காலை விடிந்தது.
ஊர் மக்கள் அனைவரும் சுறுசுறுப்பாக எழுந்தனர்.
காளியும், செல்வியும் அசதியில் அதிக நேரம் தூங்கி விட்டனர். எனவே இவர்களை முந்தி சூரிய ஒளி கூரை வழியாக வந்து இருவர் முகத்திலும் அடித்தது.
எனவே செல்வி எழுந்தாள்.
கதவை திறந்தாள்.
வேகமாக வீட்டை பெருக்கினாள். அதன் பின் முற்றத்தினை தெளித்தாள். கொட்டாவியுடன் எழுந்தான் காளி. குளிக்க செல்லவேண்டும் என துண்டை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு கிளம்பினான்.
அந்த சமயத்தில் தான் மாரியப்பன் வந்தான்.
“காளி கொஞ்சம் உள்ள வா உங்கிட்டேயும் செல்விகிட்டேயும் பேசனும்”.
காளிக்கு எரிச்சலாக இருந்தது. காலையிலேயே இவன் முகத்தில் முழிக்க வேண்டியது இருக்கே என நினைத்தான்.
“வேண்டாமுடே. உன் வேலையை நீ பாரு. என் வேலையை நான் பாக்கிறேன். எங்கிட்ட பேசவேண்முடே. நீ போ”.
“இல்லைடே. நீ என்னை தப்பா நினைக்க. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்”.
செல்வி வாசலுக்கு வந்தாள்.
காளியை பார்த்தாள். “சரி உள்ளே கூப்பிடுங்க. அவன் என்ன தான் சொல்லுதான் கேட்போம்”.
இருவரும் உள்ளே வந்தார்கள்.
மாரியப்பன் பேச ஆரம்பித்தான். அதற்கு முன்பு வீட்டை மேலும் கீழும் பார்த்தான். “இரண்டு பேரும் ஊரு ஊரு தாமிரபரணி ஆறுன்னு அலைகீறீங்க. ஆனா நீங்க இருக்க வீடு என்ன லட்சணமா இருக்கு”.
பெரும் மூச்சு விட்டான்.
“அது இருக்கட்டும். நீ என்ன சொல்ல வாறே”. காளி கோபமாகவே கேட்டான்.
“சொல்ல என்ன இருக்கு. எல்லோரும் எனக்கு நல்ல வழியை காட்டிட்டாங்க. நானும் அதுதான் சரின்னு ஏத்துக்கிட்டேன்”.
“அப்போ பீயை தின்னுட்டேன்னு சொல்லு”.
காட்டாமா பேசி விட்டான் காளி.
“மாரியப்பன் ஏடே வாயை ரொம்ப நீட்டதா? நான் சொல்றதை கேளு”.
“என்னடே சொல்லப்போறே. நம்ம போராடி புரோஜனம் இல்லை. அவனுவ எப்படியும் மணல் அள்ளிருனுவானுவ. நாம பேசமாவ கை கட்டி வேடிக்கை பாப்போமுன்னு அவனுவகிட்ட காசை வாங்கிட்ட அப்படித்தானே”.
“ஏடே எனக்கு மட்டும் வாங்கலேடே. உனக்கு சேத்து த்தான் வாங்கியிருக்கேன்”.
“எனக்கு நீ ஏம்லே சேத்து வாங்கனும். நான் என்னை உன்னை மாதிர் பீ தின்னி பயலா?”
“ஏலேய் காளி வார்த்தையை அளந்து பேசு”.
“எங்கேடே அளந்து , அளவு இல்லாம பேச முடியும். வயிறு எரியுது டே. நாம என்ன பேசிக்கிட்டோம். நம்ம நதி நம்ம தாய் மாரி. அவ வயித்தை கிழிச்சி மாரி மணல் அள்ளுதானுவ. இன்னும் கொஞ்ச காலத்தில நதி வத்தி போவும். அதை தடுக்கணும். நம்ம முன்னோர்கள் நமக்கு விட்டுட்டு போனது இயற்கை. அந்த இயற்கையை நாம காப்பாத்தனுமுன்னு, அப்படி இப்படின்னு என்னெல்லாமே பேசுனீயல்லே. அப்போ எல்லாம் உனக்கு புரியலையோ?”
