதற்கு உடனே வாய்ப்பு கிடைத்தது.
முத்துக்கிளி வீட்டுக்கு சென்றான்.
அவள் தனியாக இருந்தாள்.
வாசலில் போய் என்றான்.
“முத்துக்கிளி”.
அவசரமாக வாசலுக்கு வந்தாள்.
“ஒரு நாளும் வராதவன். வாசலுக்கு வந்து நிற்கிறான்.
என்ன?”
“ஒண்ணுமில்லை உங்கிட்டே கொஞ்சம் தனியா பேசணும்”.
அமைதியாக இருந்தாள்.
“உள்ளே வரலாமா?”
“ம்”.
தர்சாவுக்கு வந்தான். “உட்காரலாமா?”
“ம்”.
உட்கார்ந்தான். “முத்துக்கிளி. நான் இப்போ என்னோட வாழ்க்கையில கிளைமாக்சுக்கு வந்துட்டேன்”.
அமைதியாக இருந்தாள்.
“நான் உண்மையிலே உங்க சாதி கிடையாது. உங்க சொந்தகாரங்க. எங்க பூர்வீகம் அவ்வளவு தான். மற்றபடி என் தாத்தா, என் அப்பா எல்லாம் சாதி மாரி கல்யாணம் செஞ்சு இப்போ கலப்பா மாறிட்டாங்க”.
“தெரியும்?”
“தெரியுமா? இதுவரை எல்லாம் தெரிஞ்சி வச்சிக்கிட்டுத்தான் இந்த பெண் இப்படி கள்ளியாக இருந்து இருக்கிறாள்”.
அய்யோ. பெண் மனது ஆழம் என்பார்கள். இந்த பெண் மனது அதள பாதாளம் போலத் தெரிகிறதே?
இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
மௌனத்தினை கலைத்தாள் முத்துக்கிளி. “சரி சொல்லுங்க”.
“என்ன சொல்ல”.
“இல்லை நீங்க என்ன சொல்ல வந்தீங்க அதை சொல்லுங்க”.
முத்துக்கிளியும் பூட்டி வைத்த எல்லாவற்றையும் இன்றோடு போட்டு உடைத்து விட வேண்டும் என்று நினைத்து விட்டாள்.
“இல்லை. முத்துக்கிளி நான் உன்னை காதலிக்கிறேன்”.
“தெரியுமா?”
“தெரியுமா?”
“ஆமாம்”.
“அப்படின்னா நீ என்னை காதலிக்கிறாயா?”
சிரித்தாள் முத்துக்கிளி. அவள் இப்படி சிரித்து இப்போது தான் பார்க்கிறான்.
“என்ன முத்துக்கிளி என்னை காதலிக்கிறாயா?”
“எப்படி நீங்க நான் உங்களை காதலிக்கிறேன்னு நினைக்கீறீங்க”.
மனது உடைந்து போனான் சந்திரன். இல்லை. நாம கிட்டத்தட்ட மும்பையில் இருந்து இந்த ஊருக்கு வரும் போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது. உங்க மாமா பனையில் இருந்து விழுந்த போது உங்களோடு உங்களாக உதவிக்கு இருந்தது. உங்க அப்பா நெஞ்சுவலியில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது. இப்படி நிறைய சம்பவங்கள் உனக்காகவே நான் செய்தேனே. அப்போதெல்லாம் நீ என்னை காதலிக்கிறாய் என்று தான் நினைத்தேன்”.
சிரித்தாள் முத்துக்கிளி.
“இங்க பாருங்க. நீங்க செஞ்ச உதவியெல்லாம் நல்ல பண்புள்ள ஒரு மனிதன் செய்யுற வேலை. நீங்க நல்ல பண்புள்ள மனிதர். அதனால எங்களுக்கு இவ்வளவு உதவி செஞ்சிருக்கீங்க”.
“முத்துக்கிளி”.
“உங்க பண்ணை நாங்க மதிக்கிறோம். உங்களை எங்க குடும்பத்தில தெய்வமா கடைசி வரைக்கும் போற்றுவோம். ஆனால் உங்களை நான் ஏன் காதலிக்கணும்”.
எழுந்தான் சந்திரன். “என்ன சொல்றீங்க முத்துக்கிளி”.
