புராண, சரித்திரக் கதைகளிலிருந்து தமிழ் சினிமா சமூக, குடும்பக் கதைகளுக்கு மாறிய காலகட்டத்தில் திரையுலகில் நுழைந்து, கதை, நடிப்பு என இரு தளங்களிலும் அறிவாற்றலுடன் செயல்பட்டுப் புகழ் பெற்றவர்களுள் ஜாவர் சீதாராமனும் ஒருவர்.
சொந்த ஊர் திருச்சி; இயற்பெயர் சீதாராமன். தந்தை நடேசன் , பிரபல வழக்குரைஞராக இருந்தவர். தந்தையாரின் விருப்பப்படி சீதாராமன் எம்.ஏ., பி.எல்., படித்தார். ஆனால், வழக்குரைஞர் ஆகாமல் கலைஞனாகத் தடம்பதிக்க திரையுலகில் அடியெடுத்து வைத்தார். “மிஸ் மாலினி’ என்னும் படத்தில் ஒரு வேடமேற்று முதன் முறையாக அறி
முகமானார்.
“ஏழைபடும் பாடு’ எனும்”ஜாவர்’ என்கிற முரட்டுப் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்து , சீதாராமன், “ஜாவர்’ சீதாராமன் என்று பிரபலமானார்.
நடிகர்கள் சந்திரபாபுவும், ஸ்ரீராமும் ஜாவரின் நெருங்கிய நண்பர்கள். ஓய்வு நேரங்களில் நிறைய ஆங்கில நாவல்களைப் படிக்கும் பழக்கம் ஜாவர் சீதாராமனுக்கு உண்டு.
ஏ.வி.எம். தயாரித்த “அந்த நாள்’ படத்தின் திரைக்கதை-வசனத்தை எழுதியதோடு, துப்பறியும் இன்ஸ்பெக்டர் வேடத்தையும் ஜாவர் சீதாராமன் ஏற்றார். ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் முன்னால் ஜாவர் சீதாராமன் கதையை விவாதித்து விவரித்தபோது செட்டியார் பிரமித்துப்போனார். ஜாவரின் படைப்பாற்றலில் செட்டியாருக்கு நம்பிக்கை வளர்ந்ததால் கதையைப் பொறுத்தவரை ஜாவரின் கருத்துதான் இறுதியானது என்பது ஏ.வி.எம்.மின் முடிவானது.
ஏ.வி.எம். தயாரித்த “களத்தூர் கண்ணம்மா’, “குழந்தையும் தெய்வமும், “ராமு’ முதலிய படங்களுக்கு ஜாவர் சீதாராமன்தான் திரைக்கதை-வசனம் எழுதினார். அந்தப் படங்கள் மாபெரும் வெற்றியடைந்து,
ஏ.வி.எம். தவிர வெளி நிறுவனங்களும் ஜாவரை அணுக, “ஒரே வழி’ என்கிற படத்துக்கு ஜாவர் கதை-வசனம் எழுதி, படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பி.எஸ்.வீரப்பா தயாரித்த “ஆலயமணி’, “ஆண்டவன் கட்டளை’, “ஆனந்த ஜோதி’ ஆகிய படங்களுக்கும் ஜாவர்தான் திரைக்கதை வசனம் எழுதினார்.
வீரபாண்டிய கட்டபோம்மன் , கைதி கண்ணாயிரம் , படங்களில் இவர் ஏற்ற கதாபாத்திரங்கள் மறக்க முடியாதவை
வீனஸ் பிக்சர்ஸக்காக “பிராஸ் பாட்டில்’ என்கிற ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, “பட்டணத்தில் பூதம்’ என்ற கற்பனைக் கதையை ஜாவர் உருவாக்கினார். பூதம் பாத்திரத்தில் இவரே நடித்தார் .
சினிமாவில் வெற்றிபெற்ற ஜாவர் சீதாராமன், பிரபல வாரப் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதினார். குமுதத்தில் அவர் எழுதிய “மின்னல் மழை மோகினி’, “உடல் பொருள் ஆனந்தி’, “பணம் பெண் பாசம்’, “நானே நான்’ ஆகிய தொடர்கதைகள் வெகுஜன ரசனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
– நன்றி : தினமணி .