“இங்க பாரு நமக்கு இப்ப ஒரு சான்ஸ் கிடைச்சி இருக்கு. பயன்படுத்திட்டு தூர போவும்”.
“அப்படின்னா தாமிரபரணி எப்படியும் போகட்டுமா?”
“ஏடே தாமிரபரணிக்கு உசிரா இருக்கு. அவ வந்து கேட்கவா போறா?”.
“ஏன்டா கேட்க மாட்டா. அவளுக்கு உசிரு இருக்கு. இப்போ வெள்ளம் வந்திச்சே. அப்போ அவள் இடத்தில வீடு கட்டினவங்க எல்லாத்தையும் அவ வாயை பொளக்க வைக்கலையா? ஏலே அவளுக்கு உயிர் இருக்கு. அவ உயிர் போயிட்டா. உங்களுக்கு குடிக்க தண்ணி கிடைக்காது அதுகப்புறம். உங்க உயிரும் போயிடும்”. காளி மிக கோபமாக பேசினான்.
“இங்க பாரு சிவாஜி கணேசன் மாரி வசனம் பேசாத. என் கூட சேர்ந்துக்க. உனக்கு தினமும் பணம் வர்ற மாதிரி நான் ஏற்பாடு பண்ணுதேன். நீயும் உன்பெண்டாட்டியும் சந்தோசமாக வாழுங்க. அதை விட்டுட்டு வீர வசனம் பேசினா .அப்புறம் சோத்துக்கு புறங்கையை தான் நக்கணும்”.
“ஏலே அதாவது சோத்துக்கு நாங்க சாவேமுன்னு சொல்லுத”.
“ஏடே நீ என்ன நான் என்ன சொன்னாலும் ஏறுக்கு மாறு பேசுற. நாம நதியை காப்பாத்துனுடே. இப்போ மணல் அள்ளுதவங்க கூட சமரசமா போவும். எம்.எல்.ஏ கிட்ட அவுக என்னை கூட்டிட்டுபோவவ. நாம் அதுக்கப்புறம் நதியை காப்பாத்த என்ன என்ன திடடம் உண்டோ அதையெல்லாம் சட்ட மன்றத்தில நிறைவேற்ற சொல்லுவோம்”.
“தங்க ஊசி கிடக்குன்னு இரண்டு கண்ணையும் குத்திட்டு குருடாக முடியுமாடே?”
“புரியலை”.
“தாமிரபரணி மண்ணை கொடுத்துட்டு, நீர் வர்ற வழியை அழிச்சிட்டு நாம எங்கே போய் யாருக்கிட்ட ஞாயம் கேட்க முடியும். அதுதான் காசை வாங்கி ஜோலியை முடிச்சிட்டியே. போ. போய் நடக்க வேண்டிய வேலையைபாரு. நாங்க முடிஞ்சா எங்க நதியை காப்பாத்த எதுவும் வழி இருக்கான்னு பாக்கிறோம்”.
யோசித்தான். மாரியப்பன். “இங்க பாரு செல்வி இவன் தான் ஏதோ கூறுகெட்ட தானமா பேசுதான். நீயும் இருக்க. இந்த ஊருல மத்த பெண்களும் இருக்காளுவ. கோயில் கொடை அது இதுன்னு வந்தா பாத்தியா எவ்வளவு நகை நட்டை அள்ளிப் போட்டுட்டு வாறாளுவ. நீ மட்டும் என் ஒண்ணும் இல்லாதவளா? உனக்கு நல்லவாய்ப்பு நகை கிடைக்கும் பணம் கிடைக்கும். உன் புருசன் கிட்டே சொல்லு”.
“இங்க பாரு மாரியப்பா. அவளாவது இவ்வளவு பேசியிருக்காரு. நான் உன்னை வாரியளாள சாத்தி புடுவேன்”.
மாரியப்பன் அதிர்ந்தான்.
