‘தமிழ் இசைக்கருவிகள் தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டவை. அவை மூவகை என்று மேலே கண்டோம். ( முழவு, குழல், யாழ்).
அவற்றிற்குப் பெயரிடப்பட்ட தமிழ் மக்களும் தமிழுக்கே சிறப்பாக உள்ள ‘ழ’ என்ற எழுத்தை அச்சொல் ஒவ்வொன்றிலும் வைத்து
தோல் கருவிக்கு ‘முழவு ‘
என்றும்,
துளைக்கருவிக்கு ‘ குழல் ‘ என்றும்,
நரம்புக் கருவிக்கு ‘யாழ்’ என்றும் பெயரிட்டிருக்கின்றனர். இவை தமிழனால் கண்டுபிடிக்கப்பெற்றது…. ‘
‘முழவு:’
முழவு என்பது தோல் கருவிகளாகும்.
இவை
அகமுழவு,
அகப்புற முழவு,
புறமுழவு,
புறப்புறமுழவு,
பண்ணமை முழவு,
நாண் முழவு,
காலை முழவு என ஏழு வகைப்படும்.
(அ) அகமுழவு:
மத்தளம்,
சல்லிகை,
இடக்கை,
கரடிகை,
பேரிகை,
படாகம்,
குடமுழா என்பன.
(ஆ) அகப்புற முழவு:
தண்ணுமை,
தக்கை,
தகுணிச்சம் என்பன.
(இ) புறமுழவு:
கணப்பறை முதலிய.
(ஈ) புறப்புறமுழவு:
நெய்தல் பறை முதலியன.
( உ) பண்ணமை முழவு:
நிசாளம் ,
துடுமை,
முரசு,
திமிலை என நான்கு.
(ஊ) நாண் முழவு:
நாழிகைப்பறை.
( எ) காலை முழவு:
துடி என்றாகும்….
குழல் :-
இது
புல்லாங்குழல், வேய்ங்குழல், வங்கியம்,
வேணு எனப் பெயர் பெறும்.
இது மூங்கிலாலும், வெண்கலத்தாலும்,
சந்தனமரம்,
செங்காலிமரம்,
கருங்காலிமரம் ஆகிய மரங்களாலும் செய்யப்பெறும்.
இவற்றுள் மூங்கில் உயர்தரம்.
வெண்கலம் நடுத்தரம்.
மற்றவை கீழ்த்தரம் ஆகும்.
யாழ் :–
பேரியாழ்,
மகரயாழ்,
சகோடயாழ்,
செங்கோட்டியாழ்,
என நால்வகைப்படும்.
பேரியாழுக்கு நரம்பு 21,
மகரயாழுக்கு நரம்பு 19,
சகோடயாழுக்கு நரம்பு 14,
செங்கோட்டியாழுக்கு நரம்பு 7 .
இத்தகைய பாரம்பரியப் பெருமை வாய்ந்த கருவிகளோடு இசை நூல்களும் காணாமல் போயின!
அழிந்து போன இசைநூல்கள் என்று தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள் குறிப்பிடுபவை:
‘சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசை நுணுக்கம், இசை விளக்கம், பஞ்ச மரபு, பஞ்சமா பாரதீயம், பண் அமைதி, பண்வரி விளக்கம், பாட்டும் பண்ணும், இசைக் கூறு, பாடற் பண்பு, தாளவகையோத்து, தாள சமுத்திரம், கருவி இலக்கணம், ஆளத்தி அமைப்பு முதலியன.
அவையும் இன்று இருந்தால்……?
இதைப் படிக்கும் தமிழ் மக்கள் தமது முன்னோர்கள் துருவி ஆராய்ந்து கண்டுபிடித்து எடுத்து வகைப்படுத்தி, தொகைப்படுத்தி, முறைப்படுத்தி, பெயர்ப்படுத்தித் தந்துள்ள தமிழிசைச் செல்வத்தைக் கண்டு மகிழ்ந்து அவர்கட்குக் கலை வணக்கமும், தலைவணக்கமும் செய்தாக வேண்டும்… ‘
என்ற வேண்டுகோளுடன் முடிக்கிறார் கி. ஆ. பெ. அவர்கள்!
அழிந்து போன நூல்களைக் குறித்து அவர் வருந்தி எழுதுவது நம்மையும் வருந்த வைக்கிறது:
‘…அவற்றில் என்னென்ன செல்வங்கள் இருந்தனவோ?
அதன் ஆசிரியர் எவரெவரோ?
அவை தோன்றிய காலம் எதெதுவோ?
அவை போன்ற நூல்கள் இன்னும் என்னென்னவோ?
அவை அழிந்தது எப்படியோ?
யார் காண்பது?
எவரால் அறிய முடியும்?
மேலே கண்ட நூல்கள் இருந்து அழிந்தன என்பதைச் சில நூல்களில் காணப்படும் உரைகளால் , உரைகளில் காணப்படும் மேற்கோள்களால் அறிய முடிகிறது…. ‘
— ‘ தமிழின் சிறப்பு ‘
இந்த நூல்களில் பலவும் ஈராயிரம் ஆண்டுத் தொன்மை வாய்ந்தவை என்பதை நாம் உணர வேண்டும்.
இவற்றின் சிறப்பை மேலும் அறிய வேண்டுமானால் சிலப்பதிகாரத்தின் மூன்றாம் காதையான அரங்கேற்று காதையையும் அதற்கான ந. மு. வெங்கடசாமி நாட்டார் உரையையும், அடியார்க்கு நல்லார் உரையை அவர் மேற்கோள் காட்டிச் செல்வதையும் வாசிக்க வேண்டும்.
நமது குளித்தலை தனராஜு சுவாமிநாதன் பண்டைய வாத்தியக்கருவிகள் சிலவற்றை நமக்கு ஓவியங்களாகத் தந்திருக்கிறார்.
ஒவ்வொரு கருவியின் தன்மையையும் சிறப்பையும் தயாரிக்கும் முறையையும் வேறொருவர் விளக்கிச் சொல்ல அந்த ஓவியங்களை வரைந்திருக்கிறார்.
ஈண்டு அவற்றின் பெயரை மட்டுமே அடியேன் குறிப்பிட்டிருக்கிறேன் – கட்டுரை நீண்டு விரிவதைத் தவிர்க்கும் பொருட்டு.
ஓவியர் தனராஜு அவர்களுக்கு நன்றி.


