காசிமேஜர்புரம் முத்துகுமார சுவாமிகள். இவர் பெயருக்கு பின்னால் பல்வேறு பெருமை இருக்கிறது. இவர் உருவத்தில் மோடி ஜி போலவே இருப்பார். கவிஞர் கண்ணதாசனின் சிஷ்யர், அவர் கவி பாடும் போது உடனிருந்தவர். குற்றாலத்தில் செண்பக நாயகி கோயிலின் பூசாரி, அகத்தியரின் புகழ் பாடும் சீடர், மலை உச்சியில் உள்ள அகத்தியர் பாதத்தினை தவறாமல் சென்று பூஜிப்பவர், வருடந்தோறும் மழை வேண்டி பெரும் மலை யாத்திரை செய்து சிற்றாறு தோன்றும் இடத்துக்கு ஊர்மக்களோடு சென்று வருபவர். அகத்தியரின் சுவடியை வைத்து எதிர்காலத்தினை மக்களுக்கு சொல்லும் மாமனிதர், வாழும் சித்தர். சுமார் 7 வருடங்களுக்கு முன்பு இவரை நாங்கள் காண சென்றோம் . அந்த சமயத்தில் இவரது மூத்த சகோதரி எங்களுக்கு தரும் அருஞ்சுவை உணவின் சுவை எங்கள் நாக்கு இதுவரை மறந்ததில்லை. குடும்பமே எனக்காக உதவிகளை செய்வார்கள். இவரது அண்ணன் மகன் சட்டநாதன் தேனருவி உள்பட பல மலை அருவிகளுக்கு செல்ல துணையாக இருக்கும் வழிகாட்டி.
அய்யாவோடு ஜி தமிழ் நம்பினால் நம்புங்கள் நிகழ்ச்சி செய்து முடித்துள்ளேன். இவரோடு பயணித்து தினகரன் நாளிதழில் அத்ரி மலை யாத்திரை தொடர் எழுதி, அதை சூரியன் பதிப்பகம் மூலமாக புத்தகமாக வெளியிட்டுள்ளேன். தொடர்ந்து பல பயணம் செய்ய இவர் எனக்கு உதவியாக இருக்கிறார். குற்றாலம் சென்றாலே என் மனதில் எப்போது நிலைத்து நிற்பர் அய்யா முத்துகுமாரசுவாமி தான். இவரது வாழ்க்கை வரலாறு மிகவும் விசேஷமானது . இதை பதிவிட வேண்டும் என்பது எனக்கு பல நாள் ஆசை. குறிப்பாக இவரது அகத்தியர் சுவடியை கேட்க வரும் மக்களில் வித்தியாசமான அனுபவத்தினை அவர் என்னோடு பகிர்ந்து கொள்ள உள்ளார் . அதை நான் நூலாகவெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன். என்னை இன்று காலை காண வேண்டும் என ஆசை கொண்டார். போனில்பேசினார். நான் எதிர்பார்க்காத வண்ணம் உடனே என்னை காணவும் வந்து விட்டார். அவரது மூத்த சகோதரியை காணும்போதெல்லாம் என் தாய் சொர்ணம்மாளை காண்பது போலவே இருக்கும். அந்த அன்ன லட்சுமியும் அய்யாவோடு என்னை காணவந்து, எனக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். அவருக்கு என்னுடைய அருமை ஆசான், பல்வேறு தகவலை அள்ளித்தரும் அற்புத மனிதர், பட்டிமன்ற நடுவர் புத்தனேரி செல்லப்பா அய்யா பொன்னாடை போர்த்தி கௌரவம் செய்ய, எனது நூலான பொருநை ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகமும், அறிக்கையும் நூலை வழங்கினேன். அருமையான புகைப்படத்தினை தங்கை செல்வி சந்தானம் எடுத்து தந்தார். அனைவருக்கும் நன்றி. நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு



