கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிற்பம்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச் சங்கிலிதூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் மற்றும் மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தாமிரபரணி ஆற்று மணலில் வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிற்பம் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. கொங்கராயகுறிச்சி மகளிர் குழுவினர் விளம்பரப் பதாகைகளை ஏந்தி, “100 சதவீதம் வாக்களிப்போம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி அமைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாஹிர் அஹ்மது நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். சாத்தான்குளம் சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் தங்கசாமி முன்னிலை வகித்தார். மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் தொண்டு நிறுவன மேலாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் துணை தாசில்தார் தனுஷ்கோடி, கிராம உதயம் தொண்டு நிறுவன துணை இயக்குனர் புகழேந்தி, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் கலந்துகொண்டு, 100 சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்துப் பேசி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.ஆற்று மணலில் விழிப்புணர்வு ஓவியத்தை மிகச்சிறப்பாக அமைத்த ஓவியர் கோபி அவர்களை, தாசில்தார் பாராட்டி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் சாத்தான்குளம் வருவாய் ஆய்வாளர் துரை, கிராம நிர்வாக அலுவலர்கள் இம்மானுவேல், பலவேசம், கந்தசுப்பு உட்படப் பலர் கலந்துகொண்டனர். கிராம உதயம் பகுதி அலுவலர் ஆனந்த் நன்றியுரை ஆற்றினார்.ஆற்று மணலில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியம் மற்றும் மகளிர் குழுவினரின் மனிதச் சங்கிலிப் போராட்டம் அந்த வழியாகச் சென்ற பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.


