மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்தில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
முன்னதாக, மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது. முதல்வர் தலைமையில் இதுகுறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாகவே திட்டமிடப்பட்டு, தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மீட்புப் பணிகளுக்குத் தேவையான டீசல் மோட்டார் பம்புசெட்டுகளும், படகுகளும், ஜே.சி.பி. இயந்திரங்களும், மரம் அறுக்கும் கருவிகளும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இவை புயல் மழையின் தாக்கத்திற்குப் பிறகு உடனடியாக களத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன.
மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்துவதற்காக 20 அமைச்சர் பெருமக்களும், 50-க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்திய காவல் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன.
இதுமட்டுமின்றி, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் வாரியப் பணியாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்களும், ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்களும் இந்த மாபெரும் பணியில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டனர். மழையினால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில், மக்களை மீட்க சுமார் 740 படகுகள் பயன்படுத்தப்பட்டன. இதன்மூலம், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.


