மதுரை மேலூர் மாணவி கொலை சம்பவத்தை கண்டித்து வல்லநாட்டில் கடையடைப்பு. சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மதுரை மேலூரில் யோகலெட்சுமி என்ற மாணவி கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரியும், கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரியும், திருநெல்வேலி&தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் உள்ள வல்லநாட்டில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது.
இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பின்னர் வல்லநாடு பஜாரில் வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முக்குலத்தோர் பாதுகாப்பு இயக்கம் வழக்கறிஞர் பூல்பாண்டி தலைமை வகித்தார். டிடிவி தினகரன் பேரவை பூல்பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆறுமுககனி, பகவதி ரமேஷ், சிவகுமாரசுவாமி, கார்த்திக் தம்பான், தம்பான், சிதம்பரம், பரமசிவம், நங்கமுத்து, மாரியப்பன், கொம்பையா, கிருஷ்ணன், குருநாதன், கணேசன் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடிரென திருநெல்வேலி&தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.