புத்தகத்தின் பெயர்: குடைவரை கிளிக்ஸ்
ஆசிரியர்: திலகவதி
பதிப்பகம்: குமிழ்முனை
விலை: ₹650 | தொடர்பு எண்: 9363090284
பெரும்பாலுமே களப்பணி சென்று படங்களை எடுத்து, அதைப் பதிவிட்டு ஒரு நூல் வெளியிடுவது மிகவும் கடினம். அதுவும் முழு வண்ணத்தில் வெளியிட வேண்டும் என்றால் நிறையப் பொருள் செலவாகும். எனவே, அந்த முயற்சியில் ஈடுபடுவது மிகவும் சிரமம். ஒரு பெண் தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து, காட்டுக்குள் இருக்கும் குடைவரை கோயில்களைக் கண்டு, அதைத் தனது கேமராவால் காட்சிப்படுத்தி, அதை நூலாகக் கொண்டு வருவது மிக மிகக் கடினம். அறநிலையத்துறைக்குச் சொந்தமான, தொல்லியல் துறைக்குச் சொந்தமான இடங்களைக் காட்சிப்படுத்துவது மிகவும் சிரமம். காரணம், அனைவரிடமும் அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைப்பதும் எளிதல்ல.
ஆனால் ஒரு பெண், தன்னால் எல்லாமே முடியும் எனச் சாதித்துக் காட்டியிருக்கிறார். அவர் பெயர் திலகவதி. இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நூல். இந்த நூலுக்குத் தொல்லியல் துறையிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார். முன்னாள் தமிழகத் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களின் வாழ்த்துரையைப் பெற்றுள்ளார். தொல்லியல் இயக்குநர் உதயசந்திரன், முதுநிலை அறிவியலாளர் டாக்டர் சுவாமிநாதன், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் முனைவர் தயாளன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ராஜாராம் உள்படப் பலருடைய பாராட்டுகளைப் பெற்ற இந்த நூலை அவர் எழுதியுள்ளார்.
இதை ‘குமிழ்முனை’ சைமன் பதிப்பித்துள்ளார். இவர்களுக்கு எவ்வளவு தைரியம்! சகோதரி திலகவதி தன்னை அறிமுகப்படுத்தும்போது, தான் ஒரு புகைப்படக் கலைஞர் என்றும் வரலாற்றின் சில துளிகளை ஆவணப்படுத்துபவர் என்றும் கூறியிருந்தார். அது எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்த நூல் விளக்குகிறது.
குடைவரைக் கோயிலைத் தேடிச் செல்வது சாதாரணமான விஷயம் அல்ல. “ஒவ்வொரு குடைவரையும் நான் தேடிக் கண்டுபிடித்து அதை அடைவதற்குள், ஒரு போர்க்களத்தில் இருந்து வெளியே வந்தது போன்ற உணர்வு தரும்” என இது பற்றி அவரே சொல்கிறார்.
“குடைவரையைப் பார்த்த பிறகு தாயைக் கண்ட குழந்தையைப் போல ஒரு மகிழ்ச்சி மனசுக்குள் ததும்பும். குடைவரைக்குள் போய் என்னுடைய முழு உள்ளங்கையையும் குடைவரை மேல் பதிய வைப்பேன். அந்த நிமிடம் என் மனசுக்குள் நிறைய எண்ண அலைகள் சிறகடிக்கும். ‘உன்னைப் பார்க்கத்தான் இவ்வளவு தூரம் வந்தேன்; உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உன் மேல் எதுக்கு எனக்கு இவ்வளவு காதல்? உன்னையே இவ்வளவு பிடிக்குது? உன் மேல் எதுக்கு எனக்கு இவ்வளவு மயக்கம்? உனக்கும் எனக்கும் உள்ள இந்த ஸ்பரிசம் எப்படி ஏற்பட்டுச்சு?’ அப்படின்னு பல கேள்விகள் எழும். ஒவ்வொரு குடைவரையும் என்னை அரவணைத்த கதையை ஒரு புத்தகமே போடலாம்! குடைவரை புகைப்படம் எடுக்கச் சென்ற நாட்கள் தான் உண்மையிலேயே என் வாழ்வில் நான் வாழ்ந்த நாட்கள்!” என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
எவ்வளவு பெரிய உண்மை! அவரின் கூற்றில் மறைந்திருக்கும் வலிகள், இந்த நூல் வந்த பின்பு மறைந்து போயிருக்கும் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் நானும் கூடக் களப்பயணம் மூலம் நூல் எழுதி வருபவர். எனக்கு அதனால் ஏற்படும் வலியும், வெற்றி பெற்ற பிறகு கிடைக்கும் சந்தோஷமும் தெரியும்.
