விடியல் டிரஸ்ட் நிறுவனமானது நபார்டு வங்கியுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் கே. சுப்பிரமணியபுரம், கே.வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பஞ்சாயத்து கிராமங்களில் நீர் வடிப்பகுதிகளை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் சேவை செய்து வருகிறது. விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட உர மேலாண்மை போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் கொடுத்து பணி செய்து வருகிறது.
மரங்களை நடுவதன் மூலமாக சமூக காடுகளை உருவாக்குதல் போன்ற விழிப்புணர்வு செயல்பாடுகளையும் செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சென்ற மாதத்தில் 25000 பனை விதைகளை கே. சுப்பிரமணியபுரம், கே.வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பஞ்சாயத்து கிராமங்களில் பஞ்சாயத்து தலைவரின் அனுமதியோடு, விடியல் டிரஸ்ட் மூலமாக அமைக்கப்பட்ட நீர் வரத்து கால்வாய் கரை ஓரங்களிலும், ஊரணி ஆழப்படுத்தியதில் உருவாக்கப்பட்ட உயரமான கரை ஓரங்களிலும் 100 நாள் பணியாளர்களை கொண்டு வெற்றிகரமாக ஊன்றப்பட்டுள்ளது. அதே போன்று தனிநபர் நிலங்களிலும் விவசாயிகள் பனை விதைகளை நடவு செய்ய இரண்டு பஞ்சாயத்து கிராமங்களிலும் விவசாயிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என விடியல் டிரஸ்ட் நிறுவனர் முனைவர் ஜோதிமணி கேட்டுக் கொண்டார். அதன் காரணமாக 2 பஞ்சாயத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் தேவையினடிப்படையில் 15000 பனை விதைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டை நீர்வடி பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மேனகா, பிரியா நித்யா செய்திருந்தார்கள். நீர்வடி பகுதி விவசாயிகள் பனை விதைகளை வழங்கியதற்காக விடியல் டிரஸ்ட் நிறுவனர் ஜோதிமணி க்கு நன்றி கூற நிகழ்வு நிறைவுற்றது.


