108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதும், நவதிருப்பதி கோயில்களில் 9வது ஸ்தலமாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் தரிசனமும், காலை 5.30 மணிக்கு திருமஞ்சனமும், காலை 6 மணிக்கு கொடிபட்டம் திருவீதி உலா வந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவிழா நாட்களில் தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி பொலிந்துநின்றபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வீதிப் புறப்பாடு நடைபெறுகிறது. வருகின்ற 13 ஆம் கருடசேவை நடைபெறுகிறது. கருட வாகனத்தில் பொலிந்துநின்றபிரானும், ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 17 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அஜித் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர். விழாவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


