தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியமான திட்டங்கள் குறித்து கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பாக பி.எம்.கிசான் திட்டம், பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையின் மூலம் E-NAM திட்டம், உழவர் சந்தை, விலை ஆதரவுத் திட்டம் (உளுந்து மற்றும் தென்னை), வேளாண் பொறியியல்துறை மூலம் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திரமாக்கல் திட்டம், முதலமைச்சரின் சூரிய ஒளி பம்ப் செட் திட்டம், நபார்டு மூலம் செயல்படுத்தப்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் ஆகியவை மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகள் e-KYC விவரங்களை பதிவேற்றம் செய்யாத விவசாயிகளை கிராம அளவில் முகாம் நடத்தி e-KYC விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தினார். கிராம அளவில் உழவர் கடன் அட்டை (Kisan Credit Card) பெறாத விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்பங்களை பெற்று வங்கிகளிடம் ஒப்படைத்து வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வேளாண்மை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
GRAINS வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாத தகுதி உள்ள விவசாயிகளை பி.எம்.கிசான் திட்டத்தில் சேர்க்க வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை இணைந்து கிராம அளவில் முகாம் நடத்தி பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தினார்.
E-NAM திட்டத்தின் மூலம் விவசாயிகள் விவசாய பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்வதை ஊக்கப்படுத்த விற்பனை குழு செயலர் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்களுடன் இணைந்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். விவசாயிகளுக்கு உரிய பருவத்தில் விதைகள் மற்றும் உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒருங்கிணைந்த பண்ணையத்தை திட்ட வழிமுறைகளின்படி செயல்படுத்தி வெற்றிக்கதைகள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ATMA ) யின் கீழ் ஆட்சி மன்ற குழுக்கூட்டம் நடத்தப்பட்டு திட்ட செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் மற்றும் மாவட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் முறையாக நடைபெறுவது மற்றும் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் திட்டமிடப்படுகிறதா என்பன குறித்து கேட்டறிந்து உறுதி செய்து கொண்டார்.
பயிற்சிகள் மற்றும் சுற்றுலாக்களின் போது பனை, வாழை, சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் வழங்கிடவும் மாவட்டத்தில் செயல்படும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக செயல்பட மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டது. நீர்வடிப்பகுதி திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. நிர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நீர்வடிப்பகுதி குழு தலைவர் / பஞ்சாயத்து தலைவர்கள் மூலமாகவே செயல்படுத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பாலசுப்பிரமணியன், வேளாண்மை துணை இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின் ராணி, தோட்டக்கலை துணை இயக்குநர், சுந்தர்ராஜன், வேளாண்மை பொறிறியியல் துறை செயற்பொறியாளர், கிளாட்வின் இஸ்ரேல், வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) சாந்திராணி மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) மனோரஞ்சிதம், துணை ஆட்சியர் (பயிற்சி) பிரபு, நபார்டு உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


