கயத்தாறு வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் நேற்று வாரச்சந்தை கூடியது. இங்கு முதல்நாள் இரவு முதல் சுற்றுவட்டாரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வாகனங்கள் ஏற்றி விற்பனைக்காக குவித்திருந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆடு விற்பனை தொடங்கியது. ஆடுகளை வாங்குவதற்காக தென்காசி தூத்துக்குடி, விருதுநகர் நாகர்கோவில், சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் முதல்நாள் இரவிலேயே வந்து முகாமிட்டு இருந்தனர்.
நேற்று அதிகாலை முதல் சந்தையில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். காலை 10 மணிக்கு சந்தைக்கு கொண்ட வரப்பட்ட அனைத்து ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இந்த வகையில் நேற்று ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. வழக்கமாக வாரச்சந்தையில் சுமார் சில லட்சம் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாவது வாடிக்கை. அடுத்தவாரம் பொங்கல் பண்டிகை வருவதால், முன்கூட்டியே வியாபாரிகள் சந்தைக்கு வந்து ஆடுகளை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது.


