மேல முன்னீர்பள்ளம் பாண்டிய ராஜா கோயில் குறித்து தகவல்களை திரட்ட சென்று இருந்தேன். முதல் தடவை சென்ற போது போதிய தகவல் கிடைக்க வில்லை. அதன் பிறகு நண்பர் கால்வாய் சிவா மூலமாக கோயிலின் பூசாரி முத்தையா பிள்ளையை சந்திக்க போன் நம்பர் கிடைத்தது.
எனவே அவரிடம் எப்போது வரலாம் என கேட்ட போது அவர் 5.10.2023 அன்று வரலாம் என தகவல் கொடுத்தார். இதற்காக நான் நான் கிளம்பினேன். என்னுடன் செய்துங்க நல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், வியா பாரிகள் சங்க தலைவர் ஐயப்பன், எனது சிஷ்யன் சுடலைமணிச் செல்வன் ஆகியோர் வந்தனர். எங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும் செய்கிறேன் என பஞ்சாயத்து தலைவர் வெங்கடேஷ் உறுதியளித்திருந்தார். எனவே மேல முன்னீர்பள்ளம் மீண்டும் சென்றேன்.
மேல முன்னீர்பள்ளம் சென்று முத்தையா பிள்ளையிடம் போன் பேசிய போது, “நான் வீட்டில் தான் இருக்கிறேன் வீட்டுக்கே வாருங்கள்” என்றார். எனவே அவர் வீட்டை நோக்கி எங்களது கார் சென்றது.
சரியாக பாண்டியராஜ சுவாமி கோயில் தெருவுக்கு சென்றோம். அங்கு முத்தையா பிள்ளை எங்களை வீட்டுக்கு வெளியே வந்து வரவேற்றார்.
அவருக்கு குறைந்தது 70 வயது இருக்கும். அவர் தான் 5 வது தலைமுறையாக இந்த கோயில் பூசாரி மற்றும் பரம்பரை அறங்காவலர். ஆகவே அவரிடம் வரலாறு கேட்பது தான்பொறுத்தமாக இருக்கும் என நினைத்தேன். அவர் எங்களிடம் வரலாற்றை சொல்லும் போதே, அவரது மனைவி ருக்மணியும் வந்து வரலாற்றை கூற ஆரம்பித்தார்.
இருவரும் ஆர்வமாக சொல்லுவது எங்களுக்கு சந்தோசத் தினை தந்தது. அவர்கள் கூறிய வரலாற்றை உங்களுக்கும் கூறுகிறேன் கேளுங்கள்.
மேலமுன்னீர்பள்ளம் பாண்டிய ராஜா கோயில் இல்லத்து பிள்ளைமாருக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும்.
ஒரு காலத்தில் குன்னத்தூர் பொத்தையில் பாண்டிய ராஜா ஒருவர் வந்தார். பொன்னும் பொருளும் நிரம்ப வாழ்ந்து வந்த இவர் வேட்டைக்காக வரும் போது தனியாக குன்னத்தூர் பொத்தைக்கு வந்து சேர்ந்தார். அந்த சமயத்தில் 7 கள்ளவர்கள் அந்த இடத்துக்கு வந்தனர். ராஜாவுடைய வைர கிரிடம், மந்திரவாள் உள்பட அவரது பொருள்களை கொள்ளையிட்டு சென்று விடுகிறார்கள்.
இதனால் மனமுடைந்த ராஜா மிகவும் சோகமாக அமர்ந்து இருந்துள்ளார். அந்த நேரம் இல்லத்து பிள்ளை இனத்தினை சேர்ந்த பண்டாரம் ஒருவர் அங்கு வந்துள்ளார்.
“ராஜா ஏன் வருத்தமாக உள்ளீர்கள்” என கேட்டுள்ளார்.
அப்போது பாண்டிய ராஜா மனவருத்தத்தோடு தனது பொருள் களவு போன விவரத்தை கூறியுள்ளார்.
உடனே பண்டாரம், “ராஜா கவலை படாதீர்கள். நாங்கள் அந்த திருடர்களை கண்டு பிடித்து உங்கள் பொருள்களை மீட்டுத் தருகிறோம்” என்று கூறிவிட்டு, அங்கிருந்து வந்துள்ளார்.
மேலும் தங்களது தவ வலிமையால் திருடர்கள் வீட்டை கண்டு பிடித்து விட்டார்கள். அவர்களிடம் இருந்து பொருளை மீட்க வேண்டும்.
திருடர்களோ மோச மானவர்கள் . எனவே அவர்களிடம் நேரில் மோத முடியாது. அதுவும், அவர்கள் குடியிருப்பில் சென்று மோத இயலாது. எனவே அவர்களை திசை திருப்பி , அவர்கள் எல்லோரும் வெளியே சென்ற வேளையில் தான் பொருள்களை மீட்க வேண்டும். அதன்படி இவர்கள் திருட்டு பொருள் வைத்திருந்த வீட்டுக்கு சென்றார்கள். அங்கு பாட்டியை மட்டும் வைத்து விட்டு, திருடர்கள் வெளியே சென்று விட்டனர். அந்த வேளையில் பண்டாரம் பாட்டியிடம், “தாகமாக இருக்கிறது எங்களுக்கு குடிக்க தண்ணீர் தர வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்தனர்.
