வல்லநாடு அருகே நான்குவழிச்சாலையில் ஆம்னி வேனும் லோடு வேனும் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது நண்பர்கள் விக்கி, செல்டன், அஜீத், சாஹிர். இவர்கள் 5 பேரும் நேற்று மாலை ஆம்னி வேனில் குற்றாலத்திற்கு குளிக்க சென்று விட்டு இன்று வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
மாலை 3 மணி அளவில் திருநெல்வேலி தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் வல்லநாடு அருகே உள்ள பக்கப்பட்டி தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது எதிரே வந்த லோடு வேனும், ஆம்னி வேனும் பயங்கரமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ஆம்னி வேன் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்னி வேனில் வந்த தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த வாலிபர்களான சரத்குமார், விக்கி, செல்டன், அஜீத், சாஹிர் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். எதிரே வந்த பெரிய லோடு ஆட்டோ டிரைவர் மனோகரன் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து அறிந்தவுடன் உடனடியாக முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த 6 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் தில்லைநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


