நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கால் பலத்த சேதம் ஏற்பட்டது. குறிப்பாக, ஏரலில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளிலும் பஜார் பகுதிகளிலும் மழை வெள்ளம் புகுந்தது. இதனால், வணிகநகராக விளங்கும் ஏரலில் சுமார் 600 க்கும் மேற்பட்ட கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஏரலில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு சேவா பாரதி அமைப்பின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வின் போது சிறுகுறு வியாபாரிகளான சலூன் கடைக்காரர்களுக்கு அமரும் இருக்கை, டீக்கடை மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அடுப்பு, சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை இயந்திரங்கள், பூக்கடைக்காரர்களுக்கு மேஜைகள் உள்பட வியாபாரத்திற்கு தேவையான பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஆர்.எஸ்.எஸ் கோட்டத் தலைவர் காமராஜ், பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.


