தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளால் விரக்தி அடைந்து தேர்தல் சவாலால் காலை நறுக்கி இரத்தத்தை வடித்த அதிமுக தொண்டருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களில் போட்டியிட்டது. இதில் அதிமுக கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி என மாற்றுக் கட்சியினரிடம் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் செல்வகுமார் (75) சவாலாக கூறியிருந்தார்.
தேர்தல் முடிவில் அதிமுக கூட்டணி போட்டியிட்ட இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததை தொடர்ந்து தனது சவால் தோற்றுவிட்டது என்று விரக்தி அடைந்த அதிமுக தொண்டர் செல்வகுமார் தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி பகுதியில் வைத்து தனது பின்னங்கால் பாதத்தை அறுத்து ரத்தத்தை படிய விட்டு சவாலை நிறைவேற்றியுள்ளார்.
இது பத்திரிக்கையில் செய்தியாக வெளிவந்திருந்தது இதை அறிந்த அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அவரை அழைத்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். அப்போது தொண்டர்கள் யாரும் இது போன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.


