மஞ்சுளா விஜயகுமார் (9 செப்டம்பர் 1953 – 23 சூலை 2013) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் விஜயகுமாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வனிதா, பிரீத்தா, சிறீதேவி என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மஞ்சுளா முதன் முதலில் 1969 ஆம் ஆண்டில் சாந்தி நிலையம் திரைப்படத்தில் ஒரு துணை நடிகையாக நடித்தார். 1971 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் உடன் இணைந்து ரிக்சாக்காரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். 1970களில் தமிழ் திரையில் அன்றைய முன்னணி நடிகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகுமார் எனப் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1980களின் இறுதியில் இருந்து துணை நடிகையாகப் பல படங்களில் நடித்தார்.


