தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவியருக்குக் கல்வி உபகரணங்களை வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மேலூர் மாநகராட்சித் தொடக்கப்பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 40 மாணவ மாணவியருக்கு, இளையவேந்தன் இளைஞர் அறக்கட்டளை மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிப் பைகள் மற்றும் தண்ணீர் புட்டிகளை வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வேல்ராஜ் முன்னின்று வழங்கினார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் பிரேமா ஆனந்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆய்வாளர் வேல்ராஜ் மாணவர்களின் வகுப்பறைக்கே நேரடியாகச் சென்று பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும், மாணவ மாணவியர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு சம்பந்தமாகவும் விழிப்புணர்வுச் சிற்றுரை வழங்கிக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் ஆய்வாளரின் கேள்விக்கு பயமின்றி மாணவ மாணவியர்கள் தைரியமாக பதில் அளித்தது சுவாரஸ்யமாக அமைந்தது. இந்நிகழ்வில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அந்தோணி மைக்கேல், ஆசிரியர்கள் மற்றும் இளையவேந்தன் இளைஞர் அறக்கட்டளை நிர்வாகி யோவான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


