சங்கரபாண்டியன் காரில் ஏறினார். “தலைவரே ஒன்னும் ஆகாது. கவலை படாதீங்க. கார் கிளம்பிடும்” என்றார்.
எல்லோரும் அமைதியாக இருந்தோம். ஆனால் கார் ஸ்டார்ட் ஆகி விட்டது.
அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. சந்தோசம். புகை வந்து தன் செயலை இழந்த கார் உயிர்ப்பித்து கிளம்புகிறது. அதுவும் உற்சாகமாக.
நாங்கள் அனைவரும் ஓடிப் போய் காரில் சிறிகுழந்தைகள் போல ஏறினோம்.
அதே வேளையில் உங்களுக்கும் ஒரு வேண்டுகோள்.
“மாஞ்சோலைக்கு வரும் நண்பர்களே. நல்ல கார் வைத்துக்கொள்ளுங்கள். அப்புறம் எரிபொருளை காரில் முழு அளவில் நிறைத்து வைத்து கொள்ளுங்கள். மற்றபடி செலவுக்கு கூட பணம் பொருள் வேண்டாம். எரி பொருளும் நல்ல நிலையில் உள்ள காரையும் நிச்சயமாக எடுத்து கொண்டு செல்லுங்கள். இந்த இரண்டும் மட்டும் மிக மிக முக்கியம். ஏன் என்றால் இந்த கரடு முரடான சாலையில் பயணிகக நல்ல காரும், புல் டாங்க எரிபொருள் கண்டிப்பாக வேண்டும். அதை மறந்து விடாதீர்கள்”.
கார் கிளம்பியது.
“மொதுவாகவே போங்கள்” என்று நண்பர் சங்கரபாண்டியனிடம் கூறி விட்டு நான் நினைத்து பார்ககிறேன். இந்த அருமையான மலைப்பயணத்திற்கு எந்த கடவுள் உதவுனாரோ. அல்லது நமக்கு இன்று மாஞ்சோலை உச்சிக்கு போக வேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது எனவே தான் நம்மால் இந்த பயணத்தினை தொடர முடிகிறது.
ஊசி வளைவுகளில் கார் ஏறியது. முத்து பாண்டியன் கூறியது போலவே ஒரு குறிப்பிட்ட வளைவில் அரசு பேருந்து வந்தது. மேலிருந்து வரும் பேருந்து வேகமாக வரும் போது கீழே இருந்து செல்லும் வாகனம் விபத்தில் சிக்காமல் செல்ல கவனமாகத்தான் செல்லவேண்டும்.பயங்கரமான பயணம் தான். ஆனால் சங்கரபாண்டியன் சமர்த்தியமாக வாகனத்தினை ஓட்டினார்.
முத்து பாண்டியன் கூறினார். “இந்த அரசு பேருந்தை மலைகளின் இளவரசி என்றே கூறுவார்கள். மூன்று பேருந்து மாஞ்சோலை, குதிரை வெட்டி, கோதையாறு ஆகிய மூன்று இடங்களுக்கு மாஞ்சோலை வழியாக பேருந்துகள் வருகின்றன. இந்த பேருந்து எங்கேயாவது பழுதானால் அவ்வளவு தான் மக்கள் நடந்தே பல கிலோ மீட்டர் தாண்டியுள்ள தங்கள் குடியிருப்புக்கு செல்லவேண்டும்.
இந்த பேருந்துகளை மாஞ்சோலை எஸ்டேட்டில் உள்ள அனைவரும் நேசிப்பர். மாஞ்சோலை செல்வகுமார் ஒரு படி மேலே போய் இந்த மூன்று பேருந்தும் தன்னுடைய காதலிகள் என்பார். தங்களது வாழ்வியலோடு இணைந்து பேருந்துகளை, அதுவும் அரசுபேருந்துகளை நேசிக்கும் மக்களை தற்போது எங்கே பார்க்க முடிகிறது. அது மாஞ்சோலையில் மட்டுமே நடைபெறுகிறது.
தொடர்ந்து எங்கள் வாகனம் அரசு பேருந்துக்கு வழி விட்டு, விட்டு ஊசி வளைவுகள் மிக அதிகமாக கடந்தது. கவனமாகவே எங்கள் வாகனம் முன்னேறியது. கிட்டத்தட்ட அரை மணி நேர பயணித்துக்கு பின்பு ஒரு செக் போஸ்ட் வந்தது.
இது இரண்டாவது செக் போஸ்ட்.
