விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள 4 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிலை நிறுவுதல், ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை வகிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. சிவபிரசாத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: சுற்றுச்சூழல் பாதுகாப்பு: விநாயகர் சிலைகள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் ரசாயனப் பொருட்கள் இன்றி, சுத்தமான களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும். இயற்கையான, நீரில் கரையும் நச்சுத்தன்மையற்ற வண்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிலை நிறுவுவதற்கு உரிய அனுமதி பெறுவதுடன், சிலை மற்றும் மேடை சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்கள் அருகே சிலைகள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒலிபெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட அளவில், பூஜை நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஊர்வல விதிகள்: சிலை ஊர்வலம் காவல் துறையால் நிர்ணயிக்கப்பட்ட பாதையில், நான்குசக்கர வாகனங்களில் மட்டுமே நடைபெற வேண்டும். ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிக்கக் கூடாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினம் ஆகிய 4 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிறுவப்பட்ட சிலைகளை 5 நாட்களுக்குள் அரசு நிர்ணயித்துள்ள இந்த இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் விழா அமைப்பாளர்கள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் (குற்றவியல்) ஜஸ்டின் செல்லத்துரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்