“தமிழ்நாட்டில் இருக்கிற குடைவரைக் கோயில்களைப் புகைப்படம் எடுத்து, அவற்றின் வரலாற்றைச் சுருக்கமாகவும் சுவையாகவும் தொகுத்துத் தருகிற பணியைத் திலகவதி இந்த நூலில் செம்மையாகச் செய்திருக்கிறார். அவற்றை ஆவணப்படுத்தும் விதமாக ‘குடைவரைக் கோயில்கள்’ என்கிற நூலை நிழற்படங்களோடு தொகுத்திருக்கிறார். இந்த முயற்சி மகத்தானது. ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் பெரிதும் உதவியாக இந்நூல் இருக்கும். இத்தகைய அரிய பணியை மேற்கொண்ட திலகவதி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்” என்கிறார் மேனாள் தமிழகத் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐயா அவர்கள். அது உண்மைதானே!
இவரோடு களப்பணிக்குச் சென்ற அவரது மாமனார் மாரிமுத்து ஐயா அவர்களை வணங்கிக் கொள்கிறேன். இந்த மெழுகுவர்த்தி எரிய நீங்கள் தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். திலகவதி அவர்களின் கணவர் கே.டி. ஆறுமுகராஜன் அவர்களைப் பாராட்டுகிறேன். உங்களின் வழிகாட்டுதலால் தமிழகத்திற்கு அருமையான நூல் ஒன்று கிடைத்துள்ளது. இவர்களின் பங்களிப்புக்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூலில் இரண்டே இடங்களை மட்டும் நுட்பமாகக் கவனித்தேன். குற்றாலத்தில் உள்ள லிங்கம் குறித்து ஆசிரியர் பதிவிட்ட படத்தைப் பார்த்தேன். சமீபத்தில் நான் எனது ‘ரீல்ஸ்’ (Reels) பதிவில், “குற்றாலத்தில் தண்ணீர் இல்லை என்றால் பாறை மட்டும்தான் பாட்டுப் பாடும்” என அங்கு நடந்த சம்பவத்தை வைத்து ஒரு பதிவு போட்டிருப்பேன். என்னையறியாமலேயே நூலாசிரியர் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லியிருப்பேன்.
அதேபோல், மலையடிக்குறிச்சியில் மிகவும் பழமையான குடைவரைக் கோயில் ‘மகாதேவன் கோயில்’. அதைப் பதிவிடவில்லையே என்று என் ஆதங்கத்தை அவரிடம் நேரில் வெளிப்படுத்தியிருந்தேன். அவர் அதற்குப் பதிலாக, “மலை அடிவாரத்தில் உள்ள மற்றொரு கோயிலைப் பதிவிட்டு இருக்கிறேன்” என்று கூறினார்கள்.
இப்படியாக எனக்குள் இருந்த ஒரு சில தேடல்களுக்கு முதல் புள்ளியாக இந்த நூல் அமைந்திருக்கிறது. இதுபோலத்தான் இந்த நூலைக் கையில் எடுக்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு படமும் ஒரு வரலாற்றுத் தேடலுக்கு முதல் புள்ளியாக இருக்கும் என நம்புகிறேன்.
நான் பல முன்னணிப் பத்திரிகைகளில் 200-க்கும் மேற்பட்ட தல புராணங்கள் எழு
தியிருக்கிறேன். அப்போது ஆலயங்கள் மற்றும் மூலஸ்தானத்தைப் புகைப்படம் எடுக்க நான் படாத பாடுபட்டு விடுவேன். அதுபோலவே தொல்லியல் களத்துக்குள் சென்று புகைப்படம் எடுப்பது கடினம். ஆனால், அதையெல்லாம் முறையான அனுமதியுடன் காட்சிப்படுத்தியிருக்கும் நீங்கள் தெய்வப் பிறவி.
என்னைப்போன்ற எழுத்தாளர்களுக்கு உங்களது ‘குடைவரை கிளிக்ஸ்’ ஒரு கையேடு (Guide). இதை வைத்துக்கொண்டு நாங்கள் வரலாறு தேடிக்கொள்வோம்.
வாழ்த்துகள் சகோதரி! உங்களுக்கும், மிகவும் தைரியமாக இந்த நூலை வெளியிட்ட குமிழ்முனை சைமனுக்கும் வாழ்த்துகள்.
தொடரட்டும் உங்கள் பணி.