ஏற்கனவே தனியார் வாகனங்களில் சுற்றுலா பயணிகளும், வெளியூர் மக்களும் மாஞ்சோலை வர விரும்பினால், அம்பாசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய அலுவலகத்தில் வனத்துறை ரேஞ்சரிடம் முன் அனுமதி வாங்க வேண்டும். இதை நாம் ஏற்கனவே கூறியிருக்கிறோம். ஆனாலும் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன். அனுமதி கடிதத்தினை மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் சமர்ப்பித்தப் பிறகே மாஞ்சோலைக்குள் நுழைய முடியும். அதிலும் என்ன காரணத்திற்காக, யாரை பார்ப்பதற்காக எஸ்டேட் செல்கிறோம் என்று முன்பே விண்ணப்பத்தில் விளக்கமாக எழுதி கொடுக்க வேண்டும். வாகனத்திற்கும், அதிலிருக்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கும் சேர்த்து மணிமுத்தாறு செக்போஸ்டில் ரூபாய் ஆயிரத்திற்கும் அதிகமான தொகை கட்டி அனுமதி வாங்க வேண்டும்.
அனுமதி பெற்ற வாகனங்களும் மாஞ்சோலையில் தங்காமல் அன்று மாலை ஆறு மணிக்குள் எஸ்டேட்டை விட்டு வெளியே வந்துவிட வேண்டும். இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். எஸ்டேட்டில் வாழ்ந்து தற்போது வெளியூர்களில் இருப்பவர்களுக்கும் அதே நிலைமை தான். ஆனால் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் தங்குவதற்கு அனுமதி வாங்கினால் அங்குள்ள குதிரைவெட்டி, கோதையாறு சுற்றுலா விடுதிகளில் தங்கிக்கொள்ளலாம்.
இமனசெல்லாம் மாஞ்சோலை புத்தகத்திலும் வழக்கறிஞரும் எழுத்தாளருமான பினோகாஸ் இது குறித்து விளக்கமாக எழுதியிருக்கிறார்.
அதையெல்லாம் கடந்து தற்போது இரண்டாவது செக்போஸ்ட் நடுக்காட்டுககுள் இருந்தது. இந்த செக் போஸ்ட் மாஞ்சோலை தனியார் தேயிலை தோட்டத்துக்கு சொந்தமானது.
நாங்கள் காரை விட்டு இறங்கினோம். செக்போஸ்ட் அருகில் ஓரிடத்தில் நல்ல குடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சங்கரபாண்டியன் மற்றும் முத்து ஆகியோர் பாட்டில்களில் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து நாங்கள் வனத்துறையிடம் பெற்ற அனுமதியை அங்கிருந்த காவலரிடம் காட்டினோம். அவர் அதை வாங்கி எங்கள் கார் எண்ணை குறித்துகொண்டு வாகனத்தினை மேலே அனுப்ப அனுமதித்தார். அவரிடம் மாஞ்சோலையில் தாயார் செய்த தேயிலை பாக்கெட் விதவிதமாக விற்பனைக்கு வைத்திருந்தார்.
ஆனால் அவர் இருந்த இடம் வலையால் பிண்ணப்பட்டிருந்தது.
இந்த சமயத்தில் தான் எங்கள் வாகனத்தில் இருந்து தீடீரென்று ஹாரன் ஒலிக்க ஆரம்பித்தது.
வண்டியை பார்த்த போது அங்கு டிரைவர் இல்லை. ஆனால் வாகனம் மட்டும் ஹாரன் ஒலித்தது.
“என்னடா இது பேய் படம் பார்த்தது போலவே உள்ளது”. என்று காரின் அருகில் சென்று பார்த்தால், அங்கு ஒய்யாரமாய் குரங்கு ஒன்று சீட்டில் அமர்ந்து கொண்டு ஹாரன் அடித்துக்கொண்டிருந்தது.
அதோடு மட்டுமல்லாமல் மற்றுமொரு குரங்கு நாங்கள் கொண்டு சென்ற பையில் இருந்து பொருள்களை சோதனை இட்டு கொண் டிருந்தது. நாங்கள் குரங்கை துரத்தினோம் அது எங்களை முறைத்து பார்த்துகொண்டு அகல மறுத்தது.
அதன் பின் ஒருவழியாக “போனா போங்கடா டோய்” என்ற பாணியில் அந்த குரங்குகள் எங்களை முறைத்துக்கொண்டே அங்கிருந்து சென்றது. .
