காதல் விவகாரத்தில் மகனை வெட்டிக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள ஆலந்தலை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த முருகேசன் மனைவி பட்டுநாச்சியார் (50) என்பவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், மகனை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்ற நபரால் எனது குடும்பத்திற்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து உள்ளது.
எனது மகன், நட்டார் என்பவரது மகளை காதலித்ததால் நட்டார் மற்றும் அவரது மக்ன உள்ளிட்டவர்கள் எனது மகனை ஓட ஓட விரட்டி கொலை செய்து விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களால் எங்களது குடும்பத்திற்கே ஆபத்து உள்ளது என்று கூறி கதறி அழுதார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தனர்.
அவர் அளித்துள்ள மனுவில், “எனது மகனை வெட்டிக் கொலை செய்த முக்கிய குற்றவாளி ஜாமினில் வந்துவிட்டார். அவர் எனது குடும்பத்தில் எல்லோரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். திருச்செந்தூர் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் பணம் பெற்றுக் காெண்டு, முதல் தகவல் அறிக்கையில் முக்கிய குற்றவாளியின் பெயரை நீக்கிவிட்டார். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


