தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் பகுதியில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என தூய்மை பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி அண்ணாநகர் அருந்ததியர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: அண்ணா நகர் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதி 8,9,10,11 ம் தெருக்களில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். நாங்கள் கடந்த 62 வருட காலங்கள் தூய்மை பணி புரிந்து வந்த எங்கள் முன்னோர் காலம் தொட்டு வசித்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் மழை நீர் வெள்ள சேதங்கள் பிற இயற்கை பேரிடர்கள் நிகழும் சமயங்களில் டூவிபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபம் மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்க வைப்பது வழக்கமாக கொண்டுள்ளோம். அண்ணா நகர் 10 வது தெருவில் 42 செண்ட் இடம் உள்ளது. மேற்கண்ட இடத்தில் எங்கள் சமுதாய முன்னாள் தலைவர் சங்கன் மகன் குருவன் பெயரில் ஆவணப் பதிவுகள் உள்ளது.
நாளது தேதி வரை எங்கள் சமுதாயத்தில் பயன்பாட்டில் உள்ளது. மேற்படி இடத்திற்கு நாங்கள் மாநகராட்சி தீர்வை செலுத்தி வருகிறோம். இந்த இடத்தில் பேரிடர் காலங்களில் எங்களது குடும்பத்தினர் தங்குவதற்கும், பள்ளி செல்லும் மாணவர் மாணவியருக்கு மாலை நேர கல்வி கற்பதற்கும், எங்கள் சமுதாய பெண்களுக்கு தையல் பயிற்சி வழங்குவதற்கும் மற்றும் அனைத்து சுபகாரிங்கள் நடத்திடவும் தாட்கோ நிர்வாகம் மூலமாக நிதி ஒதுக்கீடு மூலம் மாநில அரச சார்பில் சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