“உண்மையைத்தான் சொல்லுதேன். எங்க குடும்பத்துக்கு நீங்க நிறைய சேவை செஞ்சிருக்கீங்க. ஏன் ஒரு அண்ணனை இந்த குடும்பத்தை தாங்கி பிடித்து இருக்கலாம். இல்லாட்டி எங்க குடும்பத்தில் தாய்மாமாவை கூட நீங்க இருந்திருக்கலாம். ஆனால் ஏன் நீங்க எனக்கு காதலனா இருக்கணுமுன்னு ஆசைப்படுறீங்க”.
யோசித்தான்.
“இல்லை. உங்க அப்பா கூட என் மேலே நிறைய பாசம் வச்சிருக்காரு. பாசமாகவும் இருக்காரு”.
“அவரு உங்களை அவரோடு மருமகனா ஏத்துக்கிறேன்னு சொன்னாரா?”
சவுக்கடி அவன் முதுகில் விழுவது போலவே இருந்தது.
எழுந்தான். கதவருகே வந்தான்.
“இங்க பாருங்க. நான் உங்களை காதலிக்கவே இல்லை . ஆனால் கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கேன்”.
ஆயிரம் நட்சத்திரங்கள் அவன் தலையில் கொட்டியது போல இருந்தது.
முத்துக்கிளி சொன்னாள்.
“உண்மையிலேயே நீங்க நல்ல மனிதர். எங்க குடும்பத்துக்கு காவலா இருந்து இருக்கீங்க. எங்க அப்பா உயிரை காப்பாத்தியிருக்கிங்க. என் மானத்தை காப்பாற்றியிருக்கீங்க. உங்களை எனக்கு பிடிக்கும். ஆனால் காதலிக்க வில்லை”.
திரும்பவும் குழப்பமாக இருந்தது.
“முத்துக்கிளி ரொம்ப குழப்பாதீங்க. நீங்க என்னை கல்யாணம் முடிக்க தயாரா இருக்கேன்னு சொல்றீங்க. ஆனால் காதலிக்கவே இல்லைன்னு சொல்லுதீங்க. தெளிவாத்தான் பேசுநீங்களா?”
“ம். ரொம்ப தெளிவாக பேசுறேன்”.
“இது வரைக்கும் இப்படி பேசாத முத்துக்கிளி இப்படி பேசுகிறாள். அதுவும் பெரிய ஞானி போல பேசுகிறாள்”.
“எங்க அப்பாவை மீறி நான் எதுவுமே செய்ய மாட்டேன். எங்க அப்பாவுக்கு தலை குனிவு ஏற்படுத்துற எந்த காரியமும் எனக்கு வேண்டாம். காதல் என்பது ஆண் பெண் என்ற இரு இனத்துக்கு வரும் ஒரு செயல். அவ்வளவுதான். அவர்களே கல்யாணம் பண்ண வேண்டும் என்ற சட்டமெல்லாம் இல்லை”.
சந்திரனுக்கு தலைச்சுற்றியது.
“இந்த ஊரில் எங்க அப்பா பெரிய மனிதர். எங்க சாதியில் தலைவர். எங்க மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் எங்க அப்பா சொன்னா எல்லோரும் கேட்பாவ. உங்க குடும்ப வரலாறு இப்போ எல்லோருக்கும் தெரியும். வாசுதாத்தா கொட்டு போட்டு அடிச்சிட்டாரு. அவரை மீறி நாங்க எதுவும் செய்ய முடியாது. இதையும் மீறி எங்க அப்பா உங்களைத்தான் கட்டணுமுன்னுசொன்னா நான் மாட்டேன்னுசொல்ல மாட்டேன்”.
சந்திரனுக்கு புரிந்தது.
அப்படியென்றால் ரத்னம் அய்யா சரி என தலையாட்டினால் சந்திரன் & முத்துக்கிளி திருமணம் நடைபெறும். அப்படியென்றால் அவள் அப்பாவிடம் பேசச்சொல்கிறாள்.
காதல் இருக்கிறது. ஆனால் அது நிறைவேற வேண்டும் என்றால் அப்பாவிடம் பேசுங்கள் என்கிறாள்.