“சானியை கரைச்சு தலையில ஊத்தி உன்னை மாத்தால சாத்துறதுக்குள்ள ஓடி போயிரு”.
அவளிடம் இருந்து இப்படியொரு எதிர்ப்பு வரும் என அவன் எதிர்பார்க்கவில்லை.
“உன் மானத்தை கப்பலுல ஏத்துறதுக்குள்ள ஓடிப்போயிரு”.
மாரியப்பன் அவர்களை முறைத்து பார்த்தான்.
“இங்க பாருங்க. உங்களை நல்ல வழியில கொண்டு போய் என்னை மாதிரி நீங்களும் வசதியா வாழனுமுன்னு ஏற்பாடு செய்ய முயற்சி செய்தேன். ஆனா நீங்க வீர வசனம் பேசுறீய. பராவயில்லை. ஆனால இவ்வளவு எதிர்புல இருக்கிற உங்களை நான் அப்படியே விட முடியாது. அடி பட்ட பாம்பு கடிக்காம விடாதுன்னு சொல்லுவாங்க. அதுபோலத்தான் அடிச்சிட்டு விட்டா. நீங்க ரெண்டு பேரும் என்னை கடிக்காம விட மாட்டீங்க. அதனால உங்க ரெண்டு பேரு பல்லையும் புடுங்காம விட மாட்டேன்”.
வெளியே வந்தான்.
செல்வியும் காளியும் கொதித்து போனார்கள். எவ்வளவு பெரிய தப்பு. நம்ப வச்சி நம்மளை ஏமாத்தியிருக்கான். அதுமட்டுமா? எவ்வளவு பெரிய மோசடி. பணத்துக்காக இப்படி மாறிபோயிட்டானே. இவனை சும்மாவிடக்கூடாது என கொந்தளித்தனர்.
செல்வி சீக்கிரம் கிளம்பு. நாம தாத்தாவை போய் பார்க்கணும். உடனே வேறு வக்கீலை பிடிச்சி கேஸை நடத்தணும்.
சரி காலை சாப்பாடு கூட எங்கேயாவது சாப்பிட்டுகிடலாம். கிளம்பு என இருவரும் அவசர அவசர மாக கிளம்பினார்கள்.
வாசலில் வரும் போது,
ஊரே கூடி நின்றது.
“என்ன பெண்டாட்டியும் புருசனும் எங்கே கிளம்பிட்டீங்க”. நாட்டாமை கேட்டார்.
“டவு-ணுக்கு”.
“என்ன அடிச்சு வச்ச பணத்தை பேங்கில போடவா?”
“என்ன நாட்டாமை பேசுதீய”.
“பொறவு. நல்ல பிள்ளையா நடிக்கீறியா. மதுரைக்கு போனீயே. தாமிரபரணி பேரை சொல்லி எவ்வளவு காசு வாங்கிட்டு வந்த”.
“என்ன நாட்டாமை சொல்லுதீய”.
“ஆமாம். எங்களுக்கு எல்லாமே தெரியும். நீ காசு வாங்கினதும் தெரியும். தாமிரபரணி வழக்கை வாபஸ் வாங்கினதும் தெரியும். பெரிய தொகை கிடைச்சவுடனே மாரியப்பனை கழற்றி விட்டுட்டு, இரண்டு பேரும் டவுணுக்கு ஓடுதீய. அப்படித்தானே”.
தூரத்தில் மாரியப்பன் வந்து நின்றான்.
காளிக்கும் செல்விக்கும் புரிந்து விட்டது. மாரியப்பன் அப்படியே எல்லாவற்றையும் மாற்றி பழியை நமது மீது போட்டு விட்டான். மீண்டும் நாட்டாமை மூலமாக நம் மீது ஒரு குற்றசாட்டு. சேய். செய்யாத குற்றத்துக்காக மேலும் ஒரு குற்றச்சாட்டு.
“நாட்டாமை. நான் காசு வாங்குனேன்னு நிரூபிக்க முடியுமா?”
