சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் முழு உருவ வெண்கல சிலை நிறுவ வல்லநாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் நினைவு மணிமண்டபம் உள்ளது. சுந்தர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் தளபதியாக இருந்தார். இந்த மண்டபத்தில் வெள்ளையத் தேவனின் மார்பளவு வெண்கலச் சிலை அமைந்துள்ளது. இந்த சிலைக்கு வருடம்தோறும் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வல்லநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் வெள்ளையத் தேவனின் வாரிசுகளும் இந்த சிலைக்கு பதிலாக வெள்ளையத் தேவனின் முழு திருவுருவ சிலையை வெண்கலத்தில் நிறுவ வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2020 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு வெள்ளையத்தேவனுக்கு ஒரு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் மணிமண்டபத்தில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் பெரிய மீசையுடன் உறுதிய வாளுடன் குதிரை மீது அமர்ந்து
வரும்படியான சிலை ரூ.39.75 லட்சம் மதிப்பில் அமைக்கும் பணி சென்னையில் நடந்து வந்தது.
நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் சென்னையில் இருந்து இந்த முழு வெண்கல சிலை கொண்டுவரப்பட்டது. இன்று காலை வல்லநாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இந்த சிலைக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மலர் தூவியும், மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் மணி மண்டபத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டது. விரைவில் இந்த சிலையை திறக்க முதல்வர் முக ஸ்டாலின் வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