“முத்துக்கிளி உங்க அப்பா நிச்சயம் நம்ம திருமணத்துக்கு சம்மதிப்பார்”.
“அப்படின்னா ஓக்கே”.
“ஒருவேளை அவர் சம்மதிக்கலைன்னா?”
“குட்பை”
“வெகுளியாக சொல்கிறாளா? இல்லை. காரியமாக பேசுகிறாளா?” ஒன்றும் புரியவில்லை.
ஆனாலும் அய்யாவை பார்த்து பேசுவோம். என நினைத்து அவன் அறையை நோக்கி நகர்ந்தான்.
முத்துக்கிளி சாவியை எடுத்துக் கொடுத்தாள். “இந்தாங்க. அந்த அறை பூட்டிக்கிடக்கிறது. சாவியை வைத்து திறந்து கொள்ளுங்கள்” என்றாள்.
இன்று அவளுடைய நடவடிக்கையே மாறி விட்டது.
இந்த முத்துக்கிளி மட்டும் நமக்கு கிடைத்து விட்டால் வாழ்க்கையில் எல்லாமே கிடைத்த விடும். ஆனால் கிடைப்பாளா?
கதவை திறந்தான். தனது பேன்ட சர்டை கலைந்து விட்டு லுங்கிக்கு மாறினான். அடுத்த நிமிடம் பம்பு செடடுக்கு வந்து நன்றாக குளித்தான். கிட்டத்தட்ட 1 மணி நேரம் குளித்து இருப்பான்.
பாவம் இது தான் அவன் குளிக்கும் கடைசி நாள் என்று அப்போது அவனுக்கு தெரியவில்லை.
பையன் ஓடியே வந்தான். “அண்ணாச்சியோ. நீங்க வந்திருக்கீங்கன்னு அக்கா சொல்லி விட்டாவ. அதான் ஓடியே வந்தேன். கொஞ்சம் இருங்க. அக்கா மீன் சாப்பாடு சமைச்சிட்டாவ. இப்போ கொண்டு வாறேன்”. என்று மீண்டும் பண்ணை வீட்டை நோக்கி ஓடினான்.
சிறிது நேரத்தில் சுட சுட சாப்பாடு வந்தது.
முத்துக்கிளி கைவண்ணம் இன்று மிகச்சிறப்பாக இருந்தது.
நன்றாக சாப்பிட்டான். இந்த சாப்பாடு இனி நமக்கு நிரந்தரமாகி விடும் என நினைத்தான்.
ஆனால் இன்று தான் முத்துக்கிளி சாப்பாடு கடைசி சாப்பாடு என அவனுக்கு புரியவில்லை.
சாப்பிட்டு முடித்து விட்டு கொஞ்சம் அசந்து தூங்கி விட்டான். அப்போது தான் பையன் வந்து எழுப்பினான்.
“அண்ணாச்சியோ. அய்யா கூப்புடுதாவ. நீங்க காரை எடுத்துட்டு வரணுமாம். அய்யா பக்கத்து டவுணுக்கு செக்கப்புக்கு போகனுமாம்”.
ஆகா. நல்ல சந்தர்ப்பம். இன்னைக்கு அய்யா கிட்ட பேச வேண்டியது தான். நல்ல சந்தர்ப்பம் . இதை நழுவ விட்டால் நமக்கு வாய்ப்பு கிடைக்காது.
இருப்பதில் நல்ல சட்டை ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டான். காரை எடுத்து பண்ணை வீட்டு முன்னால் போய் விட்டான்.
சிறிது நேரத்தில் அய்யா வந்து விட்டார்.
கார் கிளம்பியது.
போகும் போது இருவரும் பேசவில்லை.
ஆஸ்பத்திரி செக்கப் முடிந்தது.
டாக்டர் சொன்னார். இவர் அரசு ஆஸ்பத்திரில் ரத்னம் அய்யாவுக்கு இதய சிகிச்சை செய்தவர். தனியாக கிளினிக் வைத்திருக்கிறார். அவரிடம் தான் காட்டினார்கள்.
“தம்பி. உங்க மாமாவுக்கு இப்போ பிரச்சனை எதுவும் இல்லை. சுகர் இல்லை. பிரசர் இல்லை. இதயம் நல்லா வேலை செய்யுது. இப்படியே நீங்க கவனிச்சிக்கிட்டா போதும் இன்னும் 20 வருசம் உங்க மாமா உயிரோட இருப்பார்” என்று சிரித்தார்.
