பழுவூர் கிராமம் திருநெல்வேலிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் பூதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீனிவாச பெருமாள் என்ற கோயிலும். தழுவக்கொழுந்தீசுவரர் என்ற சிவன் கோயிலும், திருமேனி அழகர் சாஸ்தா கோயிலும் உள்ளன. இந்தக் கோயில்களுக்கு அருகே தாமிரபரணி ஆறு ஓடுகிறது. இங்கு ஆற்றுக்குக் குறுக்கே ஒரு தடுப்பணை உள்ளது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் மாணவ, மாணவிகளை இந்தப் பகுதியில் கள ஆய்வுப் பயிற்சிக்காக துறைத் தலைவர் பேராசிரியர் சுதாகர், உதவிப் பேராசிரியர்கள் மதிவாணன், முருகன் மற்றும் சந்தியா ஆகியோர் அழைத்துச் சென்றனர்.
மாணவ, மாணவிகள் இந்தத் தடுப்பணை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் கண்டு வியந்தனர். மேலும் இந்தத் தடுப்பணையில் சுமார் 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களை இந்தத் தொல்லியல் மாணவ, மாணவிகள் கழுவி சுத்தம் செய்து படித்தனர்.
அப்போது 800 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட சுந்தரபாண்டியன், 700 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குலசேகர பாண்டியன், மற்றும் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட உத்தம பாண்டியன் ஆகியோரின் பெயர்கள் உள்ள கல்வெட்டுக்களை கண்டறிந்தனர்.
மேலும் பழுவூர், திருநெல்வேலி போன்ற ஊர் பெயர்களும் இந்தக் கல்வெட்டுகளில் காணப்பட்டன. இந்தக் கல்வெட்டுகள் பிராமணர்களுக்கு நிலத்தானம் கொடுத்த தகவல்களையும், நில எல்லையின் திசைகளையும் எடுத்துரைக்கின்றன. மேலும் “லார்ட் துரை” என்ற பெயர் காணப்பட்ட கல்வெட்டையும் கண்டுபிடித்தனர்.
இந்தக் கல்வெட்டின் மூலம், அருகில் இடிந்து கிடந்த கோயில்கள் மற்றும் மண்டபங்களில் இருந்து எடுத்த கற்தூண்களைக் கொண்டு ஆங்கிலேயர்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தத் தடுப்பணையை கட்டியதாக அறிய முடிகிறது.
இந்தத் தடுப்பணையைப் போலவே, திருநெல்வேலிக்கு அருகில் மேலும் இரண்டு தடுப்பணைகள் உள்ளன. முதல் தடுப்பணை திருநெல்வேலிக்கு மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தருவை என்ற ஊரில் பச்சை ஆற்றுக்குக் குறுக்கே காணப்படுகின்றது. இரண்டாவது மருதூர் தடுப்பணையாகும். இது திருநெல்வேலிக்கு கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றுக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இந்த இரண்டு தடுப்பணைகளும் இடிந்த கோயில்கள் மற்றும் மண்டபங்களில் இருந்து எடுத்த கற்தூண்களைக் கொண்டு அழகாகவும் வலுவாகவும் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர், பேராசிரியர்களையும் மாணவ, மாணவிகளையும் பாராட்டினார்.


