இந்த பூமியில் மூன்றில் இரண்டு பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது எனவே உலகில் உள்ள மனிதர்கள் விலங்குகள் பூச்சி இனங்கள் எல்லாவற்றையும் விட மீன்களின் எண்ணிக்கை அதிகம்.
விதவிதமான ஆழ்கடல் மீன் வகைகளை அதே அனுபவத்துடன் பார்ப்பதற்கு வசதியாக ஒரு கண்காட்சி நெல்லையில் நடந்து வருகிறது.
கோடை விடுமுறை காலத்தில் குறி வைத்து பாளையங்கோட்டை காதுகேளாதார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆழ்கடல் மீன் குகை கண்காட்சிக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது .
பெரியவர்களுக்கு 70 சிறியவர்களுக்கு ஐம்பது என்று கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கண்காட்சியில் முகப்பு பகுதியில் 100 அடிக்கும் அதிகமான நீளத்தில் நீல வண்ணம் நிறைந்திருக்கும் படி மீன்களை கார்ட்டூன்களாக வரையப்பட்ட மிகப்பெரிய பேனர் வைக்கப்பட்டிருந்தது.
டிக்கெட் பெற்று நுழையும் போது விளம்பரதாரர்களின் விளம்பரங்களைத் தாண்டி உள்ளே செல்லும்போது இரு பக்கமும் தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்கள் விதவிதமாக கண்களை கவர்ந்தன.
அவற்றை ரசித்தபடியே செல்லும்போது ஆச்ச வடிவத்தில் வளைந்த கண்ணாடிகளை தலைக்கு மேல் செட்டப் செய்து வைத்து ஒரு குகை போன்ற தோற்றத்தில் ஆழ்கடலுக்குள் செல்வது போன்ற அமைப்பை உருவாக்கி இருந்தார்கள்
ஏறக்குறைய ஐம்பது மீட்டர் தூரம் இருக்கும் இந்த குகை வழி பாதையில் நம் தலைக்கு மேல் நீந்தி செல்லும் விதவிதமான மீன்களை பார்த்தபடி செல்வதே ஒரு பரவசமான அனுபவமாக இருந்தது.
குறிப்பிட்ட வகை மீன்களின் இனங்கள்
எல்லாம் ஒவ்வொரு குழுக்களாக
நீந்தி கொண்டிருந்தது பல மீன்கள் வளைந்த தொட்டிகளின் கீழ் ஓரத்தில் ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறதையும் காண முடிந்தது.
கண்காட்சி நடைபெற்ற பல நாட்கள் தாண்டி அதன் நிறைவு காலகட்டத்தில் சென்றிருந்ததால் தற்போது அதிக கூட்டம் இல்லாமல் நிதானமாகவும் எந்தவித நெருக்கடி இல்லாமலும் அனைத்து மீன் வகைகளையும் ரசிக்க முடிந்தது.
ஆழ் கடலுக்குள் சென்று விட்டு வெளியே வரும்போது வழக்கமான பத்து ரூபாய் பொருள்களும் பிளாஸ்டிக் விளையாட்டு சாதனங்களும் விற்கப்படும் கடைகள் அதிகமாக இருந்தன.
பணத்திற்கு வேட்டுவைக்கும் சில சூதாட்ட போட்டிகளுக்கான ஸ்டால்களும் இங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
அதாவது இரும்பு டேபிளின் மீது தனித்தனியாக இடைவெளி விட்டு வைக்கப்பட்ட பிஸ்கட் சோப்பு போன்ற பொருட்களின் மீது மூங்கில் வட்டுகளை தூக்கி எறிந்து அந்த பொருட்களை வென்றெடுக்கும் ஸ்டால் மற்றும் ஒரே பந்தில் ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை தள்ளிவிட்டு வெற்றி பெறுவது போன்ற ஸ்டால்கள் நான்கைந்து இடம் பிடித்திருந்தன.
பருப்பு இல்லாமல் சாம்பார் இல்லை என்பது போல் டெல்லி அப்பளம் இல்லாமல் பொருட்காட்சியா ..
என்ற குறையை தீர்க்கும் விதமாக அறுபது ரூபாய்க்கு அருமையான மிளகாய் பொடி தூவப்பட்ட டெல்லி அப்பளமும் மிளகாய் பஜ்ஜி மற்றும் ஐஸ்கிரீம் வகைகளும் ஆங்காங்கே கிடைத்துக் கொண்டிருந்தது.
ராட்டின வகைகளை பொறுத்தவரை நாங்கள் சென்றபோது கப்அன் சாசர் குதிரை ராட்டினம் என்று பல வகையான ராட்டினங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஜெயண்ட் வீல் எனப்படும் பிரமாண்டமான ராட்டினத்தில் கூட மக்கள் அதிகளவில் ஏற முன் வரவில்லை ஆனால் கொலம்பஸ் ராட்டினம் மட்டுமே பொதுமக்களின் வரவேற்புடன் தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருந்தது.
இதிலிருந்து தெரிந்து கொண்டது கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தாரா என்னவோ நம் மக்கள் கொலம்பஸ் ராட்டினத்தில் இருந்த நல்ல பொழுதுபோக்கை கண்டுபிடித்து விட்டார்கள்.
அடுத்ததாக குழந்தைகளை பயமுறுத்தும் பேய் வீடு மற்றும் 3டி கண்ணாடியுடன் டைனோசர் காட்சிகளை கண்டு கழிக்கும் அரங்கம்
என்ற அத்தனையும் வழக்கம்போல இடம் பெற்று இருந்தது.
இந்த கண்காட்சியை பொறுத்தவரை ஆழ்கடல் மீன்களை பார்வையிடுவதற்கு செய்து இருந்த ஏற்பாடு தான் மிகவும் சிறப்பானதாகவும் தனித்துவமாகவும் இருந்தது என்றால் மிகை அல்ல….