அதற்குள் ரத்னம் வெளியே வந்தார்.
“அய்யா நீங்க உண்மையிலேயே ரொம்ப கொடுத்து வைத்தவர். நல்ல மருமகன். ஆஸ்பத்திரியில் இருக்கும்போது நன்றாக கவனித்துக்கொண்டார். இதுபோல் மருமகன் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்”.
ரத்னம் சிரித்தார்.
“அவன் மருமகன் மட்டும் இல்லையா? என்னோட தெய்வம்” என்றார் ரத்னம்.
சந்திரனுக்கு மீண்டும் சந்தோசம். ஆக. டாக்டர் நம்மை மருமகன் என்கிறார். அதையும் அய்யா ஏற்றுக்கொண்டார். அப்படியென்றால் நமது திருமணம் நிச்சயம் ஆகி விட்டது. விரைவில் டும் டும் டும் தான்.
உற்சாகமாக அய்யாவின் உடமைகளை எடுத்துக்கொண்டு காருக்கு வந்தான். இதற்குள் இருட்டி விட்டது. “ஏதாவது சாப்பிடுறீயா அய்யா” என்றார் ரத்னம்.
“வேண்டாமுய்யா. வீட்டில போய் பார்த்துக்கொள்ளலாம்” என்றான்.
சந்திரன் பாவம். அவன் எல்லா பிரச்சனையும் சுமூகமாக முடிந்து விடும். இன்று வீட்டில் அமர்ந்து மூன்றுபேரும் ஒன்றாக சாப்பிடலாம் என நினைத்தான். ஆனால் அது நடக்குமா?
கார் கிளம்பியது.
“டீ காபி ஏதாவது சாப்பிடுமாய்யா” என்றார். “இல்லைய்யா. வீட்டுக்கு போயிடலாம்”.
“சரி. உன் இஷ்டம்”.
கார் கிளம்பியது.
ரத்னம் இப்போது பேச ஆரம்பித்தார்.
“சந்திரன் அய்யா. நீ பெரிய மனுசன். ரொம்ப பெரிய மனுசன். என் பொண்ணு சொன்னா. நீ அவக்கிட்ட பேசுனதை என் கிட்ட சொன்னா”.
“அய்யா”.
“ஆமாம். உன்னை என் மருமகனா அடைய நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கனும்”.
சந்திரன் மனதில் பூரிப்பு.
“என் பொண்ணுக்கு கூட உன்னை பிடிச்சிருக்கு. அவளை விட எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்”.
அய்யா என்ன சொல்ல வருகிறார்.
“ஆனால் இந்த உலகம் ரொம்ப பொல்லாத உலகம். இந்த உலகம் நம்மை ஏத்துக்கணுமே அய்யா”.
சந்திரனுக்கு அவர் பேச்சு மர்மமாக இருந்தது.
“அய்யா நீ கொடை விழாவில என்னை பார்த்து இருப்ப. நம்ம குடும்ப கோயிலா இருநதாலும் ஊர்கோயிலு கொடை விழாவா இருந்தாலும் நான் தான் நாட்டாண்மை. முன்னுக்கு நிப்பேன். என் வழியில தான் எல்லோரும் போவாவ. நான் சொல்றதை தான் கேட்பாவ. அதற்கு காரணம் என்ன தெரியுமா? இந்த சமுதாயத்தில மிகநம்பிக்கைகுரியவனா நான் இருக்கிறது தான்”.
சந்திரன் மனது பட படவென அடித்தது. “சம்மதம் சொல்லப்போகிறா? இல்லை மறுக்கப்போகிறா?”
“உன்னை என் மரு மகனா நான் ஏத்துக்க தயாரா இருக்கேன்”.
சந்திரன் சந்தோசமாய் திரும்பினான்.
“ஆனா முத்துக்கிளிக்கு மாப்பிள்ளையா இல்லை”.
யாரோ பிரம்பால் சந்திரன் முதுகில் விளாசுவது போல இருந்தது.