“கேமரா பத்திரம், குரங்கு தூக்கிட்டு போனா திருப்பி தாரது. மரத்தில் தூக்கி கொண்டு வைத்துக்கொள்ளும்” என்று காவலர் சொன்னவுடன், மேலும் எங்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. நல்ல வேளை கேமரா பேக்கை சுடலை மணி செல்வன் முதுகில் போட்டிருந்தான்.
தொடர்ந்து எங்கள் வாகனம் அங்கிருந்து கிளம்பினோம். அடுத்த இரண்டு கிலோ மீட்டரில் மாஞ்சோலையை அடைந்தோம்.
அங்கே எங்களுக்காக முத்துப்பாணடியனின் நண்பர் சீலன் காத்துக்கொண்டிருந்தார். சீலன் திருநெல்வேலி மாவட்ட சிவந்திபட்டி காமராஜர் நகரைச் சேர்ந்தவர். சிறுவயதிலேயே மாஞ்சோலைக்கு வேலைக்கு வந்து விட்டார். தற்போது மாஞ் சோலையை ரசித்து வசித்து வருகிறார். இவர் மட்டுமல்ல. மாஞ்சோலையில் பலர் அப்படித்தான். அங்கு கம்பெனி கொடுக்கும் சம்பளத்துக்காக அவர் அங்கு வசிக்க வில்லை. இயற்கையை ரசித்து வாழ்கிறார்கள்.
அவர் எங்களுக்காக அருகில் உள்ள ஹோட்டலில் இட்லி கடையில் இட்லியை ஆடர் செய்து தயார் நிலையில் வைத்திருந்தார்.
சுற்றுலா பயணிகள் உண்பதற்கு மாஞ்சோலையில் ஒரு சில வீட்டு உணவகங்கள் உண்டு. ஆனால் முன்கூட்டியே எத்தனை பேருக்கு என்ன உணவு வேண்டும் என சொல்லி வைக்க வேண்டும். இல்லையென்றால் உணவு கிடைப்பது மிகவும் கடினம். எனவே தான் முத்து பாண்டியன் ஏற்கனவே சீலன் மூலம் காலை உணவை சொல்லி வைத்திருந்தார்.
இதற்காக பூட்டிய கடை ஒன்றை திறந்தார்கள். அங்கு சூடாக எங்களுக்கு இட்லி இருந்தது. எங்களுக்காக தயார் செய்த இட்லி அனைத்தையும் கொண்டு வைத்தார்கள். நல்ல ருசியான சட்னி, சாம்பார். சுவையாக இருந்தது. ஹோட்டல் தரை யெல்லாம் குளிர்ந்த நிலையில் தான் இருந்தது.
மரப்பலகையில் ஆனா பெஞ்ச். எல்லாமே பழைய காலத்தினை நினைவு படுத்தியது. தொடர்ந்து பின்பக்கத்தில் போய் கை கழுவி விட்டு, அங்குள்ள அழகான இடங்களையெல்லாம் படம் பிடித்து விட்டு, முன்பக்கம் வந்தோம். அங்கே மாஞ்சோலைக்கு ரசி சேர்க்கும் கட்டன் சாயாவை முருகன் அவர்கள் கடையில் வாங்கி குடித்தோம். அருகில் உள்ள கடையில் முட்டை ரஸ்க் ரொம்ப பிரபலம் என்றார்கள். Êசங்கரபாண்டியன் அதை வாங்கி கொண்டு வந்தார். அதையும் சாப்பிட்டோம். அருமையான சுவை அதை சாப்பிட்டு கொண்டே கட்டன் சாயாவை குடித்து கொண்டே சீலனிடம் பேசினோம். மாஞ்சோலைபற்றி நிறைய பேசினார்.
மாஞ்சோலை சிறிது காலத்தில் வனத்துறை கைக்கு சென்று விடும். அதன் பிறகு எஸ்ட்டேட் இருக்குமா? என்ன நிலையாகுமோ? என்று அவர் பேசும் போது, அவரின் முகம் மலர்ச்சி இன்றே காணப்பட்டது. இதேபோல் வழக்கறிஞரும், எழுத்தாளருமான பினோகாஸ் பேசும் போது, “எங்களுடைய பழமையான இடங்கள், நாங்கள் பழகி திரிந்த பாலங்கள், அதோடு மட்டுமல்லாமல் பூலோகத்தின் சொர்க்கம் என போற்றப்படும் மாஞ்சோலையை பிற்காலத்தில் நாங்கள் ரசிக்க முடியுமா? இங்கே வசிக்க முடியுமா?” என கேள்விக்குறியாகத்தான் இருந்தார்.