அந்த பாட்டி வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுக்க சென்ற போது ராஜாவிடம் களவாடப்பட்ட பொருள்களை எடுத்து அருகில் உள்ள முள்செடிகளில் போட்டு மறைத்து வைத்தார். அதன் பின் மறு நாள் அதை மீட்டுக் கொண்டு வந்த பாண்டிய ராஜாவிடம் கொடுத்தார்.
அகமகிழ்ந்து போனார் பாண்டிய ராஜா. “எனது பொருள்களை மீட்டுக் கொண்டு வந்து உள்ளீர்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் நான் தருகிறேன்” என்று ராஜா கூறியுள்ளார். “ராஜாவே கடைசி வரை எங்களது தலை முறை தலைமுறையாக உங்களை வணங்கி வரும் சக்தியை மட்டும் தரவேண்டும்” என்று கேட்டனர்.
உடனே பாண்டிய ராஜா இரண்டு எலும்மிச்சை கனியை எடுத்து வீசினார். அது ஆற்றுக்கு மறுகரையில் வந்து விழுந்தது. “ஒரிடத்தில் விழுந்த இடத்தில் உங்களுக்கு குடியிருப்புகளை உருவாக்கி கொள்ளுங்கள். மற்றொரு இடத்தில் நான் கார்த்திகை மாதம் 29 ந்தேதி உங்களுக்காக காட்சி கொடுப்பேன். அந்த வேளையில் என்னை வந்து தொழும் உங்கள் வாரிசுகளுக்கு வேண்டிய வரம் கொடுப்பேன்” என்று கூறினார்.
அதன்படி பாண்டிய ராஜாவை வணங்கி நின்றால், அவர்களுக்கு பொன்னும் பொருளும் கிடைத்து வளமுடன் வாழ ஆரம்பித்தனர். இல்லத்து பிள்ளைமார்களின் வாரிசுகளும் எங்கிருந் தாலும் . கார்த்திகை மாதம் 29 ந்தேதி இங்கு வந்து வணங்க ஆரம்பித்தனர். கார்த்திகை மாதம் 1 ந்தேதி காப்பு கட்டி, 29 ந்தேதி எந்த கிழமையாக இருந்தாலும் அன்று திருவிழா நடைபெறும். அந்த நேரத்தில் பாண்டிய ராஜாவுக்கு வைர கீரிடம் சூட்டி குதிரையில் வலம் வர வைத்து வணங்கி வருகிறார்கள். அவரோடு பெருமாளும், நாச்சியாரும் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். அன்று சிறப்பு அன்னதானமும் நடைபெறும். அதோடு மட்டுமல்லாமல் அந்த நாள்களில் இந்த சமுதாயத்தினர் சார்பில் சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டுவார்கள். மேல முன்னீர்பள்ளம் கிராமத்தில் திருவிழா காலம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்த கோயிலில் 65 வருடம் ஒரு சாமியாடியும், தொடர்ந்து 35 ஆண்டுகாலம் மற்றொரு சாமியாடியும் அருளாசி வழங்கியுள்ளார்கள். தற்போது சாமியாடி யாரும் இல்லை. 5 வது தலை முறையாக முத்தையா பிள்ளை மட்டுமே பரம்பரை அறங்காவலர் மற்றும் பூசாரியாக உள்ளார்.
இந்த கோயிலில் சிவராத்திரியில் 4 கால பூஜை நடைபெறும். தினமும் காலை 9 மணிமுதல் 10 மணிவரை நடைதிறந்திருக்கும்.
இழந்த பொருள்களை மீட்கவும், கடன் தீரவும், தொடர்ந்து வெற்றி மற்றும் அரசு வேலை கிடைக்கவும், பொன் பொருள் கிடைக்கவும், குழந்தைவரம் கிடைக்கவும் பாண்டியராஜாவை வணங்கி வருகிறார்கள்.
இவர்கள் குடியிருப்பில் இல்லத்து பிள்ளைகளுக்கான மண்டபம் அமைத்துள்ளார்கள். அங்கு விரதம் இருப்பார்கள். இந்த கோயில் பக்தர்கள் மதுரை, சென்னை, கோவில்பட்டி, ஊட்டி, தென்மலை, தூத்துக்குடி, நெய்வேலி, சிந்தாமணி, திருநெல்வேலி, ஆண்டிப்பட்டி, சிந்தாமணி, சொக்கம்பட்டி, கடையநல்லூர், திருப்பூர், திண்டுக்கல், பெங்களூர், சிவகாசி, ஊட்டி, கம்பம், கடையநல்லூர், புளியங்குடி, மூணாறு, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், எட்டையாபுரம், காரைக்குடி, பாண்டிச்சேரி, மலேசியா, கோவை துபாய்இ திருச்சி, புளியரை உள்பட உலகம் முழுவதும் சீரும் சிறப்புமாக உள்ளனர்.
(நதி வற்றாமல் ஓடும்)


