திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக விளங்கி வருவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலாகும். கடலுக்கு மிக அருகில் கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் இக்கோயிலில் சமீபத்தில் தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை உத்திர வருஷாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. அதற்குப் பிறகு 8.30 மணிக்கு மூலவர், சண்முகப் பெருமான், தெய்வானை, வள்ளி மற்றும் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சி கால பூஜை அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


