மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றியை நோக்கி முன்னிலையில் உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றியை நோக்கி முன்னிலையில் சென்று கொண்டிருப்பதை அடுத்து, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தவெகவினர் இனிப்புகள் வழங்கி கோலாகலமாகக் கொண்டாடினர்.
இடைத்தேர்தல் முடிவுகளில் தவெக வேட்பாளர்கள் தொடர் முன்னிலை பெற்று வரும் நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆலோசனையின்பேரில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி இனாம் மணியாச்சி, மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு கால்நடை மருத்துவமனை வளாகத்தின் முன்பு மற்றும் கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தவெகவினர் திரளாகக் கூடிப் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்குப் பாதாம் அல்வா உள்ளிட்ட இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், முன்னணி அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.