“இங்க பாரு சந்திரா. நீ என் வீட்டு பிள்ளை. எப்போதுமே என் வீட்டு பிள்ளைதான். உனக்கு இந்த வீட்டில எல்லா உரிமையும் உண்டு. நீ தான் என் மகன் . மருமகன் இல்லை. முத்துக்கிளி கல்யாணத்துக்கு நீ தான் அண்ணணா இருந்து மாப்பிள்ளைக்கு எதிர்மாலை கொண்டு போகணும். அப்படித்தான் என் மனதில் நீ இருக்கியே தவிர வேறு ஒண்ணும் இல்லை. உன்னை என் மருமகனா என் மனசுல எப்போதுமே ஏத்துக்கலை. அதனால அந்த நினைப்பு இருந்தா இன்றோடு விட்டுரு”.
முகத்தில் அடித்தாற் போல சொல்லி முடித்தார்.
“போட போட போ. கூறு கெட்ட பயலை உனக்குபெண் கிடையாதுடா என அவர் வெளிப்படையாக பேசியிருக்கலாம். இதுக்குபோய் மகன். அது இதுன்னு கதை விடுறாரு மனுசன். இதுக்கு வாசு தாத்தா எவ்வளவோ பராவாயில்லை. இதற்கிடையில இவரு எனக்கு சொத்து எழுதி வைக்க போறாரு. அந்த சொத்துக்காக நான் இதுவரைக்கு இங்கே கிடந்தேன்”.
ஒருவகையில் சொல்லப்போனால் முத்துக்கிளியை கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருந்தாலும் இந்த குடும்பத்தினை அதிகம் நேசித்தான். தனது பூர்விகமான இனத்தினை நேசித்தார். இந்த பூர்வீக பூமியை நேசித்தான். நதியை, நதிக்கரை மணலை, பனங்காடுகளை, இங்கே விளையாடும் குழந்தைகளை. மிருகங்களை நேசித்தான்.
அதே வேளையில் இந்த குடும்பத்தையும் நேசித்தான். அவர்கள் இவன் மீது காட்டிய பாசமும் சந்தர்ப்பமும் முத்துக்கிளியை திருமணம் முடிக்க வேண்டும் என ஆசைப்படடான். ஆனால் அந்த காதலை இவர்கள் பகடை காயாக அல்லவா பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சாதி என்பது அவ்வளவு கொடுமையா?
இப்போது ரத்னம் பேசினார்.
“சாதி விட்டு சாதி திருமணம் முடிச்சாரே உன் தாத்தா ரங்கூன் ராஜத்துரை நல்லவரு தான். இந்த சாதிக்காக உழைத்தவர் தான் ஆனால் அவர் சாதி மாறி கல்யாணம் முடிச்சிட்டு கடைசி வரைக்கும் இந்த ஊரோட சாதி சனத்தோடு சேர முடியலை. வந்த மறுநாளே செத்து போனாரு”.
சந்திரன் அமைதியாக இருந்தான்.
“உன் அப்பா வேறு சாதி பெண்ணை திருமணம் முடிச்சிட்டு போனாரே. கடைசி வரைக்கு அவர் இந்த மண்ணுக்கு வரவே இல்லை.”
யோசித்தப்படி அதே நேரம் மிக தீர்க்கதனமாக பேசினார்.
“சாதிக்கிறது கிராமத்தில முக்கியமானது”.
“இங்க ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் மாமன் மச்சான், என் அத்தை மகன், மாமன் மகள் என அனைவரும் சந்தோசமாக இருப்பார்கள். அந்த பாசம் சாதி மாறி திருமணம் முடிச்சா வருமா? வரவே வராது. என் பெண் அதுக்கப்புறம் எங்க உறவுக்குள்ளே ஒட்டவே முடியாது”.
“அட பாவமே இவரு பெரிய மனுசர் என்று நினைத்தோம். இவ்வளவு பெரி சாதி வெறியறா இருக்காரே”. சந்திரன் முதலில் சாதி தலைவனாக ரத்னம் அய்யாவை பார்த்தான்.
