திருவைகுண்டம் வடகால் பாசனப் பகுதிகளில் கருகி வரும் வாழைப் பயிர்களைக் காப்பாற்ற, பாபநாசம் அணையிலிருந்து உடனடியாகத் தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வடகால் பாசனத்தில் உள்ள பேய்க்குளம், குலையன்கரிசல், பொட்டல்குளம், கோரம்பள்ளம் உள்ளிட்ட குளங்களில் தண்ணீர் இல்லாத காரணத்தால், அந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் இதர பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மேலும், கால்நடைகளுக்குக் குடிநீர் கூட கிடைக்காத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதில் தலையிட்டு, கருகும் பயிர்களைப் பாதுகாக்கவும், கால்நடைகளின் தாகம் தீர்க்கவும் பாபநாசம் அணையிலிருந்து வடகால் பாசனத்திற்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் எனத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் பா. புவிராஜ் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.


