தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதி கனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய வணிக நகரமான ஏரல் பகுதி அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட வணிகர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏரல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குக்கிராமங்களைச் சேர்ந்த மக்களும் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஏரல் பகுதி வணிகர்கள் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் இன்று புதன்கிழமை சென்னையில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
அதை பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


