தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதால், அதனை உடனடியாக மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் காசிலிங்கம் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் மற்றும் மயானப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதி வழியாகச் செல்லும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இக்கடையால் அப்பகுதியில் வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இது தொடர்பாக ஏற்கனவே 5 முறை மனுக்கள் அளிக்கப்பட்டும், பொதுமக்கள் சார்பில் 2 முறை ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரிகளுக்குத் தவறான தகவல்களை அளித்து வருவதாகவும், எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரடியாக ஆய்வு செய்து இந்தக் கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