உண்மைதான் நான் எனது “தவழ்ந்து வரும் தாமிரபரணி” நூலில் 9 வது பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் பல சட்ட போரட்டங்களுக்கு இடையே காப்பு காடாக மாற்றப்பட்டு ள்ளதை பற்றி குறிப்பிட்டு இருப்பேன். வருகிற 2028 ஆம் வருடத்துடன் எஸ்டேட் குத்தகை முடிந்து வெளியேற வேண்டிய காலம் . அதன் பிறகு வனத்துறை காப்பு காடாக மாஞ்சோலையை கணக்கிட்டு விடும். அதன் பிறகு எஸ்டேட் இருக்குமா? அரசு இந்த மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை எடுத்து அதை சுற்றுலா தலமாக மாற்றி, எஸ்டேட்டை வனத்துறையோ அல்லது அரசே நடத்துமா? மீண்டும் மாஞ்சோலை என்ற பசுமையான பெயரை நம்மோடு அரசு நிலைக்க வைக்குமா? என கேள்வி குறி நம் மனதில் இருக்கத்தான் செய்கிறது.
தொடர்ந்து மாஞ்சோலையை விட்டு எங்கள் பயணம் மலை மீது துவங்கியது. இங்கு தேயிலை மரங்கள் எல்லாம் சுமார் 90 வருடங்களை கடந்தது . ஆனால் வெட்டப்பட்டு தேயிலை செடியாகவே இருக்கிறது.
பயணமங்கள் செல்ல, செல்ல இருபுறமும் கண்ணுக்கு எட்டிய தூரம் எங்களுக்கு தேயிலை எஸ்டேட் தெரிந்தது.
“குளுகுளுன்னு சாரல் அடிக்க” என “மலையாள கரையோரம்” பாடலை பாடிய படியே ரஜினி காந்த் ஓடி வருவது போலவும், “பொன்னாரம் பூ ஆரம்” என விஜயகுமாரும் ஸ்ரீதேவியும் பாடிக்கொண்டு தேயிலை தோட்டம் வழியாக ஓடி வருவது போலவும், “16 வயதினிலே 17 குழந்தையம்மா” என ஜெயலலிதா அம்மாவும் சினிமாவில் பாடிய பாடல் கள் எல்லாம் என் மனதில் காட்சியாக விரிந்து கொண்டே இருந்தது.
தொர்ந்து எங்களை பின்தொடர்ந்து வந்த கோதையாறு பேருந்து ஒவ்வொரு தேயிலை தோட்டத்துக்குள்ளும் ஒவ்வொருவரை இறங்கி விட்டுக்கொண்டே சென்றது. சில மனிதர்கள் காட்டுக்குள் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தனர். இவர்கள் எல்லாம் இந்த காட்டை நேசிப்பவர்கள். எதற்கும் பயப் படாதவர்கள். இவர்களை இயற்கை அன்னை அரவணைத்து பேணி காத்து கொள்வாள் போலும் பயமே இல்லாமல் நடந்து வந்தார்கள். இந்த இடத்தினை தான் காக்காச்சி எஸ்டேட் என்றார்கள்.
மிகப்பிரமாண்டமாக இருந்தது.
உயரத்தில் 10 க்கு மேற்பட்ட பெண்கள் தேயிலையை பறித்து கொண்டிருந்தார்கள்.
அதன் பின் அவர்கள் வரிசையாக அங்கிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்கள்.
காரை ஓரமாக நிறுத்திக்கொண்டு இறங்கினோம்.
எல்லா இடங்களிலும் தேடிப்போய் படம் எடுத்தோம்.
தேயிலை தோட்டத்துக்குள் அமர்ந்து படம் எடுத்தோம். சேர்ந்து இருந்து குழுவாக படமெடுத்தோம். அங்கு வந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து படமெடுத்தோம்.
யாருமே எங்களுக்கு தடை சொல்லவில்லை. புது உலகம், புதுமையான இடம், எங்கும் பச்சை பசேல் என பசுமை மாறாத காடுகள்.
மனதுக்கும் இதம்.
எங்களை மறந்த படியே . அப்படியே எங்களை இயற்கை வசம் ஒப்படைத்துவிட்டு அங்கேயே அமர்ந்து விட்டோம்.
(பொருநை ரகசியங்களை தேடி பயணிப்போம்)


