தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனார்புரத்தில் வீடு மற்றும் நிலப்பிரச்சனை சம்மந்தமாக அதன் உரிமையாளரை தாக்கி, கார் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியை சேர்ந்த சீனிவாசன் மகன் தனபாலன் (75) என்பவருக்கு அய்யனார்புரம் உப்பளம் அருகே தனக்கு சொந்தமான இடத்தில் உள்ள 5 கடைகளும், அதற்குப் பின்புறமாக ஒரு வீடும் உள்ளது. அதில் ஒரு கடை மற்றும் வீட்டை அய்யனார்புரம் பகுதியை சேர்ந்த ஜெபஸ்தியான் மகன் ஜெயராமன் (45), அவரது மனைவி பிராட்டி (34), ஜெயராமன் அக்கா அனந்தம்மாள் (48), அனந்தம்மாள் தம்பி முருகன் மற்றும் அனந்தம்மாளின் மகன் வேல்முருகன் (24) ஆகியோர் சேர்ந்து வாடகைக்கு எடுத்து டீக்கடை நடத்தி வருகின்றனர். மேலும் அக்கடையின் பின்புறம் உள்ள வீட்டிலும், எதிர்புறம் உள்ள வீட்டிலும் அவர்கள் கூட்டுக்குடும்பமாக குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயராமன் தரப்பினர் டீக்கடை மற்றும் வீட்டிற்கு போன வருடம் அக்டோபர் மாத்தில் இருந்து வாடகை கொடுக்காமலும், காலி செய்யாமலும் இருந்து வருவது சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இருதரப்பினரும் உரிமையியல் நீதிமன்றம் மூலம் இப்பிரச்சனையை சந்தித்துக்கொள்வதாக முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தனபாலன் மற்றும் தனது மருமகன் கோடீஸ்வரன் (45) என்பவருடன் சேர்ந்து 07.08.2021 அன்று தனக்கு சொந்தமான உப்பளம் மற்றும் வீடுகளை பார்வையிடுவதற்காக சென்ற போது, ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து தனபாலனின் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து காரை சேதப்படுத்தியதுடன் தனபாலன் மற்றும் கோடீஸ்வரன் ஆகிய இருவரையும் இரும்புகம்பியால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தனபாலன் அளித்த புகாரின் அடிப்படையில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜெயந்தி, உதவி ஆய்வாளர் திருமதி. சரண்யா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் மேற்படி தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாக இருந்த குளத்தூர் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த 1) மாரியப்பன் மகன் சுரேஷ் (33), அய்யனார்புரம், கீழ அரசரடியைச் சேர்ந்த 2) ஜெபஸ்தியான் மகன் ஹரிராம் (44), அதே பகுதியைச் சேர்ந்த 3) ஜெயராமன் அக்கா அனந்தம்மாள் (48) மற்றும் 4) ஜெயராமன் மகள் பிராட்டி (34) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். மேலும் இச்சம்பத்தில் தொடர்புடைய மற்ற எதிரிகளையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.


