தூத்துக்குடி அருகே பொட்டலூரணி கிராமத்தில் கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து உயிருக்குப் போராடிய கறவை பசு மாட்டினை, சிப்காட் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடிப் பத்திரமாக மீட்டனர்.
பொட்டலூரணி தெற்குத் தெருவில் வசித்து வருபவர் முத்துக்கிருஷ்ணன், பால் வியாபாரி. இவரது கறவை பசு மாடு அதே தெருவில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அங்குள்ள கழிவுநீர்த் தொட்டியின் மூடி திடீரென உடைந்ததால், பசு மாடு எதிர்பாராத விதமாக 10 அடி ஆழமுள்ள தொட்டிக்குள் விழுந்து உயிருக்குப் போராடியது.
பசுவின் உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன் அளித்த தகவலின் பேரில், சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் ஏட்டு யோகமணி சங்கர், மெக்கானிக் தவசி மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல், முத்து மாடசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மீட்புப் பணியின் போது, 10 அடி ஆழமுள்ள தொட்டியில் தீயணைப்பு ஊர்தியிலிருந்து தண்ணீரை நிரப்பி பசு மாட்டை மேலே மிதக்கச் செய்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார் மற்றும் சாமுவேல் ஆகியோர் உயிரைப் பணையம் வைத்துத் தொட்டிக்குள் இறங்கி, பசு மாட்டைக் கயிறுகளால் கட்டினர். அதனைத் தொடர்ந்து, ஏட்டு யோகமணி சங்கர், வீரர் முத்து மாடசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து கயிற்றை மேலே இழுத்து பசு மாட்டினைப் பத்திரமாக மீட்டனர்.
உயிருடன் மீட்கப்பட்ட பசு மாடு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினருக்குப் பெரும் ஒத்துழைப்பு வழங்கிய பொட்டலூரணி ஊர் மக்களுக்கு நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். தீயணைப்பு வீரர்களின் இந்தத் துரித நடவடிக்கையைப் பாராட்டி அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.


