வாழ்க்கையில் தடைகளையெல்லாம் நொறுக்கி விட்டு நம்பிக்கையோடு உயர்ந்த இடத்திற்கு பயணிக்க வேண்டுமென அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (11.01.2025) நடைபெற்ற 2024-25ம் ஆண்டிற்கான பள்ளி ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பேசும்போது தெரிவித்ததாவது: முதலில் இவ்விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அரசுப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் இடைநிற்றலின்றி பள்ளிப்படிப்பை முடித்து உயர்க்கல்விக்குச் செல்ல வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முக்கிய நோக்கமாகும். இதற்காகவே பல்வேறு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்புகளை எல்லாம் மாணவிகளாகிய நீங்கள் தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களைப் போன்று நானும் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவன் தான். இப்பள்ளியை போலவே நான் படித்த பட்டுக்கோட்டை அரசு பள்ளியும் தகைசால் பள்ளியாக மாறியுள்ளது.
இப்பள்ளியின் ஆண்டு அறிக்கை வாசிக்கும் போது இங்கு பயின்ற மாணவிகள் மருத்துவர்களாக, ஆசிரியர்களாக ஆகி இருப்பது என்பது நமக்கு மிகவும் பெருமை. பள்ளிக் கூடம் என்பது ஒரு கட்டிடம் அல்ல, நாம் பள்ளிக்கூடத்தைக் கட்டிடமாக என்னி எப்பொழுதுமே எடை போட முடியாது. உண்மையில் பள்ளிக்கூடம் என்றால் அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் ஆசிரியர்கள் இவர்கள் இருவர்தான் பள்ளிக்கூடம் எங்கு இருக்கிறார்களோ அதுதான் பள்ளிக்கூடம், இது போன்ற ஒரு மரத்தடியில் இருந்தாலும்கூடஅது தான் பள்ளிக்கூடம், அரசுப் பள்ளி தரக்கூடிய கற்பித்தல் திறன் கற்றல் திறனை வைத்து தான் நிச்சயமாக அரசுப் பள்ளிகளை அனைத்தையும் மதிப்பிட வேண்டும்.
நமது ஆசிரியர்களும் மாணவர்களும் அவர்களுக்கு இடையே நடக்கக்கூடிய கற்பித்தலும் அவர்களுக்கு இடையே நடக்கக்கூடிய உரையாடல் பரிமாற்றங்களும் தான் ஒரு பள்ளியினுடைய தரத்தை உண்மையாக எடுத்துச் சொல்ல முடியும். கற்பித்தல் என்பது ஆசிரியர்களிடமிருந்து புறப்பட்டு அது மாணவனை சென்றடைந்து அவருடைய அறிவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது அல்லவா, அதுதான் உண்மையான கல்வி, அது தான் வளர்ச்சியை தரும்.
எனவே, நாம் எத்தனை விதமான பழைய ஒரு கட்டிடத்தில் அமர்ந்திருந்தாலும் ஒரு சிறந்த ஆசிரியர் ஒரு இடத்தில் இருந்து கற்பித்தால் அந்த வகுப்பறையே மிகச்சிறந்த வகுப்பறை அந்தப் பள்ளியை மிகச் சிறந்த பள்ளியென்றால் இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்ட்ல இருக்கக் கூடிய பள்ளியை கற்பித்தலை செயல்படுத்துகிறார்களோ அதை எல்லாம் சொல்லித் தரக்கூடிய பள்ளிதான் பள்ளியைத் தவிர, இன்டர்நேஷனல் ஸ்டாண்டல இருக்கக்கூடிய டைல்ஸ், கிரானைட் போன்றவற்றை பதிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஒரு பள்ளி, ஒரு இன்டர்நேஷனல் பள்ளி என்று என்னால் கருத முடியாது. ஒரு நல்ல வகுப்பறை சூழலையும் சிறந்த கற்பித்தல் நடைமுறைகளையும் நமது மாணவர்களுக்கு கொடுத்து வரக்கூடிய நம் ஆசிரியர்களை நான் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன்.
குறிப்பாக, பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பெண் கல்விக்கான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து செயல்படுத்திவருகிறது. பெண் குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து உயர்கல்வி பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் புதுமைப்பெண் என்ற அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியதன் காரணமாக கல்வியையும் முடிக்கக்கூடிய கல்லூரி மாணவிகளை நாம் பார்த்திருக்கிறோம். நமது தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கக்கூடிய புதுமைப் பெண் திட்ட தொகையை மட்டுமே வைத்து உயர்கல்வி முழுவதையும் படிக்க முடியும் என்பதை மாணவிகள் நிரூபித்து இருக்கிறார்கள்.