மாரியப்பன் உள்ளே வந்தான். “ஏன் முடியாது. அவன் வீட்டுக்குள்ள தேடி பாருங்க. பொட்டி நிறைய பணம் இருக்கும்”.
“ம். கூம். பணம். அதுவும் என் வீட்டுக்குள்ள. நாட்டாமை யாரை வேணுமுனாலும் போய் உள்ளே தேடி பார்க்கச்சொல்லுங்க”.
காளி சொன்னான்.
செல்விக்கு அழுகை வருவது மாதிரி இருந்தது. சரி தேடி பார்க்கட்டும். நம்மிடம் எங்கே காசு இருக்கிறது. சரி தேடி பார்க்கட்டும் என்று விட்டார்கள்.
மாரியப்பனும் இரண்டுபேரும் வீட்டுக்குள் ஓடிச்சென்றார்கள். அந்த வீட்டுக்குள் தேடி பார்த்து. ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு வந்தனர்.
காளிக்கும் செல்விக்கும் ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு பெட்டி நமது வீட்டிலா? எப்போது வந்தது? யார் கொண்டு வைத்தார்? பல கேள்விகள் எழும்பியது.
ஆனால் சொல்ல இயலாது. நாட்டாமை தீர்ப்பு வழங்க தயாராக இருந்தார்.
“எப்பா அந்த பெட்டி பூட்டை உடைங்க”.
மாரியப்பன் தான் ஒரு சுத்திலை எடுத்து உடைத்தான்.
உள்ளே திறந்தான். கட்டு கட்டாக பணம் இருந்தது.
இருவரும் அதிர்ந்தனர்.
“என்ன செல்வி, என்ன காளி. இந்த பணம் உங்க வீட்டுக்கு எப்படி வந்தது”.
“தெரியலையே அய்யா”.
“ஆமாம் இவங்களுக்கு தெரியாம கூரை வழியா யாரோ கொண்டு போட்டுட்டு போயிருக்காங்க. நல்லா இருக்கு நியாயம். இவங்க மதுரையில காசை வாங்கினதை என் வக்கீல் பார்த்து சொல்லிட்டாரு”.
செல்வி “மாரியப்பா?”.
“என்ன மாரியப்பா”. அவளை பேச விடாமல் தடுத்தார் நாட்டாமை .
“சரி ராத்திரி கேட்க வேண்டாம். காலையில போயி கேட்போமுன்னு இன்னைக்கு காலையில வந்து கேட்டேன். என்னை கண்டபடி திட்டுறாங்க இரண்டு பேரும். ஊருக்கு போராடுதேன். ஆத்தை காப்பாத்துதேன்னு சொல்லி கடைசியில இரண்டு பேரும் பெரிய தொகைக்கு அடி போட்டுடாங்க”.
செல்வி அழுதாள். “மாரியப்பா நீ நல்லாவே இருக்க மாட்டே நாசமாக போயிருவ. உண்மையை சொல்லு . என் புருசனாக காசு வாங்கினான்”.
“பொறவு நானா. இங்க பாரு உன் புருசன் யோக்கியமுன்னா என்னையும கூட்டிட்டுல்லா மதுரைக்கு போயிருக்கனும். தனியா ஏன் போனும்”.
காளி சொன்னான். “செல்வி பேசவேண்டாம். நம்ம மேல நல்லா வலையை விரிச்சிட்டான். இனிமே நாம தப்பிக்க முடியாது. இந்த நாட்டாமைக்கிட்ட நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்குமுன்னு நாம நினைக்க முடியாது. என்னைக்கு இவங்க நல்ல தீர்ப்பு தந்திருக்காங்க. பைசா இருக்க பக்கம்தான் பேசுவாங்க”.
“ஆமாண்டே நாங்க பைசா இருக்க இடத்தை பாத்துதான் பேசுவோம். நீர் யோக்கியரு. கட்டு கட்டா கிடைச்ச பணத்தை ஒவ்வொருத்தருக் கிட்டேயும் பிரிச்சி கொடுத்துட்டே. நல்லா இருக்குடே உங்க கதை”.
நாட்டாமைக்கு மேலும் கோபம் வந்தது.
