கடையம் என்ற சிற்றூர் தென்காசி மாவட்டத்தில் உள்ளது. இங்குப்
பாம்பே திரையரங்கு உள்ளது. இதன் பின்புறம் சுப்பிரமணியனின் என்பவருக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நெல்லித் தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் சுமார் ஒரு யானை உயரத்தில் ஒரு பாறை உள்ளது. இந்தப் பாறை 15:அடி உயரம் இருக்கும். இதனில் 240 சென்டிமீட்டர் அகலம் மற்றும் 114 சென்டிமீட்டர் உயரத்திலும் ஒரு பெரிய கல்வெட்டு உள்ளது. ஒரு பெரியப் போர்வை அளவில் உள்ள இந்தக் கல்வெட்டு பார்க்கப் பிரமாண்டமானது.
“இந்தக் கல்வெட்டு வெட்டில் என்ன செய்தி உள்ளன?” என அந்தப் பகுதி மக்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் துறையை நாடினர்.
இதனால் இந்தப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் படிக்கும் இரண்டாம் ஆண்டு பாலசண்முகசுந்தரம், முதலாம் ஆண்டு மாணவனவர்களான பிரித்திவிராஜ், முனியசாமி, மற்றும் சதீஸ்குமார் ஆகியோர் கடையம் சென்றனர். இவர்கள் இந்தப் பெரிய கல்வெட்டைப் படி எடுத்தனர். பின்னர் இதனைத் தொல்லியல் உதவி பேராசிரியரான முனைவர் முருகன் மற்றும் மதிவாணன் ஆகியோரிடம் கொடுத்தனர்.
இந்த இரு பேராசிரியர்களும் மற்றும் மாணவர்களும் படி எடுத்த இந்தக் கல்வெட்டை வாசித்தனர். பின்னர் “இது ஒரு முழுமையான கல்வெட்டு” எனத் தெரிவித்தனர். இந்தக் கல்வெட்டு தற்கால தமிழில் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தக் கல்வெட்டில்,
“1.ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாற பன்மரான திரிபுவன சக்கரவர்த்திகள் … பாண்டிய தேவற்க்கு யாண்டு ஆவது புரட்டாசி மாதம்
2. முள்ளிநாட்டு மதக்குரிசியில் எழுந்தருழியிருந்து திருவாம் மொழிந்தருளின படிக்குத் தென்பார்நாட்டு
3.திருக்குற்றாலத்து உடையார் திருக்குற்றாலமுடைய நயினார் கோலில் தானதார்க்கு உடையார் இந்த இர
4.நாயினாற்கு வெட்டும் சேரர் குல சாமண சந்தயார்க்கு உயித்த உச்சி சந்திக்கு அமுதபடி சாத்துபடி…..
5.ண் மேநித்த நிமந்தங்களுக்கும் இச்சந்திக்கு அத்தியணம் தேவதாக்கற்பித்த பட்டகன் உபரி ஆறுக்கு
6.தேவதானமாக விட்ட தென்னாட்டு சடையமான் விக்கிரம பாண்டிய நல்லூரில் நன்செய்
7.விட்ட பற்று ஆலது உரிஆற்றுக்கு மேற்கு குடித்த அழகியான் குளத்தில் கிரந்த கல்லுக்கு…..
8… ழுகு பானறக்கும் காலம் பரித்தானுக்கும் தெற்கும் பச்சாற்றுக்கு வடக்கும் ஆக இப்பெரு நான்கெல்லை
9.எல்லை குட்பட்ட நன்செய்காடு மேடு ஓடை கோட்டாதிடல்களும் வழ்விடங்களும் ஆக இவ்வகை
10.உள்ள கரங்கள் (ஏற்ப்பாட்டின்) அம்வட்டுக்கு இது பெயற்றில் வெட்டும் சேர குலம் நல்லூர் குடி ஆற்
11.ரின் கொள்ள கற்பித்த நத்ததுக்கு பெருநான்கெல்லை ஆவது உபரி ஆற்றுக்குக் கிழக்கு மடை விளக்கு
12.கு எல்லைக்கு மேற்க்கும் புத்துர்க்கு போகிற விழிக்கும் உபரி ஆற்றிக்கு பாசாரு கூடின மாகண்டுகு பொ.
13.கிழக்கும் தெற்கும் வடக்கும் தட்டபாறைக்கும் பழந்தேவதான்க்கு தெற்கும் ஆக இப்பெரு நான்கெல்லை
14.குட்பட்ட நத்தமும் நத்தபாழும் புன்செய்யும் ஊருணி உடை குளங்களும் தோட்டக்கூற்ற
15. ரும் பட்டடைக்குடிகளும் மற்றும் ஏற்பவனகரங்களும் உபாதிகளும் சிலவதி பெருவார்களும் உட்
16.பட முன்னர் 592 வது நாள் முதலாக வீட்டு வரியிலார் கணக்கிலும் கழித்து சந்திராதித்தவரை
17.கை ஆளும்படி கல் வெட்டி குடுத்தமைக்கு இற்றும் மஞ்செ உடையான் எழுத்து இவை காமனாக்கன் எழுத்து”
எனப் பொறிக்கப்பட்டுள்ளது. “இந்தக் கல்வெட்டு 400 ஆண்டுகளுக்கு முன் முள்ளி நாடு மதுத குறிச்சியை ஆண்ட மன்னன் அதிவீர இராம பாண்டியன் நிறுவியது” எனக் கண்டறியப்பட்டது;
இந்த மன்னன் தானமாகக் கொடுத்த இடத்தின் நான்கு திசையின் எல்லையையும் தெளிவாக இந்தக் கல்வெட்டு விளக்குகிறது. வடக்கே மத்தம்பாறைக்கும் உபரி ஆற்றங்கரைக்கும் மேற்கும், அழகியான் குளத்தின் சமஸ்கிருத எல்லைக் கல்லுக்கும் மெழுகு பாறைக்குத் தெற்கும், பச்சை ஆற்றுக்கு வடக்கும், இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட நன்செய் காடு மேடு ஓடை மற்றும் கோட்டை திடல்களும், வாழ்விடங்களும் தானமாகக் கொடுக்கப்பட்டதை இந்தக் கல்வெட்டு விளக்குகிறது.
மேலும் “தென்பார் நாட்டுத் திருக்குற்றாலத்து உடையார் திருக்குற்றத்தைச் சார்ந்த கோயில் தானத்தாருக்கு அமுது படி சாத்துப் படியாக இந்த இடத்தைத் தானமாகப் பெற்றுள்ளார்” என இந்த கல்வெட்டு கூறுகின்றது.
‘இந்த நிலத்திற்கு எந்த வரியும் வசூலிக்கக் கூடாது என்றும் இந்தக் கல்வெட்டு விளக்குகிறது” எனப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.