தூத்துக்குடியில், தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நாளை (ஜன.10) சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மீன்பிடி மற்றும் அதைச் சார்ந்த தொழில்களை மேற்கொண்டு வரும் 18- 60 வயது வரை உள்ள மீனவ மக்கள் தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய, தமிழ்நாடு மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஏற்பாட்டில் சிறப்பு முகாம்கள் தூத்துக்குடியில் சனிக்கிழமை (ஜன.10) காலை 9 மணிக்கு திரேஸ்புரம் பகுதியிலும், காலை 10 மணிக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலும், காலை 11 மணிக்கு பாத்திமா நகர் ஆலய வளாகத்திலும் நடைபெற உள்ளது.
இம்முகாம்கள் எனது தலைமையில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடைத்துறை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர செயலர் ஆனந்தசேகரன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
முகாம்களில் பதிவு செய்வதற்கு, புகைப்படம், குடும்ப அட்டை , ஆதார் அட்டை நகல்கள், வாக்காளர் அடையாள அட்டை, வாரிசுதாரர்களின் ஆதார் அட்டை நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