எனவே, நீங்கள் எல்லாம் இங்கிருந்து அடுத்த கட்டத்திற்கு போவதற்கான அனைத்து வசதிகளையும் உங்களுக்கு முற்றிலும் எந்தவிதமான பொருளாதார நெருக்கடி இல்லாமல் கல்வியை எப்படி பள்ளிக்கல்வியில் நாம் கொடுக்கிறோமோ, அதே போன்று நாம் கல்லூரியிலும் கொடுக்க முடியும் என்பதை நமது தமிழ்நாடு அரசு நிரூபித்திருக்கிறது. பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகள் மாணவர் மனசு என்ற பெட்டியில் தங்களது நலன் சார்ந்த கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
அதனைப் பள்ளி தலைமையாசிரியர்கள் குறித்து வைத்துக்கொண்டு அந்நிலைமையை மாற்ற வேண்டும். மாணவர்கள் தங்கள் எதிர்காலம் 12 ம் வகுப்பை எட்டும் போது தான் உங்கள் சிந்தனை தெளிவான பாதையை நோக்கி செல்ல வேண்டும். நான் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று படிக்க வில்லை. 12 ம் வகுப்பு படித்த முடித்த பிறகு வேலைக்கு செல்ல வில்லை. மேலும், குடும்ப சூழல் காரணமாக வாழ்க்கையில் நான் கஷ்டப்பட்டேன்.
கலெக்டர் அலுவலகத்திற்கு பலமுறை மனு அளிப்பதற்காக சென்றிருக்கிறேன். அப்போதுதான் கலெக்டர் ஆகிவிட்டால் என்ன என்று என்னி ஐ.ஏ.எஸ். படிக்க விரும்பினேன். 4 வருடங்கள் கழித்து தான் தெரிந்து கொண்டேன் ஐ.ஏ.எஸ் எப்படி படிக்க வேண்டும் என்று, அதன் பின்னர் தான் படிக்க ஆரம்பித்தேன். மாவட்ட ஆட்சியர் வேலை என்பது எனக்கு கிடைத்த 8 வது வேலையாகும். தெளிவான சிந்தனையும், மன உறுதியும் இருந்தால் வெற்றி நிச்சயம். ஆங்கிலத்தில் படித்தால் தான் வேலை என்பது பொய்யான சிந்தனை.
தாய் மொழியில் படிக்கக்கூடிய சிந்தனை அயல் மொழியில் வருவது இல்லை. ஆனால் ஆங்கில உலக மொழி அதையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஆங்கிலம் நமக்கு ஒரு தடையே இல்லை. இடும்பைக்கு இடும்பை படுப்பர் – அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர் என உலகப் பொதுமுறையான திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் கற்றுக்கொண்டதன் மூலம் தான் சாதாரண கிராமத்தில் இருந்து படிக்க எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. என்ற குறள் என் வாழ்க்கையில் உள்ள அனைத்து சுய முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. உங்களுக்கு துன்பம் வருகிறதோ அந்த துன்பத்திற்கு துன்பத்தைக் கொடுத்து விடுங்கள். மன உறுதி இருந்தால் இலக்கை அடைவதற்கு எல்லாவற்றையும் கொண்டு சேர்த்து விடும்.
அனைத்து சுய முன்னேற்ற நூல்களும் அய்யன் திருவள்ளவர் எழுதிய திருக்குறளைத் தான் அடிப்படையாகக் கொண்டுள்ளது. அய்யன் திருவள்ளவர் எதைச் சொல்லி இருக்கிறார்களோ அதைத்தான் வெளிநாட்டு அறிஞர்களும் சொல்கிறார்கள். அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லாம் காட்டில் முளைத்த செடிகள். ஆற்றலுடன் இருப்பார்கள்.
தனியார் பள்ளி மாணவர்கள் எல்லாம் தொட்டியில் வளர்க்கக்கூடிய ஒரு வளர்ப்புச்செடிகள். ஒரு நாள் தண்ணீர் ஊற்றாவிட்டால் வாடி வதங்கி விடும். ஆகையால் தொட்டில் செடிகளை விட காட்டுப்பூக்களாக மலர்ந்திருக்கக்கூடிய நமது அரசுப்பள்ளி மாணவிகளாகிய நீங்கள் எப்பொழுதும் ஒரு சிறந்த இடத்திற்கு வரமுடியும் என்பதே எனது தளராத நம்பிக்கையாகும்.
எனவே அன்பார்ந்த மாணவிகளே நீங்கள் எல்லாம் வாழ்க்கையில் அடுத்தடுத்து உயர்ந்த இடத்திற்கெல்லாம் போகும் பொழுது உங்களுக்கு வரக்கூடிய தடைகளையெல்லாம் ஒரு சிறிய தடைக்கற்கள் அவற்றையெல்லாம் நொறுக்கி விட்டு உயர்ந்த இடத்திற்கு போக முடியும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையில் பயணிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, கலைப்போட்டி, விளையாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவிகளுக்கும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் பெற்ற மாணவிகளுக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகளை நூறு சதவீதம் தேர்ச்சி பெற செய்த வகுப்பாசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர், அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சி, நாணயக் கண்காட்சி மற்றும் நுண்கலைப் பொருட்கள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
இவ்விழாவில், கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, நிறுவனர் இயற்கை வேளாண்மை (ஆயில் உழவுமுறை) பொன்னுச்சாமி பரஞ்ஜோதி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா, கோவில்பட்டி மாவட்டக் கல்விஅலுவலர் பிரபாகரன், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.


