தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி நகரில் புதர்கள் மண்டி காடு போலக் காட்சியளிக்கும் பூங்காவை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதைகள் மற்றும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் முட்செடிகளால் சூழப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பூங்காவைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பூங்காவின் பின்புறத்தில் பல மாதங்களாக மழைநீர் தேங்கிக் கிடப்பதால், கடும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. புதர்கள் மற்றும் தேங்கிய நீரால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தூத்துக்குடி பாஜக சமூக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் காளி ராஜா கூறுகையில், “மாநகராட்சியின் அலட்சியத்தால் மக்களின் ஓய்வு நேரத்திற்காக அமைக்கப்பட்ட பூங்கா தற்போது அச்சுறுத்தும் இடமாக மாறியுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, புதர்களைச் சுத்தம் செய்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் வகையில் பூங்காவைச் சீரமைக்க மேயரும், ஆணையாளரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.