“அந்த பணத்தை எல்லாத்தையும் ஊர் கணக்குல வரவு வையுங்கடே. இவுகளை இப்படியே விடக்கூடாது. ஏதாவது தண்டனை கொடுக்கணும்”. நாட்டாமை யோசித்தார்.
காளிக்கு கோபம் வந்தது. “நாட்டாமை நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லது இல்லை. நாங்க குற்றவாளியும் இல்லை. மோசமானவங்களும் கிடையாது. எங்களை நீங்க தண்டனை கொடுக்கணுமுன்னு சொல்றது சரியில்லை”.
“ஆமாம் இவரு பெரிய யோக்கியரு”. மாரியப்பன் ஓடி வந்து காளியை தாக்கினான்.
செல்வி அதை தடுக்க உள்ளே பாய அவன் காலால் எட்டி அவள் வயிற்றில் மிதிக்கிறான். செல்வி “அம்மா” என அலறிய படி போய் அருகில் உள்ள கல்லில் முடடி விழுகிறாள்.
காளி கோபமாக எழுந்தான். மாரியப்பனை அடித்து துரத்தினான். அவன் விட்டால் போதும் என அங்கிருந்து ஓடிபோய் விட்டான். நாட்டாமை அங்கிருந்து சூட்கேஸை பணத்துடன் எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினார். அங்கிருந்த எல்லோரும் அங்காங்கே ஓட. ரத்த வெள்ளத்தில் கிடந்தாள், செல்வி.
அவளை மடியில் போட்டுக்கொண்டு அலறினான் காளி.
மறுநிமிடம் அருகில் நின்ற டிராக்டர் ஒன்றை ஒருவர் கொண்டு வர அதில் அவளை தூக்கி போட்டுக்கொண்டு பக்கத்தில் உள் ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்கள்.
அங்கே டாக்டர்கள் பரபரப்பானார்கள்.
காளி அனாதையாக நின்று கொண்டிருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாக மூர்ச்சை நிலைக்கு சென்றாள் செல்வி.
டாக்டர் சொன்னார். “இங்கே பாருங்க ரத்தம் நிறைய போயிருக்கு. ரத்தம் கொடுக்கணும்.இல்லாட்டி பேசண்டை உயிரோட பார்க்க முடியாது”.
அழுது கொண்டே “நான் கொடுக்கிறேன் டாக்டர். எப்படியாவது என் மனைவியை காப்பாத்துங்க”.
தாத்தா குலசேகரன் ஓடியே வந்தார். காளியை கட்டி தழுவிக்கொண்டார். “இருடா நமக்கு தெரிஞ்ச முஸ்லிம் பசங்க நிறைய பேரு ரத்தம் கொடுப்பாங்க. அவ்வளவு பேரையும் கூப்பிட்டுருவோம். நீ கவலைபடாதே. நீ போய் செல்வி கூட இரு. நான் அவ்வளவு பேரையும் கூட்டிட்டு வாரேன்” என்றார்.
தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்வியை கொண்டு சென்றார்கள். இவனை உள்ளே விட வில்லை . வாசலில் நின்று அங்கிருந்த கதவில் முட்டி முட்டி அழுதான். ஆறுதல் கூட சொல்ல யாரிமில்லை.
செல்வியை காப்பாற்ற முடியுமா? எவ்வளவு ரத்தம் போய் விட்டது. இனிமேல் என் செல்வி எனக்கு உயிரோடு கிடைப்பாளா?
“ஆண்டவனே. தாமிரபரணி தாயே. உன்னை தெய்வமாக நினைக்கிறேன். நீ எப்படியாவது செல்வியை காப்பாற்று” என கதறினான்.
தாத்தா அதற்குள் ரத்தம் கொடுக்க நாலைந்து இளைஞர்களை கூட்டிக்கொண்டு வந்தார்.
அனைவரும் பெயரை கொடுத்தார்கள்.
உடனே செல்விக்கு சிகிச்சை ஆரம்பமானது. ஆனால் விதி யாரை விட்டது.
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


