சாத்தான்குளம் அருகே அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக 4பேர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிந்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரில் புதிய மின் மாற்றி அமைப்பதற்காக மின் கம்பம் அமைத்து மின் பணிகள் நடந்து வந்தது. அப்போது வாலத்தூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மின் இணைப்பு கொடுக்காத மின் கம்பத்தில் ஏறி நின்று தனது பட்டா நிலத்தில் மின்கம்பம் நடப்பட்டுள்ளதாகக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இவருக்குத் தூண்டுதலாக அதே ஊரைச் சேர்ந்த வெற்றிவேல், மாயா, பாலகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.
தகவல் அறிந்து சாத்தான்குளம் மின்வாரிய உதவிப் பொறியாளர் சுஜா மற்றும் தட்டார்மடம் உதவி ஆய்வாளர்கள் நெல்சன், முரளிதரன், வருவாய் ஆய்வாளர் இசக்கியம்மாள், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ் ஆகியோர் வந்து பேச்சு வார்த்தை நடத்தி, மின் கம்பம் நட்ட இடத்தை அளவீடு செய்து பார்த்தனர். அதில் அரசுக்குப் பாத்தியப்பட்ட இடத்தில் மின் கம்பம் அமைக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மின் உதவிப் பொறியாளர் சுஜா தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் நெல்சன், அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்து இடையூறு செய்ததாகக் கூறி , சிவக்குமார், உள்ளிட்ட 4பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.