“ஒரு சமயம் எங்க ஊரு பெண் ஒருத்தி பூ தொடுக்கிற ஒரு சாதி கார பையனை லவ் பண்ணி கல்யாணம் முடிச்சிட்டா? அதுக்கப்பறம் அவன் அப்பா கோயிலுக்கு வந்தா. பூ பண்டாரம் வந்திட்டாரு. பூ பண்டாரம் வந்துட் டாருன்னு கேலி பண்ணுவானுவ. அதுக்கு பொறவு அந்த மனுசன் கூட்டம் கூடுற இடத்துக்கு வரவே மாட்டாரு. அப்புறம் அதை நினைச்சு வெக்கி தலை குனிஞ்சி செத்தே போயிட்டாரு. எனக்கும் அப்படியொரு நிலமை வரவேண்டுமுன்னு நினைக்கியா?”
சந்திரன் யோசித்தான்.
“என்ன யோசிக்க. ஒண்ணுமில்லைய்யா”.
“இங்க பாருய்யா. சாதி சாதி தான். இந்த சமூகத்தில ஒரு காலத்தில தொழிலுக்காக சாதி உருவாச்சின்னு சொல்லலாம். ஆனா இன்னைக்கு சாதிங்கிறது தமிழ்நாட்டு கிராமங்களை மிகவும் , ரொம்ப ஆழமாக கால் ஊனி யிருக்கு. அதை திருத்தவோ இல்லை அழிக்கவோ முடியவே முடியாது. ஒரு வேளை தலைமுறை தாண்டி இது நடக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை . சாதிங்கிறது இருக்கு. அதை யாராலும் மறக்கவே முடியாது”.
சந்திரன் அமைதியாக காரை ஓட்டினான்.
முடிந்தது. எல்லாமே முடிந்தது. முத்துக்கிளி காதல் முறிந்தது. அந்த கிளி பறந்து விட்டது. இனி சந்திரனுக்கு அது கிடைக்காது. பேரே பொருத்தமில்லை. சந்திரன். அவன் வானத்தில் இருக்கிறான். இந்த கிளியோ மரத்துக்கு மரம் பூமியில் தாவிக்கொண்டிருக்கும் பறவை . நிச்சயம் இரண்டு ஒன்று சேர முடியாது.
ஆனாலும் சந்திரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் என ஆசை தூண்டியது.
“அய்யா. உங்க கூடவே நான் ஒட்டிக்கிட்டே அலைஞ்சனே அப்போ என்னை பார்த்து. நீ ஏன்யா இங்க இருக்க உனக்கு ஆயிரம் வேலை இருக்கும். உன் கூட வந்த இளங்கோ டிரைவர் போயிட்டான். நீயும்போன்னு என்னை விரட்டி விட்டிருககலாமே. ஆனா நீங்க அப்படி விடலையே”.
ரத்னம் வாய் பேச முடியாமல் இருந்தார.
“நான் தான் வேண்டாமுன்னு கிளம்பிட்டேன். பனையில இருந்து லிங்க நாடார் விழுந்துடாருன்னு கூப்பிட்டீங்க. அதுக்கப்புறம் என்னை வீட்டோட வச்சிக்கிட்டீங்க. உங்களுக்கு நெஞ்சு வலி வந்தது. அப்போது உங்க கூடவே இருந்தேன். அப்போ உனக்கு ஏண்டா இந்த வீண்வேலை. எனக்கு சாதி சனம் இருக்கு. நீ யாரோ. எவரோ. போயிருன்னு விரட்டியிருக்கலாமே அய்யா. என்னை அய்யா அய்யான்னு சொல்லி பாசத்தை காட்டி கூடவே வச்சிக்கிட்டிங்களே. அதுக்கு அர்த்தம் என்ன?”
ரத்னம் கண்களில் கண்ணீர் வந்தது. “அய்யா. உன்னை என் மகளுக்கு மனம் முடித்து வைக்கணுமுன்னு அந்த காலத்தில நினைச்சேன். அதனால என் கூட வச்சிகிட்டேன். ஆனா அதுக்கப்புறம் உலக நடப்புகளை அலசி ஆராய்ஞ்சி பாத்தேன். அது சரி படாதுன்னு முடிவு பண்ணிட்டேன்”.
“அப்படின்னா என்னை காதல் என்கிற புனிதமான அந்த மொழியை முன்னுருத்தி ஏமாற்ற நீங்களும் ஒரு காரணமா இருந்தீட்டிங்க”.
