தூத்துக்குடி மில்லர்புரம் அருகே பண்டு கரை சாலையில் நடைபெற்று வரும் பக்கிள் ஓடை சீரமைப்புப் பணிகள் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இன்றி ஆபத்தான முறையில் நடைபெற்று வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே தொடங்கி திரேஸ்புரம் கடற்கரை வரை பக்கிள் ஓடை விரிவாக்கம் மற்றும் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளுக்காகப் பல இடங்களில் பிரதான சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஆனால், மூடப்பட்ட சாலைகளில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பு வேலிகள் சேதமடைந்து சாலையின் நடுவே சாய்ந்து கிடக்கின்றன. மேலும், இரவு நேரத்தில் இப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.
ஓடை பணிகள் நடைபெறும் இடங்களில் அவசியமான எச்சரிக்கைப் பலகைகள், ஒளிரும் ஸ்டிக்கர் விளக்குகள் மற்றும் பாதுகாப்புத் தடுப்பு நாடாக்கள் எதுவும் அமைக்கப்படவில்லை எனப் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