ரத்னம் அமைதியாக இருந்தார்.
“அய்யா வாசு தாத்தா எவ்வளவோ பராவாயில்லை. அவர் என்னை அடிக்கடி துரத்திக்கிட்டே இருந்தார். அவர் சரியாத்தான் இருந்து இருக்காரு. ஆனா நான் தான் சரியா இல்லை. உங்களை மலை போல நம்பியிருந்தேன். முத்துக்கிளி கூட பராவாயில்லை. என்னை விடுங்க எங்க அப்பா கிட்ட சம்மதம் வாங்குங்கன்னு சொல்லிட்டா. ஆனால நீங்க சாதிங்க வன்மத்தை காட்டி என் மனசை நோகடிச்சிட்டீங்க”.
ரத்னம் பேச வில்லை.
“அய்யா. உனக்கு பெண் கிடையாதுடா? அந்த தகுதி உனக்கு இல்லைடா. நாங்க வசதியானவங்க. நீ கார் டிரைவர். எங்களுக்கு பங்களா போல வீடு இருக்கு. ஆனா உனக்கு இல்லை. நீ அனாதை நாங்க குடும்பத்தோட இருக்கோம். அப்படி இப்படின்னு எத்தனையோ காரியம் இருக்கு. ஆனா அதையெல்லாம் சொல்லாமா? நீங்க என் வாழ்க்கையில விளையாடியிட்டீங்க”.
ரத்னம் அமைதியாக இருந்தார்.
இதற்குள் வீடு வந்தது.
காரை விட்டு அவரை இறக்கினான். வீட்டில் கொண்டு ஈசி சேரில் உட்கார வைத்தான். அவருக்கு பேன் காற்றை போட்டு விட்டான். அப்படியே சாய்ந்து அமர்ந்து விட்டார்.
உடமைகளை கொண்டு வந்து உள்ளே வைத்தான்.
முத்துக்கிளி வந்தாள்.
“என்னாச்சி”
“உங்கப்பா நல்லா இருக்காங்க. இன்னும் 20 வருசம் கவலை இல்லை. டாக்டர் சொல்லிட்டாரு. பொறுப்பா உங்கிட்ட ஒப்படைச்சிட்டேன். உங்கப்பாவை நல்லா பாத்துக்காங்க முத்துக்கிளி”.
முத்துக்கிளி அப்பாவை பார்த்தாள்.
அவள் தலையை அசைத்தார்.
அந்த அசைப்பு முத்துக்கிளிக்கு புரிந்தது.
“சரி. சாப்பிட வாங்க” சந்திரனை அலைத்தாள்.
“ம். வயிறு நிறைஞ்ச மாதிரி இருக்கு. யார் யார் எங்க இருக்கணுமோ. அங்கத்தான் இருக்கணும். நான் வாறேன்”.
கிளம்பினான். வீட்டில் போய் துணி மணிகளை எடுத்தான்.
காரை கிளப்பினான்.
தம்பி ஓடியே வந்தான். “அண்ணாச்சியோ சாப்பிடாம போறீய”.
“ம். சாப்பிட்டுட்டேன்”.
ரத்னமும், முத்துக்கிளியும் வெளியே வந்து அவனுக்கு கை அசைப்பார்கள் என நினைத்தான். ஆனால் கதவை சாத்தி விட்டார்கள்.
சிறுவன் மட்டும் கையை அசைத்தான். “அண்ணாச்சியோ சீக்கிரம் வந்திருங்க. நாளைக்கு காலையில நல்ல சாப்பாடு கிடைக்கும்”.
பாவம் என்னை சாப்பாட்டு ராமன் என நினைத்து விட்டான்.
கார் கிளம்பியது.
“என்ன செய்யப்போகிறோம். எங்கே போகப்போகிறோம்”. எதுவும் தெரியாமல் கார் கிளம்பியது.
போன் சிணுங்கியது.
ரத்னம் அய்யாத்தான் பேசினார்.
போனை எடுத்தால் என்ன பேசுவார். சின்ன நம்பாசை “ஒரு வேளை காதலுக்கு பச்சைகொடு காட்டுவாரா?”
(முத்துக்கிளி தொடர்ந்து கூவுவாள்)


